அன்புள்ள சிநேகிதியே:
என்னுடைய நெருங்கிய தோழியின் சார்பாக எழுதுகிறேன். என்னைவிட மிகவும் வயதில் சிறியவள். ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஒரு பார்ட்டியில் அவளைச் சந்தித்தேன். அவள், விசாவின் காரணத்தால் work permit கிடைக்காமல் கொஞ்சம் depressed ஆக இருந்தாள். ஆறுதல்சொல்லி என் குழந்தைகளுக்கு பேபி சிட்டர் ஆக ஒருநாள் இருக்கச் சொல்ல, எங்கள் குடும்பத்துடன் மிகவும் ஒன்றிப்போனாள். என்னிடம் தங்கள் குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொண்டு நான் சொல்லும் ஆலோசனைகளைக் கேட்டுக்கொள்வாள். அவ்வப்போது அவளுக்கு மனதைரியம் கொடுப்பேன். கொஞ்சம் பயப்படும் சுபாவம் உண்டு. இரண்டு வருடமாக ஒரு நல்ல வேலை கிடைத்து, கொஞ்சம் stability வந்திருக்கிறது. அவள் கணவர் I.T.யில் வேலை. எப்பவும் பிசி. அடிக்கடி பார்த்துக்கொள்ளும் சந்தர்ப்பம் இல்லை. பார்த்துக்கொண்டாலும் "ஹலோ... ஹலோ.." தான். மிகவும் அமைதியான டைப். ஆறு வருடங்கள் கழித்து, அவள் வாழ்க்கையில் எதிர்பார்த்த ஒரு நல்ல விஷயத்தைப்பற்றிச் சொன்னாள். கர்ப்பம் கன்ஃபர்ம் ஆகிவிட்டது என்பதை எனக்குத்தான் முதலில் தெரிவித்தாள். நானும் சந்தோஷப்பட்டேன். அப்புறம் அவளுக்கு 'baby shower' நான் ஏற்பாடு செய்ய ஆரம்பித்தேன். அந்தச் சமயத்தில் நான் என்னுடைய ஒரு உறவினர் பெயரைச்சொல்லி ஒரு சம்பவத்தை விவரித்துக் கொண்டிருந்தேன். அவருக்கு ஒரு unique name. திடீரென்று அவளுடைய போக்கில் ஒரு மாற்றம். ஒரு அரைமணி நேரம் ஏதோ பேசிக் கொண்டிருந்துவிட்டு, அவசரம் அவசரமாகக் கிளம்பிப் போய்விட்டாள். எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. ஆனால் ஒன்றும் வற்புறுத்திக் கேட்கவில்லை.
இரண்டு நாள் அவளிடமிருந்து எந்த ஃபோனும் வராததால் நானே கூப்பிட்டேன். வீட்டிற்கு வரச்சொன்னேன். தாயாகும் நிலையில் அவளுக்கு என்ன பயமோ, கிலியோ என்று தெரியவில்லை. அவளுக்கு அம்மாவேறு இல்லை. அந்த வீக் எண்ட் ஒருமாதிரி வற்புறுத்தி சாப்பிட அழைத்தேன். மனதில் என்ன இருந்தாலும் சொல்லச் சொன்னேன். திடீரென்று என் உறவினர் பெயரைச் சொல்லி எனக்கு எந்த வகையில் உறவு, எங்கே இருக்கிறார் என்ற விவரத்தைக் கேட்டாள். நான் எல்லாவற்றையும் சொன்னேன். என் வயது அந்த உறவினருக்கு. திருமணம் ஆகி அவருடைய 2 பெண்களும் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற விஷயம் தெரிந்தவுடன் அவள் முகத்தில் நிம்மதி தெரிந்தது. அப்புறம் அவள் மெள்ள என்னிடம் அதே பெயரைக் கொண்ட ஒருவரைக் கல்லூரிப் படிப்பின்போது காதலித்ததாகவும் ஜாதி வித்தியாசத்தில் அவள் அப்பா மிகவும் கெஞ்சி, அந்தக் காதலைத் துண்டித்ததாகவும் சொன்னாள். மூன்று வருடம் கழித்து அப்பா பார்த்து முடித்த பையனைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாள்.
