ஜூலை 2015: வாசகர் கடிதம்
தமிழரான ராஜராஜேஸ்வரி அவர்கள் நியூ யார்க்கில் நீதிபதியாகப் பணி நியமனம் பெற்றிருப்பது பெருமையான செய்தி. இதுபோலவே திரு. விவேக் மூர்த்தி, கறுப்பினப் பெண்மணி திருமிகு. லின்ச் குறித்த செய்திகள் சிறப்பானவை. சிறுகதை மாமன்னர் ஜெயகாந்தன், கம்பீர ஏழுகட்டைப் பாடகர் நாகூர் அனிபா ஆகியோர்க்கான அஞ்சலிகள் மனத்தை நெகிழவைத்தன. ஜோதிர்லதா கிரிஜா குறித்த கட்டுரையுடன் அவரின் கதையையும் வெளியிட்டிருப்பது பாராட்டற்குரியது. விவேக் பாரதியின் சித்திரங்களைக் கண்டு சொக்கிநின்றேன். இயற்கைமீது காதல்கொண்டு அழகியல் பாடல்களைப் பாடிய கவிஞர் வாணிதாசனைப் பற்றி அவரது நூற்றாண்டில் கட்டுரை வெளியிட்டிருப்பது சிறப்பு. 'ஈர நெஞ்சம்' மகேந்திரன் உண்மையில் சேவைச்சிகரம்தான்.

கவிஞர் கருமலைப் பழம் நீ,
நேபர்வில், சிகாகோ

*****


ஜோதிர்லதா கிரிஜா அவர்களைப் பற்றிப் படித்தவுடன் அவர்கள் எழுதியுள்ள எல்லாச் சிறுகதைகளையும் படிக்க ஆவல் மேலோங்கியுள்ளது. 'ஆளுக்கு ஒரு சட்டம்' சிறுகதையில் அவர்கள் கூறிய வரிகள் ஆண்களின் எழுத்தில் ஏற்றாத சட்டம் நம் நாட்டின் வழிவழி வழக்கமாக அமைந்துவிட்டது. தென்றலில் வெளியாகும் இதுபோன்ற சிறந்த சிறுகதைகளின் மூலம் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

ரகுபத்,
கலிஃபோர்னியா

*****


ஜூன் இதழ் எழுத்தாளர் பக்கம் சிறப்பாக இருந்தது. மறைந்த முதுபெரும் எழுத்தாளர் ஏ.எஸ். ராகவன் கதைகள் எளியநடையில் சமூக மேம்பாட்டுக்கு உதவும்வகையில் விளங்கின. பல பரிசுகளையும் பெற்று, இவ்வளவு திறமைகள் இருந்தும் அடக்கமாக வாழ்ந்தார். அவரை வாசகர்கள் கவனத்துக்குக் கொண்டுவந்த தென்றலுக்கு எனது பாராட்டுகள்.

கே.ராகவன்,
பெங்களுரு, இந்தியா

*****


இந்தியர்களுக்கு மிகுந்த பெருமையை ஈட்டிக்கொடுத்துள்ள, சமூகவுணர்வு கொண்ட முன்னோடியான நீதிபதி ராஜ ராஜேஸ்வரி அவர்களின் நேர்காணல் நன்றாக இருந்தது. ஆரவாரமின்றி பல சாதனைகளைச் செய்துள்ள எழுத்தாளர் ஏ.எஸ். ராகவன் அறிமுகமும், அவரது 'உம்மாச்சி' சிறுகதையும் சிறப்பாக இருந்தன. யார் மனதும் புண்படாத மாதிரி தகுந்த விடைகளைத் தருகிறார் டாக்டர். சித்ரா வைத்தீஸ்வரன். ஹரிகதையை மரபுமீறாமல் நடத்திவரும் சிந்துஜா சந்திரமௌலி அவர்களின் நேர்காணல் சிறப்பு. 'காசு ...பணம்.... துட்டு.... மணி' கதை உண்மை நிலையைக் கோடுடிட்டுக் காட்டியது. 'விருந்தோம்பல் இனமறியாது' சுவையான அனுபவம். 'சிக்கலில்லா பெருவாழ்வு'க்கு உணவுமுறையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற வரலட்சுமி நிரஞ்சன் கட்டுரை மிகநன்று தென்றலின் அத்தனை பகுதிகளும் சிறப்பாக உள்ளன.

சசிரேகா சம்பத்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா

© TamilOnline.com