'ஒரு அரிசோனன்' எழுதிய 'தமிழ் இனி மெல்ல…'
'தமிழ் இனி மெல்ல…' என்னும் இப்புதினத்தின் ஆசிரியர் திரு. மகாதேவன் ('ஒரு அரிசோனன்') காரைக்குடியில் பிறந்தவர். ஆங்கிலம், ஹிந்தி மொழிகளிலும் புலமையுடையவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம்பெற்று, திரு. APJ அப்துல்கலாமின் தலைமையின்கீழ் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தில் (ISRO) சிலகாலம் பணிபுரிந்த இவர், அமெரிக்காவில் பொறியியல் மேற்படிப்பை முடித்து இன்டெல், மோட்டோரோலா போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். அமெரிக்காவிலுள்ள அரிசோனா (Arizona) மாகாணத்தில் வசித்துவரும் திரு. மகாதேவன், 'ஒரு அரிசோனன்' என்ற புனைபெயரில் திண்ணை, தமிழ் இந்து, வல்லமை, இணையவெளி போன்ற இணைய இதழ்களில் தொடர்ந்து எழுதிவருகிறார்.

'தமிழ் இனி மெல்ல...' இவரது முதல் புதினம். இதை 'The Golden Scroll' என்னும் பெயரில் ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கிறார் இனி கதைக்குள் நுழைவோம்.

இரண்டு பாகங்களைக் கொண்டது இப்புதினம். முதல்பாகம் 2411ம் ஆண்டின் தமிழகத்தைக் கதைக்களமாகக் கொண்டது. சென்னையின் சீன நிறுவனமொன்றில் பெரிய பொறுப்பிலிருக்கும் ஷிஃபாலி, அவளுடைய மகளும், கல்லூரி மாணவியுமான நிமிஷா, அவர்கள் வீட்டில் எடுபிடிகளாக வேலைசெய்யும் காமாட்சி, அவளுடைய தம்பியான சிறுவன் ஏகாம்பரநாதன் ஆகியோர் இதன் முக்கியப் பாத்திரங்கள். ஒருவர் மொழியை மற்றொருவர் அறிந்துகொள்ள இயலாத அச்சூழ்நிலையின் சிரமத்தை மொழிமாற்றுக்கருவி (translator) போக்குகின்றது.

வேலை நிமித்தமாய்ச் சீனா செல்லும் ஷிஃபாலியை வழியனுப்பத் தஞ்ஜூவிலுள்ள ஹோட்டல் ராஜ்ராஜில் தங்கியிருக்கின்றனர் நிமிஷா, காமாட்சி, மற்றும் ஏகாம்பரநாதன். சீனா சென்றபின் தன் மகளைக் கவனித்துக்கொள்ளவும், வீட்டைப் பாதுகாக்கவும் அழகேசன் எனும் எடுபிடிப் பிரிவைச் சேர்ந்த மல்யுத்தவீரன் ஒருவனை நியமிக்கிறாள் ஷிஃபாலி. தஞ்ஜூ பெரியகோயிலில் பணிசெய்துவரும் மற்றொரு எடுபிடியான ஈஸ்வரன், தன் சொந்தமுயற்சியால் இந்தி பேசக் கற்றுக்கொண்டு, ஷிஃபாலியின் கருணைக்குப் பாத்திரமாகி, இழந்த பணியை மீண்டும் பெற்றிருக்கிறான்.

ஷிஃபாலியை அனுப்பிவிட்டு ஹோட்டலுக்குத் திரும்பும் நிமிஷா, காமாட்சி, ஏகாம்பரநாதன் ஆகியோர், வான்வெளி அதிசய நிகழ்வொன்றைச் சந்திக்கின்றனர். அதன் விளைவாய் மின்சாரம், தொலைபேசி, விமான சேவை, வாகனப் போக்குவரத்து அனைத்தும் முடங்கிவிட, அவர்கள் 18ம் நூற்றாண்டின் வாழ்க்கை வசதிகளுக்கே சென்றுவிடுகிறார்கள். இந்த அதிசய நிகழ்வையும், அதன் பின்னணியிலான வானியல் காரணிகளையும் அறிவியல் நோக்கில் அழகாக விளக்கியிருக்கிறார் 'ஒரு அரிசோனன்'.

