ஆத்ம சாந்தி - அத்தியாயம் 15
பரத் வெளியேற்றம்

பரத் ஆராய்ச்சிக்கூடத்துக்கு வெளியே சோபாவில் இடிந்துபோய் அமர்ந்தான். கேந்திராவைச் சந்தித்த நாளிலிருந்து அவன் வாழ்க்கையில் எல்லாமே தன்னிச்சையாக நடந்தன. இப்போது ஆராய்ச்சிக்குழுவிலிருந்து விலக்கப்பட்டதும் அப்படியே என்று நினைத்தாலும், காரணத்தைத் தெரிந்துகொள்ளாமல் அப்படியே ஏற்றுக்கொள்ள அவனால் முடியவில்லை. விஷ்வனாத்தும் கேந்திராவும் மீட்டிங்கிலிருந்து வந்ததும் காரணத்தைத் தெரிந்துகொண்டு பிறகு அடுத்த நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்தான். ஆனால் அந்த நினைப்பிலும் சீக்கிரம் மண்விழும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

"ஹே பரத் என்ன ஒரு வாரம் லீவுன்னு சொல்லிட்டு கிட்டத்தட்ட ஒருமாசம் அப்ஸ்காண்ட் ஆயிட்ட? என்ன பாஸ் டோஸ் விட்டாரா? முகம் வாடியிருக்கு?" என்றவாரே அந்த சுற்றுப்புறத்துக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாமல் அப்போதுதான் மலர்ந்த ரோஜாவைப்போல மலர்ச்சியாக வாணி அவனருகில் வந்து உட்கார்ந்தாள்.

ஒருநிமிடம் வாணியிடம் ஆராய்ச்சியிலிருந்து விலக்கப்பட்டதைச் சொல்லலாமா என்று நினைத்தவன், விஷ்வனாத்திடம் காரணத்தைத் தெளிவுபடுத்திக்கொள்ளாமல், வாணியிடம் கூடச் சொல்லவேண்டாம் என்று தீர்மானித்துக்கொண்டான். "ஒண்ணுமில்லை வாணி, ஒரு வாரத்துல வந்துடணும்னுதான் இருந்தேன். ஆனா காரியமெல்லாம் முடிஞ்சு கனகராஜ் அங்கிள் குடும்பம் சுமுகமாகறவரை மனோகருக்கு உதவியா இருக்கவேண்டியிருந்தது. அதான் ஒரு மாசமாயிடுச்சு. பாஸ் ஒண்ணும் சொல்லலை."

"அப்புறம் ஏன் உம்முனு இருக்கே? கம் சியர் அப், ஒரு காஃபி சாப்பிடலாமா?" பரத் சார்ஜ்போன செல்ஃபோன் போல இமைகளைக்கூடச் சிமிட்டாமல் இருக்கவே "கமான் நான் வாங்கித்தரேன்" என்று அவன் கைகளை உரிமையாகப் பிடித்து எழுப்பினாள். சாதாரண நேரமாயிருந்தால் பரத் பதற்றத்தோடு தன் கைகளை விடுவித்துக்கொண்டிருப்பான். ஆனால் அவனிருந்த மனநிலையில் வாணி தன்மீது உரிமை எடுத்துக்கொண்டதைப் புறக்கணிக்கவில்லை. இருவரும் கேன்டீனை நோக்கி நடந்தார்கள். எல்லாப் பணியாளர்களும் வழக்கமாக வேலை பார்ப்பதுபோல இருந்தாலும், அந்தக் கம்பெனிச் சூழலில் ஒரு பதட்டமும், பயமும் கலந்திருந்தன. வாணி பரத்தை மிக ஒட்டி நடந்ததால் சிலசமயம் இருவரின் கைகளும் இடித்துக்கொண்டன. பரத் தன் நினைவைக் கலைத்துக்கொண்டு சற்றே தள்ளிநடக்கத் தொடங்கினான். ஒன்றும் பேசாமல் நடப்பதும், வாணியின் அண்மையும் அவனுக்கு சரியாகப் படவில்லை. அவனே மவுனத்தைக் கலைத்தான். "கம்பெனி ஷேர் விலை விழுந்துட்டதே, இப்ப நம்ம ப்ராஜக்ட் மேலே தொடருமா இல்லை இதை நிப்பாட்டிருவாங்களானு யோசிச்சிட்டிருந்தேன். உனக்கு என்ன தோணுது வாணி?"

