வானொலி வாணர் அப்துல் ஹமீது
'இலங்கை வர்த்தக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்' என்ற அற்புதமான தமிழ் வானொலியின் தாரகைகளில் ஒருவர் ஒலிபரப்பாளர் அப்துல் ஹமீது. அண்மையில் 'தமிழர் திருநாள் 2005'ஐத் தொகுத்து வழங்க அமெரிக்கா வந்திருந்த அவரைத் 'தென்றல்' சார்பில் சந்தித்தோம். நேர்காணலிலிருந்து:
ஏற இறங்கப் பார்த்தார்கள்
அப்போதெல்லாம் வானொலியில் நேரடியாகத்தான் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும். ஒலிப்பதிவு செய்யும் வழக்கம் கிடையாது. சிறுவர் மலர் நிகழ்ச்சியை நேரில் பார்க்கும் வாய்ப்பு மாதம் ஒருமுறை ஒரு சில பிள்ளைகளுக்குக் கிடைக்கும். என்னுடைய 11-வது வயதில் அதைப் பார்க்க நான் போயிருந்த நேரத்தில், ஒரு தொடர் நாடகம் நேரடி ஒலிபரப்பாக வேண்டியிருந்தது. அதில் நடிக்க வேண்டிய ஒரு சிறுவன் அன்று வரவில்லை. அப்போது நிகழ்ச்சி யைப் பார்க்க வந்திருந்தவர்களின் குரலைப் பரிசோதித்துப் பார்க்க முடிவு செய்தார்கள். என்னுடைய குரல் அந்த வாய்ப்பை எனக்கு ஈட்டித் தந்தது. அதன் பிறகு தொடர்ந்து நான் சிறுவர் மலர், இளைஞர் மன்றம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். பிறகு நிலையக் கலைஞனாகத் தேர்வாகி ஊதியத்துடன் வானொலி நாடகங்களில் நடித்தேன்.
அச்சமயம் பகுதிநேர அறிவிப்பாளருக்கான தேர்வு ஒன்று வந்தது. இதிலே, குரலை மட்டும் பரிசோதிப்பார்கள். திரைமறைவிலே நாம் இருப்போம். என் குரலை வைத்து என்னைத் தேர்வு செய்தார்கள். பிறகு நேர்முகத் தேர்வுக்கு போயிருந்த போது என்னை ஏற இறங்கப் பார்த்தார்கள். அங்கே வயதில் மிகக் குறைந்தவன் நான்தான்.
1967-ல் அறிவிப்பாளர் பதவியை ஏற்றேன். அந்த வயதிலேயே, வெறும் பாடலை அறிவிக்கும் டிஜே (Disk Jockey) ஆக மட்டும் இல்லாமல், சிறந்த செய்தி வாசிப்பாளராக, நேர்முக வர்ணனையாளராக, நிகழ்ச்சி தயாரிப்பாளராக பல்வேறு பரிமாணங் களைப் பெறும் வாய்ப்பு அமைந்தது.
தெளிவு, அழகு, இனிமை
கல்வித் தகுதி அவசியம். ஆனால் தமிழைத் தெளிவாக மட்டுமல்ல, அழகாக, இனிமை யாக உச்சரிப்பது அதைவிட முக்கியம். ஏனென்றால் மொழி செம்மைப்படுவது அப்படித்தான். அழுத்தம் திருத்தமாக உச்சரிப்பது சில சமயம் காதுக்குக் கடினமாக இருக்கலாம். இனிமையாக உச்சரிப்பது, குரல்வளம் இவற்றுடன் நமது பொதுஅறிவு, பல்துறை அறிவு பரீட்சிக்கப் படும். அதோடு இலங்கையின் பிரதான மொழிகளான ஆங்கிலம், சிங்களம் ஆகியவற்றிலும் நல்ல ஞானம் இருக்க வேண்டும். ஏனென்றால் உடனடி மொழி பெயர்ப்புச் செய்ய வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படும்.
