ஜூன் 13, 2015 அன்று மில்வாக்கி நாட்டியார்ப்பணா நாட்டியப் பள்ளி மாணவி செல்வி. பிரியங்காவின் பரதநாட்டிய அரங்கேற்றம் தெற்கு மில்வாக்கி கலையரங்கத்தில் நடைபெற்றது. இவர் குரு கிருபா பாஸ்கரன் அவர்களின் மாணவி. இவர் 2010 முதல் பரதநாட்டியம் பயின்று வருகிறார்.
வரவேற்புரைக்குப்பின் கத்யோத்காந்தி ராக புஷ்பாஞ்சலியுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. அடுத்து, பாபநாசம் சிவனின் "ஈசனே இந்த ஏழைக்கு இரங்க" (சக்ரவாகம்) என்கிற பாடலுக்கு அபிநயித்தார். சாருகேசி ராகத்தில் "இன்னும் என்மனம்" என்கிற லால்குடி ஜெயராமன் பாடலில், கண்ணன் குசேலர் கொண்டுவந்த அவலை ஆவலுடன் புசிப்பது, அவர் தயக்கத்துடன் கொடுப்பது போன்ற பாவங்களை மொழியறியாதவர்கள்கூட ரசிக்கும்படி ஆடியபோது அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது. ஆதிசங்கரர் அருளிய கங்காஸ்துதிக்கு (ராகமாலிகை) ஏற்றாற்போல வெள்ளை மற்றும் நீலத்தில் உடையணிந்து ஆடியது வெகு பொருத்தம். தொடர்ந்து, "கண்டநாள் முதலாய்" (மதுவந்தி), "ஜகதோத்தாரணா" ஆகியவை சிறப்பாக அமைந்திருந்தன. ரேவதி ராகத் தில்லானா விறுவிறுப்பான முத்தாய்ப்பு.
சிறப்பு விருந்தினராக பெங்களூரு திருமதி. ரேவதி நரசிம்மன் வந்திருந்து பிரியங்காவிற்கு ஆசி வழங்கினார். குரு கிருபா பாஸ்கரன் பேசும்போது, விஸ்கான்சின் ஆர்ட்ஸ் போர்டுமூலம் பிரியங்கா "Best Apprentice" விருது பெற்றதையும் குறிப்பிட்டு, இந்தச் சின்னவயதில் கடினமான உணர்ச்சிகளை எளிதாக வெளிப்படுத்தும் அவரது திறமையைப் புகழ்ந்தார்.
ஜெயா வெங்கட்ராமன், தெற்கு மில்வாக்கி, விஸ்கான்சின். |