"நம்ம ப்ராஜக்ட் தொடரும். கவலையே படவேணாம். விஷ்வனாத் சாரும், கோபால் சாரும் ஒண்ணாயிருக்கிறவரை இந்தக் கம்பெனியையோ இந்த ப்ராஜக்டையோ ஒண்ணும் பண்ணமுடியாது. அவங்க ரெண்டுபேரும் இந்த கம்பெனி ஷேர்ல பாதிக்குமேலே வச்சிருக்காங்க. விஷ்வனாத் சார் இந்த ப்ராஜக்டை முடிக்காம விடமாட்டார். அதுக்கு என்ன அனுமதி வேணும்னாலும் கோபால்சாரோட சேர்ந்து அவரே எடுத்துக்கமுடியும். இப்ப போர்டு மீட்டிங் முடிச்சு நம்பிக்கை தராமாதிரி அறிவிப்பு வரும் பாத்துட்டேயிரு."

கேன்டீனின் ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு சுண்டுவிரல் சைசுக்கு ஒரு பித்தளை டம்ப்ளரில் நுரைபொங்கும் காஃபியைக் குடித்துக்கொண்டே, "கோபால் சாரும், விஷ்வனாத் சாரும் ஒண்ணாயிருக்கணுமே. அவங்களுக்குள்ள விரிசல் இருக்குனு கம்பெனி முழுக்க பேச்சாயிருக்கே" என்றான்.

"அதெல்லாம் பழைய கதை. ரெண்டுவாரம் முன்னால அதுக்கெல்லாம் முடிவு கட்டிட்டாங்க" என்று சொல்லிவிட்டு காஃபியைக் குடிக்கத்தொடங்கினாள் வாணி. இந்த காஃபி இடைவெளி பரத்தை எரிச்சலடைய வைத்தது, ஆனாலும் வாணியை அவசரப்படுத்தவும் விரும்பவில்லை. "ம்..ஒரு விதத்துல பழைய கதைதான். ரெண்டு ராஜாக்கள் சண்டை போடறதில்லைன்னு தீர்மானம் பண்ணினா, அந்த சமாதானத்தை உறுதிப்படுத்திக்க அந்தக் காலத்துல உடன்படிக்கை போட்டுப்பாங்க இல்லையா? அதேமாதிரி நம்ம கோபால் ராஜாவும், விஷ்வனாத் ராஜாவும் உடன்படிக்கை போட்டுக்கிட்டாங்க."

சஸ்பென்ஸ் தாளாமல், தன் ஈகோவை விட்டு. "வாணி, பீடிகை போதும், விவரத்தை சொல்லு" என்றான் பரத்.

"கேந்திரா மேடத்துக்கும், வினய்க்கும் ரெண்டுவாரம் முன்னால எங்கேஜ்மெண்ட் முடிஞ்சுருச்சு. நம்ம ப்ராஜக்ட் முடிஞ்ச உடனே, அவங்களுக்குக் கல்யாணம்னு தீர்மானம் பண்ணியிருக்காங்க. பெரிசா எல்லாருக்கும் இன்னும் அனவுன்ஸ் பண்ணலை."

"வாணி இது உண்மையான நியூஸா? நம்பமுடியலை."

"இதுல ஆச்சர்யப்பட என்ன இருக்கு. ரெண்டுபேரும் ஒண்ணா ஃபாரின்ல படிச்சவங்க. சின்ன வயசுலேருந்தே இவங்க ரெண்டுபேரயும் அடுத்த வாரிசா தயார் பண்ணும்போதே, இவங்களை ஜோடியாக்கறது கம்பெனி வளர்ச்சிக்கும் அவசியம்னு பேச்சு எப்பவும் இருந்தது. இட் வாஸ் ஜஸ்ட் எ மேட்டர் ஆஃப் டைம்."