திருமணத்திற்கு முன்னால் அவள் கணவன் கேட்டிருக்கிறான். "அழகாக இருக்கிறாய். ப்ரொஃபஷனல் காலேஜில் படித்திருக்கிறாய். ஏதேனும் காதல் விவகாரம் இருந்தால் சொல்லிவிடு" என்று வெளிப்படையாகவே கேட்டிருக்கிறான். அப்போது எல்லாவற்றையும் சொல்லி, திருமணம் நின்றுவிட்டால் அப்பாவுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்று பயந்து உண்மையைச் சொல்லவில்லை. இவள் கணவன் அதிகம் பேசாமல் இருந்தாலும் மிகவும் உண்மையாக நடந்து கொண்டிருக்கிறான். செயலில் அவளிடம் அதிக அக்கறை காட்டியிருக்கிறான். திடீரென்று நான் சொன்ன பெயரால் அந்தப் பழைய நினைவுகள் அவளுக்கு வந்து தன் கணவருக்கு தான் துரோகம் செய்துவிட்டது போலக் குற்ற உணர்ச்சி ஆகிறதாம். தூக்கம் வருவதில்லை. எப்போது பார்த்தாலும் ஒரு பயம். திடீரென்று இந்தச் செய்தியை எப்படிச் சொல்வது, இதை எப்படி ஏற்றுக்கொள்வான்? அவன் பேசும் 'டைப்' இல்லை. அதனால் என்ன ரியாக்ஷன் இருக்கும் என்று ஊகிக்க முடியவில்லை. அவளிடம் வைத்த நம்பிக்கையெல்லாம் போய்விடுமோ என்று பயப்படுகிறாள்.
என்னை ஆலோசனை கேட்டாள். எனக்கு இதை எப்படி 'டீல்' செய்வது என்று தெரியவில்லை. சொன்னால் என்ன விளைவு இருக்கும் என்று ஊகிக்க முடியவில்லை. "இது ஒன்றும் பெரிய துரோகம் இல்லை. 10 வருடத்துக்கு முன்னால் இருந்த கதை. எல்லா டீனேஜர்ஸுக்கும் இதுபோன்ற அனுபவம் இருக்கும்" என்று சொல்லவும் பிடிக்கவில்லை. இந்தக் குற்ற உணர்ச்சி அவள் பயத்தை அதிகரித்து அந்தக் குழந்தைக்கு ஏதேனும் பாதகம் விளையுமா என்று தெரியவில்லை. நீங்கள் என் நிலையில் இருந்தால் என்ன செய்வீர்கள்?
இப்படிக்கு ...................
அன்புள்ள சிநேகிதியே
'குற்ற உணர்ச்சி' (செய்தது சின்னதோ, பெரியதோ) மனிதர்களுக்கு மனச்சாட்சி இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. பயம்தான் குற்ற உணர்ச்சிக்கு ஆதாரமாகச் செயல்படுகிறது. நாம் செய்யும் அல்லது செய்த செயல் பகிரங்கப்பட்டுவிட்டால் ஏற்படும் விளைவுகளை மனம் எண்ணும்போதெல்லாம் 'குற்ற உணர்ச்சி' பயமாக வெளிப்படுகிறது. எவ்வளவுக்கெவ்வளவு மனச்சாட்சிக்கு உடன்பட்டுச் செயல்படுகிறோமோ அந்த அளவு குற்ற உணர்ச்சியை நம்மால் கட்டுப்படுத்த முடியும். ஆனால் அறியாமல், புரியாமல் செய்யும் குற்றங்கள் பின்விளைவுகளை ஏற்படுத்தாவிட்டாலும் கூட, மனிதாபிமானத்தால் பிற்காலத்தில் அந்தக் குற்ற உணர்ச்சி'யால் தாக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். அதற்குப் பிற்காலத்தில் ஈடு செய்தவர்களும் இருக்கிறார்கள்.
அறிந்து செய்யும் குற்றங்கள், சுயநலம், சுயபாதுகாப்பு, சுயமுன்னேற்றம் என்று சுயத்தைச் சார்ந்தவை. அவை மனசாட்சியைக் கரையான்போல அரிக்கும். குற்றம் தெரியாமல் இருக்கப் பொய் சொல்கிறோம். பின்விளைவுகளைச் சந்திக்கப் பிடிக்காமல் இல்லை, பயத்தால்.
