தேவையற்ற சுமை
ஒவ்வொரு முறை
பயணிக்கும்போது
குளிருக்கு அடக்கமாய் சால்வையும்
வழித்துணைக்குப் புத்தகமும்
வேண்டுமென்பது
பயணப்பட்ட பின்னரே
நினைவுக்கு வரும்.
பயணத்திற்கான ஆயத்தம்
எப்போதும் கடைசி நிமிடத்தில்
பரபரப்பாய் நடப்பதே
காரணமாய் இருக்கக்கூடும்

அதற்காக இந்நாட்களில்
பயணப்பையோடு
வைக்கப்பட்ட
சால்வையும் புத்தகங்களும்
தேவையற்ற சுமையாகிப் போயின.

சுமைதாங்கியின் சுமைக்கு இரையாகி
இறக்குமதியான புத்தகங்கள்
மீண்டும் பயணத்தின்போது
கூடவராமல் தவிப்புக்குள்ளாகின்றன.

எல்லாம் சரியான
என் பயணம்
எப்போது துவங்கும்?

லாவண்யா சுந்தரராஜன்,
பெங்களூரு

© TamilOnline.com