பரத்தின் முகம் ஏன் ஃப்யூஸ்போன பல்புபோல இருண்டது என்றுகூடக் கவனிக்காமல் "ஆமா பரத் உன் கல்யாணம் எப்ப? ஏதாவது பொண்ணு பாத்து வச்சிருக்கியா?" என்று வாணி சீண்டினாள். பரத்தைச் சீண்டுவதுபோல, அவன் எண்ணத்தைத் தெரிந்துகொள்ள நினைத்தாள். பரத் இன்னும் வாணி கொடுத்த அதிர்ச்சிச் செய்தியை பலவிதமாகத் தன் மூளை அறைகளுக்குள் உருட்டிக்கொண்டேயிருந்தான். அதை அவனால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. ‘அப்ப கேந்திரா நடந்துக்கிட்டதெல்லாம் வெறும் வேஷமா? எதுக்காக தெருவுல சும்மா போயிட்டிருந்த என்னை இவ்வளவு பெரிய வாய்ப்பு குடுத்து, காதலிக்கற மாதிரி ஆசைகாட்டி இப்ப எந்தக் காரணமும் சொல்லாம,காலியான கார்ட்ரிட்ஜ் மாதிரி குப்பைத்தொட்டில போட்டுட்டாளே. இந்த வேலையினால அப்பாவுக்கு மேல பாசம் காட்டின கனகராஜ் அங்கிள் உயிரும் போச்சு. இப்ப இந்த ஆராய்ச்சிலேருந்தும் தூக்கிட்டாங்க.’ நினைக்க நினைக்க ஆத்திரம் பொங்கியது பரத்துக்கு. விறுவிறுவென இப்போதே மீட்டிங் நடக்கும் போர்டு ரூமுக்குப்போய் கேந்திராவை நேருக்குநேர் கேட்டுவிட நினைத்தான். ஆனால் அவனுக்குத் தன்னை உபயோகப்படுத்தி வீசி எறிந்துவிட்டதாகத் தோன்றியது. இனி இவர்கள் முகத்தில் விழிப்பதோ இந்த இடத்தில் இருப்பதோகூட அவமானம் என்று தோன்றியது. நடையை வேகப்படுத்தினான். அவன் பின்னால் வாணி ஓட்டமும் நடையுமாகத் தொடர்ந்து, "சார் என்ன திடீர்னு வேகம். பொறுமை. உங்க கல்யாணத்தைப்பத்தி நான் பேசக்கூடாதுன்னா பேசலை" என்று சொல்லி, பரத்தின் மனநிலையை உணராமல் மேலும் ஒரு காயத்தை உண்டாக்கினாள்.

ஆராய்ச்சிக்கூட வரவேற்பரை சோஃபாவில் தன் உடல் பாரத்தோடு, மன பாரத்தையும் சேர்த்து தொப்பென்று போட்டான் பரத். "வாணி வேற விஷயங்களைப் பத்திப் பேசற மனநிலையில இல்லை. சாரி. எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீங்களா?" என்று கேட்டுவிட்டு அவள் பதிலுக்குக் காத்திருக்காமல், மேசைமீதிருந்த ஒரு பத்திரிகையை அடிமானமாக வைத்து, ஒரு வெள்ளைத்தாளில் தன் ராஜினாமாவைச் சுருக்கமாக எழுதினான். அவன் என்ன எழுதுகிறான் என்று பார்க்கும் ஆர்வம் இருந்தாலும், வாணி நாசூக்கு கருதி முகத்தை வேறு எங்கோ திருப்பிக்கொண்டாள். தன் ராஜினாமாக் கடிதத்தை ஒரு கவரில் போட்டு, உயர்திரு விஷ்வனாத் கவனத்துக்கு என்று அதன்மேல் எழுதி வாணியிடம் நீட்டினான். "வாணி எனக்கு உடம்பும் மனசும் சரியில்லை. இன்னும் சிலநாள் லீவு கேட்டிருக்கேன். தயவுசெஞ்சு விஷ்வனாத் சார் வந்ததும் மறக்காம குடுத்துடு. தேங்க்ஸ்" என்றான்.