அதே பின்விளைவுகளை எதிர்பார்த்து பயத்தால் சிலசமயம் ஒத்துக்கொண்டும் விடுகிறோம். குற்றம் என்பது சட்டத்தைமட்டும் பொறுத்ததல்ல. அது நாட்டுக்கு நாடு மாறும். கலாசாரத்துக்குக் கலாசாரம் மாறும். குற்றம் பெரியதாகத் தெரிவதும், சிறியதாகத் தெரிவதும் சமூக நீதிகளையும் குடும்ப விதிகளையும் பொறுத்தது.
மொத்தத்தில் சுயம் பயத்தை உண்டுபண்ணும் சமயத்திலெல்லாம் குற்ற உணர்ச்சியைத் தூண்டிவிடும்.
உங்கள் சிநேகிதி விஷயத்திலும் அதுதான் நடந்திருக்கிறது. சிறுவயதில் தாயை இழந்த காரணத்தால் ஒரு பாதுகாப்பின்மை. அவருடைய பய உணர்ச்சி, மற்றவர்களைவிடச் சிறிது அதிகமாக இருக்கலாம். வருங்காலக் கணவரிடம் பலவருடங்கள் முன்னால் உண்மையை மறைத்ததும் இந்த பய உணர்ச்சியினால்தான். இப்போது சொல்லவிரும்புவதும் இந்த பய உணர்ச்சியால்தான். தான் தாயாகப் போகும் நிலையில் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் இந்த உணர்ச்சியைப் பெருக்கி இருக்கலாம்.
எனக்கு இன்னும் சில விவரங்கள் தெரியாமல் இருப்பதால், எந்தக் கருத்தையும் தீர்க்கமாகச் சொல்லமுடியவில்லை. எனக்கு அந்தக் கணவரின் 'value system' தெரியாது. அவர் தனக்குவரும் மனைவி எந்த ஆணையும் முன்னால் ஏறிட்டுப் பார்த்திருக்கக் கூடாது (பழைய சினிமாக்களில் வருவதுபோல) என்று நினைப்பவரா என்று சந்தேகமாக இருக்கிறது. 'காதல் ஒரு குற்றம் என்றால் எல்லோருமே கைதிகள்தான்' ஆனால், அந்தக் காதலை உடலின் ஆழம், உள்ளத்தின் ஆழத்தை வைத்துக் கணிக்கும்போது கலாசாரம் அங்கே கோட்பாடுகளைக் கொண்டுவருகிறது. அந்த படித்த, இளைய சமுதாயத்தைச் சேர்ந்த கணவர். எந்த அளவுக்குக் குற்றமாகவோ அல்லது மனித இயல்பாகவோ இதை ஏற்றுக்கொள்வார் என்பது தெரியவில்லை. இல்லை, 'பொய் சொல்லுவதையே' பெரிய குற்றமாக நினைப்பவரென்றால் இத்தனை வருடங்களுக்குப் பிறகு தெரியப்படுத்தும்போது, குற்றமாகத் தெரியுமா? அப்படித் தெரிந்தால் வாழ்நாள் முழுதும் தன் மனைவியை நம்பாமல் இருப்பவரா? மெல்லிய உறவுகளின் தந்தி அறுபடுமா? எனக்குத் தெரியாது.
மொத்தத்தில் நீங்கள் செய்யக்கூடியது அவளுடைய பய உணர்ச்சியைப் போக்க உங்கள் ஆதரவைக் கொடுங்கள். சிலசமயம் மருத்துவர் உதவி தேவைப்படும். அந்தப் பயம் அகன்றாலே தன்னம்பிக்கை பிறந்துவிடும். குழந்தை பிறந்தவுடன் அந்தத் தாய் கொஞ்சம் மறந்துவிடுவாள். ஒரு சரியான சந்தர்ப்பம் அமையாமல் திடீரென்று பல வருடங்களுக்கு முன்னால் ஒளித்த உண்மையை இப்போது பகிர்ந்துகொள்ளுவதால் என்ன நன்மை, யாருக்கு என்று யோசிக்கிறேன். எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் வரும். மேலே சொல்லுவதற்கு எனக்கே "பய.........ம்மாக" இருக்கிறது. உங்கள் உதவியுடன், அந்தப் பெண் நல்ல தாயாக அமைய வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள், டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன், கனெக்டிகட் |