ஆண்டுவிழா: பாலசம்ஸ்கிருதி சிக்‌ஷா
ஜூன் 6, 2015 அன்று சன்னிவேல் சனாதனதர்ம கேந்திரக் கோவிலில் 'பாலசம்ஸ்கிரிதி சிக்‌ஷா' அமைப்பு தனது ஐந்தாவது ஆண்டுவிழாவை ஒரு தெய்வீக கலைநிகழ்ச்சியோடு கொண்டாடியது. பெர்க்கலி வேதாந்தா சொசைட்டியின் சுவாமி பிரசன்னாத்மானந்தா இதில் பிரதம விருந்தினராகப் பங்கேற்றார். 'பிரியா லிவிங்' என்ற இந்திய முதியோர் இல்லவாசிகள் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர்.

குழந்தைகள் தெளிவான உச்சரிப்புடனும், நல்ல சுருதி லயத்துடனும், பக்தியுடனும் அச்சுதாஷ்டகம், பாலமுகுந்தாஷ்டகம், கீதா தியானம் போன்ற தோத்திரங்களையும், ஆங்கிலம் உட்படப் பல்வேறு மொழிகளில் பஜனைப் பாடல்களையும் அழகாக இசைத்தனர். அற்புதபாலகன், துவாரகாபதி, கீதாசார்யன் என குழந்தைகள் கிருஷ்ண அவதாரத்தின் பல்வேறு அம்சங்களை நடனங்களாகவும், நாடகமாகவும் அரங்கேற்றினர். கண்ணனின் இளமைப் பருவத்தை 'ஜெயஜனார்த்தனா' என்ற பாடலுக்கு 5 முதல் 7 வயதுக் குழந்தைகள் நடனமாடினர். துலாபாரத்தின் மூலம் கிருஷ்ணர் சத்தியபாமாவுக்கு கிருஷ்ண பக்தி, பிற செல்வங்களைவிட மேன்மையானது என்று புரியவைத்த லீலையையும், கோபிகையர் தன்னலம் துறந்து கண்ணன்மீது பக்தி செலுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஆங்கில நாடகமாக வழங்கினர். நிறைவாக பகவத்கீதையின் சாராம்சத்தைச் சிறுமியர் நடனமாக ஆடியது மனம்நெகிழச் செய்தது.

குழந்தைகளின் பயிற்சியையும், இந்திய கலாசார ஈடுபாட்டையும் சுவாமி பிரசன்னாத்மானந்தா மெச்சினார். அமைப்பின் சேவையை சனாதனதர்ம கேந்திரத் தலைவர் திரு. ரமேஷ் ஹரிஹரன் பாராட்டினார். பாலசம்ஸ்கிருதி சிக்‌ஷா சிறுவர்களுக்கு பஜனை, இந்தியப் புராணக்கதைகள் மூலம் இந்திய கலாசாரத்தைக் கற்பிக்கும் லாபநோக்கற்ற அமைப்பாகும். P.S.S. நீரஜா பரமேஸ்வரன், மகேஸ்வரி ரங்கன் ஆகிய இருவரும் இதை 2010ம் ஆண்டு

தொடங்கினர். வாரந்தோறும் வெள்ளியன்று சன்னிவேல் சனாதனதர்ம கேந்திரத்தில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தற்போது கோடை விடுமுறைக்கு விஷ்ணு சஹஸ்ரநாமம் கற்பித்துவருகின்றனர்.

ஸ்ரீப்ரியா ஸ்ரீனிவாசராகவன்,
சன்னிவேல், கலிஃபோர்னியா

© TamilOnline.com