"பரத் ஏன் இப்படியெல்லாம் பேசறே? வேற ஏதாவது பிரச்சனையா? இல்லை நான் ஏதாவது உனக்கு தொந்தரவு குடுத்துட்டேனா?"

"சே சே... வாணி யூ ஆர் அ வெரி ஸ்வீட் கேர்ல். ஒண்ணும் பெருசா கவலைப்பட இல்லை. நான் இன்னும் கனகராஜ் அங்கிளோட இழப்புலேருந்து மீளலைன்னு தோணுது. என்னால இங்க நிம்மதியா வேலை பண்ணமுடியாது. இதுக்கு மேலே எதும் கேக்காதே." இன்னும் அங்கு நின்றுகொண்டிருந்தால் வாணியிடம் தன் பொய்யைத் தொடர்ந்து சொல்லமுடியாது என்று தோன்றியது. கீழே அடிமானமாக வைத்து எழுதிய பத்திரிகையைச் சுருட்டி அவளை ஒரு தட்டு தட்டிவிட்டு வேகமாக வெளியேறினான். வாணி அவனைப் புரிந்து கொள்ளமுடியாமல் திகைத்து நின்றாள்.

பஸ்ஸுக்காகக் காத்திராமல் சுள்ளென்று அடித்த வெய்யிலில் சாவிகொடுத்ததைப் போல மாங்குமாங்கென்று அந்தத் தார் சாலையில் மறைமலைநகர் ரயில்வே ஸ்டேஷனை நோக்கி நடந்தான். வியர்வையில் தொப்பலாக நனைந்து காலியான ரயில்வண்டியில் தனியாக அமர்ந்தான். அந்த வேளையில், ரயில் ஆளரவமின்றி இருந்தது. பரத்துக்குத் தனியாக அந்தப் பெட்டியில் இருந்தது ஒருவிதத்தில் தன் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதுபோல இருந்தது. அடுத்து என்ன? அடுத்து என்ன? யோசித்தவாறே, கையிலிருந்த பத்திரிகையை இறுக்கிச் சுருட்டி, பின் தன் பிடியை தளர்த்தினான். அது டைம் பத்திரிகை, அண்மை இதழ். அதன் அட்டைப்படத்தில் ஒரு சுருக்கங்கள் நிறைந்த ஆனால் ஒளிபொருந்திய மூதாட்டியின் படம் இருந்தது. அதன் அருகில் "இன்க்ரெடிபிள் இண்டியன் வுமன்" என்று அந்த அம்மாளின் கண்களைப்போலவே பெரிய எழுத்துக்களில் இடம்பெற்றிருந்தது. அதன்கீழே "ஸ்டோரி ஆஃப் வள்ளியம்மாள்" என்று இருந்தது. ஆம், அந்த பத்திரிகையில் இடம் பெற்றிருந்தது வள்ளியம்மாளின் படமும், கதையும்தான். பரத், தன் சுயபச்சாதாபத்தை ஒதுக்கிவிட்டு, பரபரப்பாக அந்தப் பத்திரிகையை வாசிக்கத் தொடங்கினான்.

*****


"என்னப்பா போன சுருக்குல வீட்டுக்கு வந்துட்ட? உடம்பு கிடம்பு முடியலையா?" கவலையோடு கேட்ட கஸ்தூரியிடம் "உடம்புக்கெல்லாம் ஒண்ணுமில்லைமா, சரி அப்பா எங்க?" என்றான் பரத்.