இவற்றையெல்லாம் பரீட்சித்த பிறகு ஆறுமாதப் பயிற்சி அளிப்பார்கள். அந்த ஆறு மாதங்களிலும் வானொலியில் பேச முடியாது. பல்வேறு கடுமையான பயிற்சிகள். ஆகவே முதன்முறையாக ஒலிவாங்கிக்கு முன்பு போகும்போது பயபக்தியுடன் செல்வோம். ஏனென்றால் வாய் திறந்து வார்த்தைகளைப் பேசி, அது காற்றில் கலந்துவிட்டால், திரும்பப் பெற முடியாது. அந்தப் பொறுப்புணர்வோடு நாம் எதைப் பேசினாலும் சுவைபட, பயனுள்ள வகையில் சொல்ல வேண்டும். அதற்குத்தான் அத்தனை பயிற்சி!
இந்த நிலை மாற வேண்டும்
பொதுவாகத் தமிழகத்திலும், வேறுசில நாடுகளிலும்கூட வானொலியை நடத்துபவர்கள் முழுக்க முழுக்க திரையிசைப் பாடல்களை மட்டுமே நம்பி, அதையடுத்து தொலை பேசிக்கருவியை நம்பிக் காலத்தை விரய மாக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
வானொலி என்பது தகவல் தொடர்புச் சாதனம். அந்த ஊடகத்திற்கு ஒரு கடமை யிருக்கிறது. எங்களுடைய பணி ஆரம்பிக்கப் பட்ட காலத்தில் வானொலியின் கடமை கல்வி, தகவல், கேளிக்கை (Education, Information, Entertainment) என்று சொல்லிக் கொடுப்பார்கள். மூன்றாவது இடத்தில்தான் பொழுதுபோக்கு வருகிறது. காலப்போக்கில் அந்த கல்வி பின்னுக்குத் தள்ளப்பட்டு, தகவல் ஓரளவுக்கு முன்னிலைப்படுத்தப்பட்டு பிறகு பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தன. இப்போது தகவலும் பின்னுக்குத் தள்ளப்பட்டு பொழுதுபோக்கும், சினிமாவின் ஆக்கிரமிப்பும் அதிகமாக இருக்கிறது.
இந்த நிலை மாற வேண்டும். ஏனென்றால் வானொலி மிகச் சக்தி வாய்ந்த சாதனம். பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி இவற்றில் வானொலியின் சக்தி மிக உயர்ந்தது. காரணம் ஒருவனது அன்றாட அலுவல்களுக்கு இடையூறு செய்யாமல் செவி வழியாக அவனைச் சென்றடைவது வானொலி. அதன் மூலமாக அற்புதமான பணிகளைச் செய்ய முடியும். நமது மொழி வளர்ச்சி, மொழி சார்ந்த பண்பாட்டுக் கோலங்களை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் பணியைச் செய்கிறது. அதுமட்டுமல்லாமல் பல்வேறு விஞ்ஞானத் தகவல்களை உடனுக்குடன் மக்களுக்கு எடுத்துச் செல்லக்கூடிய மிகப் பெரிய பணியை ஆற்றக் கூடியது.
முன்னோடிகள்
வானொலி உலக மகாயுத்தத்திற்குப் பின் விரைவில் இலங்கைக்கு வந்துவிட்டது. வானொலிக்கு முதலில் வர்த்தக ஒலி பரப்பாக வடிவம் கொடுத்தது தென்கிழக்கு ஆசியாவிலேயே இலங்கையில்தான். ஜனரஞ்சகமான நிகழ்ச்சிகளை அந்த வடிவத்தின் மூலம் வழங்கமுடிந்தது. தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில், எங்களுடைய ஒலிபரப்பு மிகப் பிரபலமாக இருந்தது. அந்தக் காலத்திலே தமிழ்நாட்டில் யாராவது வானொலிப் பெட்டி வாங்குமுன் இந்தப் பெட்டியில் சிலோன் ரேடியோ கேட்குமா என்று கடைக்காரரிடம் கேட்டு விட்டுத்தான் வாங்குவார்கள் என்று வேடிக்கையாகச் சொல்வார்கள்.
