போலிங்புரூக்: முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி
மே 24, 2015 அன்று, பவுண்டன்டேல் பொதுநூலக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நடைபெற்றது. இலங்கை உள்நாட்டுப் போரில் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும்வகையில் தமிழ்மக்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இங்கே குழுமினர். இந்த ஐந்தாமாண்டு நிகழ்ச்சியையும் இல்லினாய்ஸ் தமிழ் மனித உரிமைகள் குழு (ITHRG) ஏற்பாடு செய்தது. நிகழ்வு அமெரிக்க தேசிய கீதத்துடன் துவங்கியது. தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. உயிரிழந்தோருக்கு சிலநிமிடம் மௌன அஞ்சலியும் பின்னர் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டன.

பிரான்செஸ் ஹாரிசன் எழுதிய 'Still Counting the Dead' என்ற நூலை வாசித்து, 'புத்தகக்குழு' திட்டம் துவக்கப்பட்டது. மனித உரிமைமீறல்கள் பற்றிய அறிவை ஏற்படுத்தவும், இவற்றைத் தடுக்கச் சமூகத்தினர் விவாதிக்கவும், இலங்கை அரசுக்கு அரசியல் நிர்பந்தம் ஏற்படுத்தவும் இந்தப் புத்தகக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

திரு. தர்சிகா விக்னேசுவரன் நிகழ்வைச் சிறப்பாக நடத்தியதுடன் 'தமிழ் நினைவுநாள்' என்பதன் முக்கியத்துவத்தைப்பற்றிச் சொற்பொழிவு ஆற்றினார்.

திரு. மணிகண்டன் குணசேகரன் (மணி) 'முள்ளிவாய்க்கால் முற்றம்' படங்களைத் தொகுத்து வழங்கினார். இது 2013ம் ஆண்டு தஞ்சையில் அமைக்கப்பட்டது. மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுடன் ITHRG உலகின் பல பகுதிகளில் கலந்துரையாடல் செய்து வருகிறது.

திரு. சமீர் கால்ரா (Senior Director and Senior Human Rights Fellow of the Hindu American Foundation) அவர்களின் வீடியோ செய்தி ஒளிபரப்பப்பட்டது. திருமதி. சூ வஸ்தாலோ (President, Commissioners of Bolingbrook Park District) பேசும்பொழுது அங்குள்ள பூங்காவில் 'தமிழ் நினைவுநாள் மரம்' நடப்பட்டதை கௌரவமாக கருதுகிறோம் என்று கூறினார். திரு. ராஜா கிருஷ்ணமுர்த்தி (congressional candidate for district 8) பேசும்பொழுது மனித உரிமைகளை நிலைநாட்ட எடுத்துக்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.

பின்னர் முள்ளிவாய்க்கால் நினைவுமரம் நடப்பட்டுள்ள இடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தப்பட்டது.

மணி குணசேகரன்,
போலிங்ப்ரூக், இல்லினாய்ஸ்

© TamilOnline.com