ஆண்டுவிழா: ஹுஸ்டன் தமிழ்ப்பள்ளி
மே 30, 2015 அன்று ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ப்பள்ளி தனது ஆண்டுவிழாவை ஹூஸ்டன் மாநகர மேற்குப்பகுதி மேனிலைப்பள்ளியில் கொண்டாடியது. இப்பள்ளி, 350 மாணவர்களைக் கொண்டு, மாநகரத்தின் மிகப்பெரிய தமிழ்ப்பள்ளியாக இருக்கிறது. பியர்லேண்ட், கேட்டி, உட்லண்ட்ஸ், வெஸ்ட்ஹூஸ்டன் மற்றும் சுகர்லேண்ட் கிளைகளில் வகுப்புகளை நடத்திவருகிறது.

விழாவுக்கு முன்னூறுக்கு மேற்பட்ட மாணாக்கர்களும், ஐந்நூறுக்கு மேற்பட்ட பெற்றோர்களும், விருந்தினர்களும் வந்திருந்தனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது. அடுத்து பள்ளித்தலைவர் முனை. கோபாலகிருஷ்ணன் தலைமையேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து செயலாளர் திரு.ஜெகன் ஆண்டறிக்கை வாசிக்க, பள்ளி முதல்வர்கள் தத்தம் பள்ளி குறித்துச் சிற்றுரை ஆற்ற, பொருளாளர் திரு. வெங்கட் நிதிநிலை அறிக்கை தர, கலைநிகழ்ச்சிகளுக்கு ஆயத்தமானது.

இளநிலை முதல் நடுநிலை வரையிலான அனைத்து வகுப்புக் குழந்தைகள் அடுத்தடுத்து திருக்குறள், ஆத்திசூடி, பாரதியார் பாடல்கள், நடனம் (செம்மொழியாம் தமிழ்மொழி, கும்மி), பேச்சு (உடல் உறுப்புகள்), நாடகம் (மச்சான் பிடிச்ச கொழுக்கட்டை, மறைந்த தமிழகத்தலைவர்கள் இன்றுவந்தால், தங்கத் தமிழன்டா, ஐவகை நிலங்கள், குரு சிஷ்யன், காலச்சக்கரம்) எனச் சிறப்பாகத் தமது தமிழ்த்திறனை வெளிப்படுத்தினர். சிறப்பு விருந்தினராக டாலஸ் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை நிறுவனர்கள் திருமதி. விசாலாட்சி வேலு, திரு. வேலு ராமன் வருகை தந்து சிறப்புரை நிகழ்த்தினர். இணைச்செயலாளர் திரு. பாலா பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களை மேடைக்கு அழைக்க, சிறப்பு விருந்தினர்கள் கரத்தால் விருதுவழங்கிச் சிறப்பித்தனர்.

தமிழ்த்திறன் போட்டி, வகுப்புத்தேர்வுகளில் முதன்மை இடம்பெற்ற மாணாக்கர்களுக்குப் பரிசுகளை ஆசிரியர்கள் வழங்கினர். ஒருங்கிணைப்பாளர் திரு. ஜீவா வேலுமணி நன்றியுரையுடன் விழா நிறைவெய்தியது.

கரு. மணிவாசகம்,
ஹூஸ்டன், டெக்சஸ்.

© TamilOnline.com