அதற்குக் காரணமாக இருந்தவர்களில் முன்னோடி அறிவிப்பாளரான மயில் வாகனன் அவர்களைக் குறிப்பாகச் சொல்ல வேண்டும். இந்தியத் திரையுலகத்தினருடன் மிக நெருக்கமான தொடர்புடையவராக இருந்தார். அந்த நாளிலே எந்தப் புதிய திரைப்படமும் அதன் பாடல்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பானால் மட்டுமே வெற்றி அடையும். விநியோகஸ்தர்கள் வந்தடைவார்கள் என்ற நிலையே இருந்தது. அதற்குப் பிறகு பரராஜசிங்கன் உட்படப் பலர் இருந்தார்கள்.
எமது தலைமுறை வந்தபின் ஒரு மணி நேரம் பாடல்களை ஒலிபரப்பி விளம்பரங் களை ஒலிபரப்புவது என்றில்லாமல் வர்த்தக வானொலியைக் களமாக வைத்து நல்ல நாடகங்களை, இலக்கிய, கிராமியக் கலை நிகழ்ச்சிகளை ஜனரஞ்சகமாகத் தயாரித்து அளித்தோம். அதுமட்டுமல்லாமல் எத்தனையோ எழுத்தாளர்களை, கவிஞர்களை நமது வானொலி மூலம் உருவாக்கினோம். தமிழகத்திலும், இலங்கையிலும் பல்வேறு எழுத்தாளர்கள் தங்களுடைய எழுத்தார்வத்தை வளர்த்துக் கொள்ள இலங்கை வானொலி அந்த நாளிலே ஒரு களமாக இருந்தது.
"குலவையிட்டு வரவேற்றார்கள்"
நான் தமிழகத்தின் கிராமம்தோறும் சென்று 'கிராமத்தின் இதயம்' என்றொரு நிகழ்ச்சியை ஸ்ரீராம் சிட்பண்ட் நிறுவனத்தாருக்காகத் தயாரித்தேன். மூன்றரை ஆண்டுகள் கிராமியக் கலைவடிவங்கள், குறிப்பாக கிராமிய இசை, மக்கள் இசை பற்றிய நிகழ்ச்சி அது. ஸ்ரீராம் நிறுவனத்தார் ஸ்ரீராம் கிராமசபை என்ற ஒன்றை நிறுவி, வறண்ட காலங்களில், வானம் பார்த்த பூமியாக இருக்கும் பகுதிகளில் அவர்களுக்குச் சில கைத்தொழில்களைக் கற்றுக் கொடுத்து நெசவு, பத்தி தயாரித்தல் போன்ற முயற்சிகளை சர்வோதயா இயக்கத்துடன் இணைந்து செய்தனர்.
அந்த கிராமங்களுக்கு செல்லும் போதெல்லாம் எனக்குக் கிடைத்த அனுபவம் என் வாழ்நாளில் மறக்க முடியாதது. மிகவும் வறுமையில் வாழ்பவர்கள்கூட, ஒரு சிறு வானொலிக் கருவியை அவர்களது உடமையாக வைத்திருந்தார்கள். பரந்த வயல்வெளிகளிலே வேகாத வெய்யிலில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அங்குள்ள மரக்கிளையில் அந்த வானொலிப் பெட்டி தொங்கிக் கொண்டிருக்கும். அதிலிருந்து இலங்கை வானொலி கேட்டுக் கொண்டிருக்கும். அப்படிப் போகும் சில வேளைகளில் என்னுடைய நிகழ்ச்சியை நானே காற்றில் மிதந்து வரக் கேட்டிருக்கிறேன்.
கிராமங்களுக்கு நான் போகும்போது பெண்கள் கூடிக் குலவையிட்டு தமிழ்ப் பாரம்பரியப்படி என்னை வரவேற்றார்கள். அதற்கு முன்பு பல ஆண்டுகள் நான் வானொலியில் பணியாற்றினேன். கடிதங்கள் மூலம் பலர் தமது அன்பை வெளிப் படுத்தியதுண்டு. ஆனாலும் இந்த கிராமத்து மக்களின் அன்பை நேருக்குநேர் தரிசிக்கும் அந்த வாய்ப்பு கிடைத்தபோது நான் நெஞ்சு நெகிழ்ந்து போனேன். அதை வாழ்க்கையில் மறக்க முடியாது.