நிமிஷா, காமாட்சி, ஏகாம்பரநாதன் முதலியோர் ஈஸ்வரனின் சொந்தக் கிராமத்திற்குச் சென்று வாழ்க்கையைத் தொடருகின்றனர். ஒருநாள், கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோயிலில் வழிபட்டுக்கொண்டிருக்க, அப்போது அங்கே நிலநடுக்கமேற்பட்டு, ஓர் அரிய பொன்னோலைச்சுருள் அவர்கள் கைகளுக்குக் கிடைக்கின்றது. அந்தப் பரபரப்பான தருணத்தில் புதினத்தின் முதல் பாகத்தை நிறைவுசெய்துவிடுகிறார் ஆசிரியர்.

25ம் நூற்றாண்டின் 'அல்ட்ரா மாடர்ன்' தமிழகத்தை முதல்பாகத்தில் கண்முன் நிறுத்திய ஆசிரியர், இரண்டாம் பாகத்தில் கி.பி. பத்து, பதினோராம் நூற்றாண்டுத் தமிழகத்தில் மாமன்னர் ராஜராஜரின் பொற்காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்கினறார். ராஜராஜரின் வீரம், தமிழார்வம், மதிநுட்பம் போன்றவை மெய்சிலிர்க்க வைக்கின்றன. அவரது மைந்தரான முதலாம் ராஜேந்திரரும் தந்தையையொத்த பெருவீரர்! இதில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவர்கள் ராஜராஜரின் ஆசிரியரான கருவூர்த்தேவர், அவருடைய மாணவர் சிவசங்கர சிவாசாரியார் இருவரும்தான். கருவூரார் தமிழ்மீது அளவிறந்த பற்றுக்கொண்டு, சோழ நாடெங்கும் அதைப் பரப்பவேண்டும் என்னும் ஆவலுடன் ராஜராஜரை வழிநடத்துகின்றார்.

சிவசங்கர சிவாசாரியாரே இரண்டாம் பாகத்தின் நாயகன் என்று சொல்லுமளவுக்கு அப்பாத்திரத்தை நுட்பமாகச் செதுக்கியிருக்கிறார் ஆசிரியர். சிவன்கோயில் பூசாரியான அவ்விளைஞர் அறியாத கலையில்லை. முதல்பாகத்தின் கதை மாந்தர்களை இரண்டாம் பாகத்தின் பாத்திரங்களோடு அழகாக ஆசிரியர் இணைத்துக்காட்டியிருப்பது ரசிக்கத்தக்கது. முதலாம் ராஜேந்திரர் முடிசூடும் காட்சியையும் கதையில் காண்கிறோம்.

ஆயினும், கருவூரார் வழிகாட்டலில் ராஜராஜர் தொடங்கிய தமிழ்ப்பணிகள் என்னவாயின? ராஜராஜருக்குப்பின் ராஜேந்திரர் அவற்றைத் தொடர்ந்தாரா? முதல்பாகத்தில் ஈஸ்வரன் பொன்னோலைச்சுருளைப் படித்துக்கொண்டிருக்கையில் நாம் விடைபெற்று வந்தோமே, அவ்வோலையின் மூலம் தமிழர்களின் பண்டைச்சிறப்பைப் படித்தறிந்த ஈஸ்வரன், நிமிஷா உள்ளிட்டோர் அதன்பின் எவ்வாறு நடந்துகொண்டனர்? இந்தக் கேள்விகள் நம் மனதை அரித்தெடுக்கின்றன. “உங்கள் வினாக்கள் அனைத்திற்குமான விடைகளைத் தாங்கிப் புதினத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் பாகங்கள் விரைவில் வெளிவரவிருக்கின்றன; அவற்றையும் படித்து மகிழுங்கள்!” என்று திரையை இறக்குகிறார் இந்தக் கெட்டிக்கார நூலாசிரியர்.

மிடுக்கான நடை, சம்பவங்களைக் கச்சிதமாய்க் கோத்திருக்கும் பாங்கு இவற்றில் ஆசிரியரின் தேர்ந்த எழுத்துத்திறன் தெரிகிறது. ஆங்கில மோகத்தால் மழுங்கிவரும் நம்மவரின் தமிழுணர்ச்சியைக் கூர்தீட்டிக்கொள்ள இதுபோன்ற புதினங்களைப் படிக்கவேண்டியது அவசியம். காலத்தின் தேவையறிந்து மாறுபட்ட பார்வையில் புதினத்தைப் படைத்திருக்கும் 'ஒரு அரிசோன'னைப் பாராட்டித்தான் ஆகவேண்டும். புதினத்தை வாங்க விரும்புவோர் மின்னஞ்சலில் தொடர்பு கொள்க: oruarizonan@gmail.com

மேகலா ராமமூர்த்தி,
ஆபர்ன், அலபாமா

© TamilOnline.com