அரங்கேற்றம்: ரித்திகா ஸ்ரீனிவாசன்
ஜூன் 27, 2015 அன்று உட்சைட் ஹைஸ்கூலில் (கலிஃபோர்னியா) உள்ள நிகழ்த்துகலைகள் மையத்தில் செல்வி. ரித்திகா ஸ்ரீனிவாசனின் பரதநாட்டிய அரங்கேற்றம் குரு திருமதி மீனா லோகன் தலைமையில் நடந்தது. இது குரு மீனா அவர்கள் மேற்பார்வையில் நடக்கும் 35வது நாட்டிய அரங்கேற்றம். நிகழ்ச்சியை திரு. ஸ்ரீனிவாசன் வரவேற்புரையாற்றித் தொடங்கிவைத்தார். திரு. ஷ்ரேயஸ் ஸ்ரீனிவாசன் தொகுத்து வழங்கினார்.

மல்லாரியுடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது. ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் "சரஸமுகி" பாடலுக்கு ரித்திகா அழகாக அபிநயித்தார். கல்யாணி ராக ஜதீஸ்வரம் ரம்யமாக இருந்தது. லால்குடி ஜெயராமனின் ஷண்முகப்ரியாவில் அமைந்த "தேவர் முனிவர் தொழும்" வர்ணம், முத்துத்தாண்டவரின் "ஆடிக்கொண்டார்", பாரதியாரின் "தீராத விளையாட்டுப் பிள்ளை" ஆகியவற்றில் ரித்திகாவின் சிறப்பான பயிற்சியைக் காணமுடிந்தது. செஞ்சுருட்டியில் "வள்ளி கணவன் பெயரை" என்ற காவடிச்சிந்தும், பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்காரின் தில்லானாவும் நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்த்தன. ராகமாலிகையில் அமைந்த "வாரணமாயிரம்" பாடலுக்கு ரித்திகாவின் அபிநயம், ஆண்டாளை நேரிலழைத்து வந்தது. குருவந்தனத்துடன் அரங்கேற்றம் நிறைவுற்றது.

குரு மீனா லோகன் ரித்திகாவைப் பாராட்டிப் பட்டம் வழங்கினார். திருமதி. ஜெயந்தி உமேஷ் (வாய்ப்பாட்டு), திரு. ரவீந்திரபாரதி ஸ்ரீதரன் (மிருதங்கம்), திரு. சரவணா பிரியன் ஸ்ரீராமன் (வயலின்), அஸ்வின் கிருஷ்ணகுமார் (புல்லாங்குழல்) ஆகியோரின் பக்கவாத்தியப் பங்களிப்பு மிக நேர்த்தி. முடிவில் திருமதி. விஜி ஸ்ரீனிவாசன் நன்றி கூறினார். ரித்திகா தனது குருவுக்கும், குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்தார்.

ராஜேஸ்வரி ஜெயராமன்,
சான்ட கிளாரா, கலிஃபோர்னியா

© TamilOnline.com