பாடுபட்டுச் செய்யும் பணி வீண்போவதில்லை
ஓர் ஆண்டுக்கு முன் சென்னையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு எடுக்கப்பட்ட ஒரு விழாவுக்குப் போயிருந் தேன். என் பக்கத்தில் ஒரு தொழிலதிபர் வந்தமர்ந்தார். மிகப் பெரிய செல்வந்தர். அவருடைய அறிமுக அட்டையில் அவரது கல்வித் தகுதிகளும் மிக நீளமாக இருந்தன. அவர் என் பக்கத்தில் வந்து நான் உங்கள் ரசிகன் என்று சொன்னார். சரி, அவர் நமது 'பாட்டுக்குப் பாட்டு' நிகழ்ச்சியைப் பார்த்திருப்பார் போலிருக்கிறது என்று நான் நினைத்தேன். ஆனால் அவர் "25 ஆண்டு களுக்கு முன்பு நீங்கள் தயாரித்து வழங்கிய 'ஒலிபரப்பிலே ஒரு நாள்' என்ற நிகழ்ச்சியை நான் ஒலிப்பதிவு செய்து இன்னும் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன்" என்றார். அதை அவர் சொன்னபோது என் உடல் புல்லரித்தது.
இப்படி நாம் பாடுபட்டுச் செய்யும் சில காரியங்கள் நிச்சயமாக வீண்போவதில்லை. இந்த அமெரிக்க நாட்டிலே அதன் அறுவடையைத்தான் இப்போதுகூட நான் செய்துகொண்டிருக்கிறேன். இந்த தமிழர்த் திருநாளில் கலந்து கொண்டிருக்கும் போது, அந்தப் பழைய நேயர்கள் தங்கள் பசுமை நினைவுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டு தங்கள் அன்பினைத் தெரிவித்தபோது, நான் எவ்வளவு பாடுபட்டு இந்தப் பணிகளைச் செய்தேனோ அதன் பலன் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன்.
இலங்கை இனப் பிரச்சினை
1983-ம் ஆண்டில் மட்டுமல்ல, 1958-ம் ஆண்டில் ஏற்பட்ட இனக்கலவரத்தைக்கூட நான் நேரில் பார்த்தேன். அப்போது நான் திகில் அடைந்தேன். ஆனால் ஒரு மாதத்திற்குள் மக்கள் நடந்தவற்றை மறந்து மீண்டும் சகஜமாக வாழ ஆரம்பித்தது ஆச்சரியமாக இருந்தது. அப்போது நான் வன்முறை உணர்வு நம் ஒவ்வொருவர் இரத்தத்தோடும் கலந்தது. ஒரு இனத்திற்கு என்று இல்லை என்ற உண்மையைப் புரிந்துகொண்டேன்.
நம்மை ஒரு கொசு கடித்துவிடுகிறது. கடிக்கும் போது உடனே நாம் அதை அடிக்க கொசு இறந்துவிடுகிறது. நாம் அடிப்பதால் கொசு இறந்துபோகிறது. ஆனால் கொசு கடிப்பதால் நாம் இறந்து போவதில்லை. அடித்தால் திருப்பி அடிக்கும் உணர்வு இது. தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக இந்த உணர்வை எடுத்துச் செல்லவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.
நாம் சேர, சோழ, பாண்டிய மன்னர் களையே எடுத்துக் கொள்வோம். அவர்களுடைய காலத்தில் மன்னர்களுக்கிடையே நிகழ்ந்த போர்களில் எத்தனையோ மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். படைகள் மோதிக் கொண்டிருக்கின்றன. அந்த இறந்த உயிர்களைப் பற்றிய கதைகளை அந்த குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அடுத்தடுத்து வந்த தலைமுறைகளுக்குச் சொல்லியே வந்திருந்தாலும், தமிழர்களுக்குள்ளேயே நாம் கையில் துப்பாக்கி வைத்துக் கொண்டுதான் நடமாடியிருப்போம். இது மறக்கப்பட வேண்டிய ஒரு துன்பமான நிகழ்வு என்பது என்னுடைய அபிப்பிராயம்.