"ரேஷன்ல சக்கரை குடுக்கறாங்கனு போயிருக்காரு. இரு காபி தரேன்"

"அதெல்லாம் வேணாம், சாப்பிட்டுதான் வரேன். ஆபீஸ்ல வேலை விஷயமா உடனே பெங்களூர் போகணும். அப்பா வந்தா சொல்லிடு. இப்பவே கெளம்பறேன்."

"என்னடா, படபடன்னு வந்தே இப்பவே பொட்டிய கட்டிட்டு கெளம்பறேனு சொல்றே. அப்பா வரட்டும், அவர்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போ."

"இல்லம்மா, நேரமில்லை" சொல்லிக்கொண்டே, முகம் கழுவி, வேறுடை மாற்றி, ஒரு கைப்பெட்டியில் கைக்கு வந்த துணிகளை அடைத்துக்கொண்டு பரத் கிளம்பினான். "அப்புறம் நான் ஆபீஸ் விஷயமா போறது ரொம்ப ரகசியமான ஒரு ப்ராஜெக்டுக்காக. என் ஆபீசுலேருந்தே யாராவது ஃபோன் பண்ணினாகூட நான் எங்க போயிருக்கேனு தெரியாதுன்னு சொல்லிடு. நான் வரேன்." முப்பது செகண்டு ரேடியோ விளம்பரம்போல மறைந்தான் பரத்.

"ஆட்டோ"

"எங்க போகணும் சார்?"

"எக்மோர் ரயில்வே ஸ்டேஷனுக்கு." அன்று இரவுக்குள் கிராமத்துக்குப் போய் வள்ளியம்மாளைச் சந்தித்துவிடும் தீர்மானத்தோடு சொன்னான் பரத்.

*****


பரத் விடுப்பிலிருந்த சில வாரங்களில் கேந்திரா மோட்டார்சிலும், கேந்திராவின் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. அந்த மாற்றத்தை மட்டும் அறிந்த பரத்துக்கு அது ஏன் நடந்தது என்ற காரணத்தைத் தெரிந்துகொள்ள பொறுமை இல்லை. அவன் பொறுமையாக கேந்திராவிடம் நேரடியாக பேசியிருந்தால் அவன் முடிவு வேறுமாதிரி இருந்திருக்கும்.

கனகராஜின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டபோது, பரத்தைக் குறிவைத்து தாக்குதல் நடந்தது என்று அறிந்ததிலிருந்து கேந்திராவுக்கு நிம்மதி போய்விட்டது. இதிலிருந்து பரத்தைக் காப்பாற்ற, விஷ்வனாத்திடம் வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர வேறு வழியில்லை என்று நினைத்தாள். அன்றிரவு விஷ்வனாத் தன் வீட்டில் இருந்த அவரது ரகசிய ஆராய்ச்சிக்கூடத்தில் தனியாக இருந்தபோது, கேந்திரா அவரது கவனத்தைக் கலைத்தாள்.

"கேந்திரா மணி பதினொண்ணு ஆகுது. இன்னும் தூங்கலை?"

"இல்லப்பா, உங்ககிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசணும்."

"எதுவானாலும் நாளைக்குப் பேசலாம். நான் அதைவிட முக்கியமான ஒரு வேலையில இருக்கேன். சாரி" என்று வேலையைத் தொடர்ந்தார்.

"என் கல்யாணத்தைவிட முக்கியமான விஷயமா?"

இந்த வார்த்தைகள் விஷ்வனாத்தை அசைத்தன. "அப்ப நிச்சயம் பேசணும். கமான் ஹூ இஸ் தி பாய்?"

"எப்படி நான் காதலிக்கிறேன்னு முடிவு பண்ணீங்க?" என்ற கேந்திரா மனதுக்குள் ‘இந்த அப்பா எப்பவும் இப்படித்தான். சுத்திவளைக்கிறதெல்லாம் தெரியாது. பட்டுனு விஷயத்துக்கு வந்துடுவார்’ என்று செல்லமாகச் சலித்துக்கொண்டாள்.

(தொடரும்)

சந்திரமௌலி,
ஹூஸ்டன்

© TamilOnline.com