சேவாத்தான்: மாரத்தான் போட்டிகள்
ஜூலை 12, 2015 ஞாயிறன்று, விரிகுடாப்பகுதி சேவை அமைப்புகள் இணைந்து மாராத்தான் போட்டிகளை நடத்தவுள்ளது. சேவை மனப்பான்மையைக் கொண்டாடும் இந்தப் போட்டிகளில் 5, 10 மற்றும் அரைமாரத்தான் போட்டிகளில் இவ்வாண்டு 106 சேவை அமைப்புகளும் ஆயிரக்கணக்கான போட்டியாளர்களும் கலந்துகொள்கின்றனர். "வயது, வகுப்பு, இனம் தாண்டி எல்லோரையும் சேவை தொடுகிறது" என்கிறார் சேவாத்தானின் இணைத்தலைவர் அனு ஜகதீஷ்.

சென்ற ஆண்டு நிகழ்ச்சியில் 500,000 டாலர் திரட்டியது இவ்வமைப்பு. கிராமப்புறங்களில் கல்வி வளர்ச்சிக்குப் பாடுபடும் 'ஈஷா வித்யா' 49,000 டாலர் திரட்டியது. இந்த நிதி ஈரோடு அருகே 153 குழந்தைகளுக்கு வகுப்பறைகள் கட்ட உதவியது. இவ்வாண்டில் 75,000 டாலர் திரட்டி, மூன்று பள்ளிகளில் மேலும் 10 வகுப்பறைகள் கட்டவும், மேல்படிப்புக்கு நிதி வழங்கவும் எண்ணியுள்ளது. ப்ராஜெக்ட் ரோஷனி என்ற அமைப்பு ஹைதாராபாதில் உள்ள ப்ரஜ்வலா மறுவாழ்வு மையத்திற்கு நிதி திரட்டவுள்ளது. பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ப்ரஜ்வலா இருப்பிடம் அளிக்கிறது. இவர்கள், பத்தாயிரம் டாலருக்குமேல் திரட்ட எண்ணியுள்ளனர்.

"சேவாத்தான் ஓர் இயக்கமாகப் பரிணமித்துள்ளது. தவிர 'Sevathon Speaker Series' வருடம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்வு" என்கிறார் இணைத்தலைவர் முரளி சிராலா. சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பான 'இந்தியா கம்யூனிட்டி சென்டர்' தொடர்சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பல சமூகத் தொழில்முனைவோர் (social entrepreneurs) கருத்துகளையும் வளங்களையும் பகிர்ந்து கொள்கின்றனர்.

சன்னிவேலின் பேலாண்ட்ஸ் பார்க்கில் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தவும், அதைத்தொடர்ந்து நடைபெறும் கலைநிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கவும் சேவை நிறுவனங்களைப் பற்றி அறியவும் இதுவொரு வாய்ப்பாக அமைகிறது. "நான் இந்த நிகழ்ச்சிகளைக் காண்பதோடு, தொண்டு நிறுவனங்களின் ஸ்டால்களுக்கும் சென்று அவர்களின் சேவைகள்பற்றித் தெரிந்துகொள்கிறேன்" என்கிறார் சேவாத்தானுக்குத் தொடர்ந்து வருகைதரும் ஆசிரியை அசலா ட்ரெஹான்.

மேலுமறிய: konnectme.org

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com