மதம் மாறிவிடலாம். இனம் மாற முடியுமா?
1983-ம் ஆண்டில் ஏற்பட்ட அந்த நிகழ்வு இன்றுவரை தொடர்வது ஒரு துயரமான ஒரு நிலைதான். ஏனென்றால் இலங்கைத் திருநாட்டிலே நான்கு மதங்களைச் சார்ந் தவர்கள் உள்ளனர். இதில் பெளத்தர்கள், இந்துக்கள் மட்டுமே மறுபிறப்பு உண்டு என்று நம்புகிறவர்கள். மறுபிறப்பில் நான் இந்துவாகப் பிறக்கிறேனா, பெளத்தராகப் பிறக்கிறேனா, கிறிஸ்தவராகப் பிறக்கிறேனா, இஸ்லாமியராகப் பிறக்கிறேனா என்பது என் கையில் இல்லை.
இதை நான் இரு பகுதியைச் சார்ந்தவர் களிடமும் சொல்லியிருக்கிறேன். உண்மை யாகவே நீங்கள் மறுபிறப்பை நம்புவதாக இருந்தால் இனம் என்று ஒன்று இல்லை. இங்கே எதுவுமே நமக்குச் சொந்தமில்லை. ஆகவே மதநம்பிக்கையில் ஆழமாக உள்ள வர்கள் இனம், சாதி, மதம் இவற்றை யெல்லாம் புறக்கணிக்க வேண்டும். இல்லை இனம் என்பதுதான் என்றால் மதம் என்ற ஒன்று இருக்கக்கூடாது. ஆலயங்கள் இருக்கக் கூடாது. இப்படி வேடிக்கையாகச் சொல்வேன்.
நான் இன்னும் ஒரு கேள்வியையும் கேட்பேன். நீங்கள் நாளைக்கே நினைத்தால் மதம் மாறிவிடலாம். இனம் மாற முடியுமா என்று கேட்பேன். அதற்கு பதில் இல்லை. ஆகவே காலம் காலமாக நாம் வேறு தேசங்களிலிருந்து வந்த மதங்களைத் தழுவியிருக்கிறோம். ஆனால் அடிப்படையில் தமிழர்களாக இருந்திருக்கின்றோம். ஒரு எதிரியை முற்றாக அழிக்கக்கூடிய மிகச் சிறந்த வழி, எதிரியை நண்பனாக்கிக் கொள்வதுதான்.
83-ம் ஆண்டிலே என்னையும்கூட உயிரோடு வைத்துக் கொளுத்தி எரித்து விட்டார்கள் என்ற செய்தி பத்திரிகைகளில் பரவியது. அந்தச் செய்தி பரவியதற்கு இன்னும் ஒரு காரணம் மூன்று தினங்கள் வானொலியில் என்னுடைய குரல் ஒலிக்கவில்லை. என் குடும்பத்தைப் பாதுகாப்பதற்காக நான் போயிருந்தேன். அதன் பிறகு என்னை பலவந்தமாக அழைத்து வந்தார்கள். அழைத்து வந்து "விசேட செய்தி அறிக்கை ஒன்றை வாசிக்க வேண்டும், அதில் உங்களது பேரைச் சொல்ல வேண்டும்" என்றார்கள். ஏனென்றால் இந்தியப் பத்திரிகைகளில்கூட - மலையாளப் பத்திரிகைகளில்கூட - அப்படி ஒரு செய்தி வந்திருந்தது. என் குரல் ஒலித்த பிறகு எனக்கு வந்த கடிதங்களை நான் இன்னும் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன். அந்த கடிதங்கள் எல்லாம் எவ்வளவு சகோதர வாஞ்சையோடு, பிள்ளைப் பாசத்தோடு எழுதியிருந்தார்கள்! தென்னிந்தியாவில் சில இடங்களில் பிரார்த்தனைகூட நடத்தியதாக எழுதியிருந்தார்கள்.
