தெனாலிராமன் விஜயநகரப் பேரரசின் மன்னர் கிருஷ்ண தேவராயரின் சபையில் அமைச்சனாக இருந்தான். ஒருமுறை அவன் அடர்ந்த காட்டுக்குள் வழிதவறி சுற்றிச்சுற்றி வந்துகொண்டே இருந்தான். அப்போது வயதான சாது ஒருவரை எதிரிலே கண்டான். அவரைப் பார்த்து, "நீங்கள் எப்படி இங்குவந்து மாட்டிக் கொண்டீர்கள்?" என்று கேட்டான்.
அவர் சிரித்தார். "மகனே! எந்தச் சக்தி உன்னை இங்கே இழுத்துவந்ததோ அதே சக்திதான் என்னையும் இழுத்து வந்தது. இன்னும் சில தினங்களிலே நான் இந்த உடலை நீத்துப் போகப்போகிறேன். இத்தனை ஆண்டுகளாக பொக்கிஷமாக நான் பாதுகாத்து வந்த ஒரு மந்திரத்தை உனக்கு நான் சொல்லிக்கொடுக்கிறேன். அதனால் நீ பெரிதும் பயனடைவாய்" என்று சொல்லி, தெனாலி ராமனின் காதிலே அதை ஓதினார்.
எதிர்பாராமல் கிடைத்த இந்தப் பரிசால் தெனாலிராமன் மகிழ்ந்துபோனான். காட்டினுள் இருந்த ஒரு காளிகோயிலுக்குச் சன்னிதியில் அமர்ந்து தொடர்ந்து அந்த மந்திரத்தை ஜபித்தான். சற்றுநேரத்தில் காட்டுவாசிகளான ‘கோயர்கள்' அங்கே வந்தார்கள். காளிக்கு ஒரு வெள்ளாட்டை பலி கொடுப்பதற்காக அங்கே வந்தார்கள். தெனாலிராமன் காளி சிலைக்குப் பின்னால் நின்றுகொண்டு, காளிமாதா பேசுவதுபோல "எல்லா உயிரிலும் நான் இருக்கிறேன். இந்த வெள்ளாட்டை இப்போது நீங்கள் வெட்டினால் நான் கோபம் கொள்வேன். உங்களைச் சபிப்பேன்" என்று சொன்னான். அவர்கள் கத்தியைக் கீழே போட்டுவிட்டு ஓட்டம்பிடித்தனர்.
அவர்கள் சென்றதும் மீண்டும் அந்த மந்திரத்தை ஓயாமல் சொன்னான். அவனது சாதனைக்கு மகிழ்ந்த காளிமாதா அவன் முன்னால் ஆயிரம் தலைகளோடும், ஈராயிரம் கைகளோடும் தோன்றினாள். அவன் மிகவும் தைரியத்தோடு பார்த்தபடி நின்றான். காளி அவனைப் பார்த்து, "மகனே, உன் பக்தியால் மகிழ்ந்தேன். உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டாள். அவனோ காளியைப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தான்.
காளிமாதா இரண்டு கிண்ணங்களை அவன் முன்னால் நீட்டினாள். "இதில் ஒரு கிண்ணத்தில் தயிர்சாதம் இருக்கிறது. மற்றொன்றில் பால்சாதம் இருக்கிறது. தயிர் செல்வத்தைக் குறிக்கிறது; பால் ஞானத்தைக் குறிக்கிறது. தயிரன்னத்தை எடுத்துக்கொண்டால் நீ புகழ்பெற்று செல்வந்தனாக வாழ்வாய். பாலன்னத்தை அருந்தினால் ஒப்பற்ற அறிவாளியாகப் போற்றப்படுவாய். எது வேண்டுமோ எடுத்துக்கொள்" என்று கூறினாள். தெனாலிரான் குழம்பினான். அவன் சாமர்த்தியமாக காளிமாதாவைப் பார்த்து, "அம்மா இதிலே எதன் சுவை அதிகம்?" என்று கேட்டான். அதற்குக் காளிமாதா, "எனக்கு எப்படித் தெரியும்? சிறிது சுவை பார்த்துவிட்டு ஏதேனும் ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொள்" என்று கூறினாள்.
காளிமாதா கிண்ணங்களை அவன் முன்னால் நீட்டியதுதான் தாமதம், தெனாலிராமன். இரண்டையும் எடுத்துக் கலந்து அப்படியே விழுங்கிவிட்டான்.
காளிமாதாவுக்குக் கோபம் வந்துவிட்டது. "நான் என்ன சொன்னேன்? நீ என்ன செய்கிறாய்? நான் உன்னை சபிக்கப் போகிறேன்" என்றாள். அவன் மிகவும் பவ்வியமாக கைகளைக் கட்டிக்கொண்டு, "அம்மா, உலகத்தில் வாழ்வதற்குச் செல்வமும் வேண்டும்; அறிவும் வேண்டும். அதனால்தான் இரண்டையும் சாப்பிட்டேன். நீ என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏற்கிறேன்" என்று அவன் சொல்ல, காளி கடகடவென்று சிரித்தாள்.
அவனுடைய தோற்றம், முகபாவனை எல்லாம் அவளுக்குச் சிரிப்பை வரவழைத்தது. "நான் கொடுக்கும் தண்டனைகூட உனக்கு நல்லதாகவே அமையும். நீ 'விகடகவி' ஆவாயாக!" என்று வாழ்த்தினாள். கிருஷ்ண தேவராயரின் அவையிலே நகைச்சுவையோடு பேசுகிற அறிவார்ந்த அமைச்சனாக தெனாலிராமன் புகழ்பெற்றான்.
(இந்தக் கதை 'பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் சின்ன கதைகள்' என்ற பெயர்கொண்ட MP3 CDயில் கவிஞர் பொன்மணி அவர்களால் சொல்லப்பட்டது. வெளியீடு: Sri Sathya Sai Books and Publications Trust, TamilNadu, Chennai.)
பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா |