ஆண்டுவிழா: குமாரசாமி தமிழ்ப்பள்ளி
ஜூன் 6, 2015 அன்று நியூ ஜெர்சி, செளத் ப்ரன்ஸ்விக்கில் உள்ள‌ குமாரசாமி தமிழ்ப்பள்ளியின் ‍முதல் ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது. முனை. கபிலன் வரவேற்புரை நிகழ்த்தினார். திரு. சக்தி அவர்கள், கோவை பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் ஆதினம், இளையபட்டம் தவத்திரு. மருதாசல அடிகளார் அனுப்பியிருந்த வாழ்த்துரையை வாசித்தார். திரு. பிரபு மற்றும் திருமதி. சுபா தொகுத்து வழங்கினர்.

'செம்மொழி' நடனம், ஒளவை, பாரதி மற்றும் பாரதிதாசனார் பாடல்கள், திருக்குறள், ஆத்திசூடி உரை, தமிழ், தமிழ்மண்ணின் சிறப்புபற்றிய‌ நாடகம் என பல்வேறு நிகழ்ச்சிகள் முத்தமிழாய்ப் பெருக்கெடுத்தன. நிகழ்ச்சிகளுக்கிடையே ஆசிரியர்களை மேடையில் அறிமுகப்படுத்தியது சிறப்பு. தொடர்ந்து திருமதி. இரேணுகா குமாரசாமி அவர்கள், தமிழ் கற்பதோடு, தமிழுணர்வுடன் இருப்பதன் அவசியத்தைத் தமது உரையில் விளக்கினார்.

சிறப்பு விருந்தினராக வந்திருந்த நியூயார்க் கார்னல் பல்கலைக்கழக மருத்துவத்துறைப் பேராசிரியர், முனை. அருள் வீரப்பன் தமிழின் சிறப்பையும், செழுமையையும், அதை அடுத்த தலைமுறை படிப்பதன் அவசியத்தையும் அழகாக எடுத்துரைத்தார். பின்னர் மீண்டும் மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் தொடர்ந்தன. நியூஜெர்சி தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் திரு. முத்துக்குமார் மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். திரு. ரவி நன்றியுரை நிகழ்த்தினார்.

2014ம் ஆண்டு, ஜூலை 7ம் நாள், தவத்திரு. மருதாசல அடிகளாரால் துவக்கிவைக்கப்பட்ட 'குமாரசாமி தமிழ்ப்பள்ளி', தற்போது 70 மாணவ மாணவியர்கள், 14 தன்னார்வல ஆசிரியர்களுடன் இயங்கிவருகிறது. வகுப்புகள் Crossroads Middle School (North Campus, 635 Georges Road, South Brunswick, New Jersey 08852) வளாகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மாலை 3 மணி முதல் 5 மணிவரை நடந்து வருகின்றன.

தொடர்புக்கு:
வலைமனை: www.sbtamilschool.org
மின்னஞ்சல்: contact@sbtamilschool.org

ராஜாமணி செங்கோடன்,
தென் பிரன்ஸ்விக்

© TamilOnline.com