அகத்தின் அழகு குரலில் தெரியும்
அதற்குப் பிறகெல்லாம் நான் ஒலிபரப்புத் துறைக்கு வரும் மாணவர்களைப் பயிற்று விக்கும் போது ஒரு விடயத்தைச் சொன்னேன். அதனை ஆனந்தவிகடனில் கூட தலைப்பாகப் போட்டிருந்தார்கள். 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி; ஆனால் ஒலிபரப்பாளர்கள், அறிவிப்பாளர் களைப் பொறுத்தவரை புதுமொழி என்ன வென்றால் 'அகத்தின் அழகு குரலில் தெரியும்'. அகத்தை, குண இயல்புகளைத் தூய்மையாக மனிதநேயத்தோடு வைத்திருந் தால் அது குரல் மூலம் வெளிப்படும். நம்மை அறியாமலே ஓர் ஆதர்ச சக்தி மூலம் ஒரு பிணைப்பு ஏற்படும் என்று பயிற்சிக்கு வருபவர்களுக்குச் சொல்வேன். அதில் மிகப் பெரிய உண்மை இருக்கிறது. செவி வழியாகப் போகிற குரல் ஒரு சகோதர வாஞ்சையை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது.
இனப்பிரச்சனை இலங்கையில் தோன்றிய பிறகு இன்னும் பல சிக்கல்கள் தோன்றின. பிரதேச வாரியாகச் சிக்கல்கள் தோன்றியதுபோல், தமிழர்களிடையே முஸ்லிம்கள் என்றும், கிறிஸ்தவர்கள் என்றும் சில கோடுகள் இருந்தன. ஆனால் அத்தனையும் தாண்டி எல்லா மக்களும் இன்றுவரை என்னை நேசிக்கின்றார்கள். காரணம் 83-ம் ஆண்டு கலவரத்திற்குப் பிறகு நான் மனிதநேயச் செய்திகளைச் சந்தர்ப்பம் கிடைக்கின்ற போதெல்லாம் ஜனரஞ்சகமான விடயங்களோடு கலந்து சொல்லி வந்ததால், தமிழ்மொழி சார்ந்து என்னை எல்லோருமே நேசிக்கின்றார்கள். அது எனக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியம்.
பொறுப்புணர்வு வேண்டும்
பல்கலைக்கழகத்தில் படிப்பதைவிட வானொலி அல்லது தொலைக்காட்சி ஊடகத்துறையில் பணியாற்றுவது பெரிய பாக்கியம். ஏனென்றால் தினந்தோறும் படித்துத் தகவல்களைத் திரட்ட வேண்டிய கட்டாயம் இந்தத் துறையில் உண்டு. அது அறிவியலாக இருக்கலாம், வரலாறாக இருக்கலாம், இலக்கியமாக இருக்கலாம், எல்லாவற்றையும் புரட்டி வைத்திருக்க வேண்டும். விரல் நுனியில் தகவல்களை வைத்திருந்தால் ஒரு திரைப்படப் பாடலை ஒலிபரப்பும் போதுகூட அதனோடு சம்பந்தப்படுத்திச் சொல்லும் வாய்ப்பு வரலாம்.
வானொலி வெறும் வர்த்தக ஊடகமாகி விட்டது. ஆனால் அது நமது சமூகத்திற்கு - தமிழ்ச் சமூகத்திற்கு - பெரிய தொண்டு ஆற்ற வல்ல ஊடகம். நமது பண்பாட்டுக் களங்களை அடுத்த தலைமுறைக்குப் பெருமையோடு அறிமுகப்படுத்தக்கூடிய, பேணக்கூடிய, இன்னும் செம்மையாக வளர்க்கக்கூடிய கடமை இந்த வானொலி, தொலைக்காட்சித் துறையினருக்கு உண்டு. இந்தப் பொறுப்புணர்வு வேண்டும். அது மட்டுமல்லாமல் உலக அறிவு வேண்டும். மொழி அறிவும்வேண்டும். இதர மொழி களிலும் பாண்டித்யம் வேண்டும். இத்தனை தகுதிகள் இருந்தால் வானொலி ஆரம்பிப் பது கிட்டத்தட்ட சர்வசாதாரணமாக ஆகிவிட்டது. வீட்டிற்குள்ளேயே சின்ன அறை இருந்தால் போதும். இணைய தளத்தின் மூலமாகவும், இப்போது செய்தி கள் ஊடாகவும், தேச எல்லைகளைத் தாண்டி வானொலி செல்லக்கூடிய சாத்தியங்கள் இருக்கிறது.
'உலகத் தமிழோசை' கனவு!
நானும் மிகப்பெரிய பேராசையுடன் இருக்கிறேன். பல்வேறு வானொலிகள் உலகம் முழுவதும் இருந்தாலும்கூட, இந்த வானொலிகளையெல்லாம் ஒன்றிணைக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு நீண்ட காலமாக இருக்கிறது. ஆனால் வெறும் கையால்தான் முழம் போட்டுக் கொண்டிருக் கிறேன். இதற்கு நிதி அதிகம் தேவை. என்னுடைய ஆசையெல்லாம் செய்திகள் ஊடாக உலகத் தமிழ் வானொலி நிலையங் களை எல்லாம் ஒன்றிணைக்க வேண்டும். 24 மணி நேரமும் ஒலிக்கும் அந்த வானொலி உலகம் முழுவதும் கேட்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள வானொலி அமைப்பினருக்கும் ஒரு மணி நேரம் அல்லது அரை மணிநேரம் நேரம் ஒதுக்க வேண்டும். ஒரே அலைவரிசையில் உலகம் முழுவதும் இந்த வானொலியைக் கேட்க வேண்டும். அதை உலகத் தமிழோசை என்ற பெயரிலே அமைக்க வேண்டும். அது காலத்தின் கட்டாயம்.
மனிதர்களைப் படித்தேன்
கனடாவிலிருந்து வெளிவரும் 'பரபரப்பு' என்ற பத்திரிகையில் மெல்லிசையின் வரலாற்றை எழுதியிருக்கிறேன். அதற்கு முன்பு ஆனந்தவிகடன் பவளவிழா மலரில் ஒன்றிரண்டு கட்டுரைகள் எழுதியிருந்தேன். நாடகங்கள் எழுதியிருக்கிறேன். வரும் நாளில் இரண்டு நூல்கள் எழுதத் திட்ட மிட்டிருக்கிறேன். ஒலிபரப்புத் துறையிலே வரப்போகும் புதிய தலைமுறைக்கு வழி காட்டியாக - என்னுடைய சுயசரிதத்தை அல்ல - இதுவரை நான் கற்ற விடயங் களையும், விஞ்ஞான யுகத்திலே எத்தனை நவீன விஞ்ஞானக் கருவிகள் வந்தாலும் வானொலியை முன்னிலையில் வைத்திருப்பதற்கான ஆலோசனைகளையும் எழுதலாம் என்று இருக்கிறேன்.
இரண்டாவது புத்தகம் 'மனிதர்களை படித்தேன்' என்ற தலைப்பில் இருக்கும். நாம் கலாசாலையில் படிப்பதைவிட, வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களிடம் கற்றுக் கொள்வதுதான் ஏராளம். 'அல்லன களைந்து நல்லன மட்டும் தெரிந்து', ஒருவரைப் பற்றி குறைகளைச் சொல்லாமல் நிறைகளை மட்டும் எடுத்துச் சொன்னால் வாசிப்பவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். எனவே நான் சந்தித்த மனிதர்களிலிருந்து நல்ல விடயங்களையெல்லாம் திரட்டி 'மனிதர்களைப் படித்தேன்' என்ற நூலை எழுத திட்டமிட்டிருக்கின்றேன். இன்னும் ஓராண்டுக்குள் நிறைவேறும் என்று நினைக்கிறேன்.
நேர்காணல், தொகுப்பு: மணி மு. மணிவண்ணன் படங்கள் : ஆஷா மணிவண்ணன் |