பினோ ஸெஃபைன் - கடவுள் தந்த புதையல்
பினோ ஸெஃபைன் (Beno Zephine) முற்றிலும் பார்வையற்றவர். 25 வயதான பினோ 2013-14ல் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளில் 343வது இடத்தைப் பிடித்தார். ஆனால், இவர் விரும்பிய இந்திய அயலகப் பணித் துறையில் (IFS) இதுவரை பார்வையற்றோர் பணிநியமனம் செய்யப்பட்டதில்லை. இவருக்கெனவே சட்டத் திருத்தம் செய்து இந்த ஆண்டு பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது. "நான் இதற்காகப் பிரதமர் மோதி அவர்களுக்கு நன்றி சொல்கிறேன்" என்கிறார் பினோ.

ஆரம்பக்கல்வி லிட்டில் ஃப்ளவர் விழியிழந்தோர் பள்ளியில். குடும்பத்தினர் தனது பார்வையின்மையை என்றும் பெரிதாக நினைத்ததில்லை என்கிறார். ஸ்டெல்லா மேரீஸ் மற்றும் லயோலா கல்லூரிகளில், ஆங்கில இலக்கியத்தில் முறையே இளங்கலை, முதுகலை படித்தார். UKGயில் ஜவஹர்லால் நேருவைப்பற்றி பேசி வென்ற முதல்பரிசு பல பரிசுகளுக்கு அச்சாரமானது. மேடைப்பேச்சுக்குத் தயாரிக்க, இவரது தாயார் புத்தங்களை வாசிப்பாராம். சிவில் சர்வீஸ் பரிட்சைகளுக்கும் அவரது உதவிதான். கல்லூரி விழாக்களில் நிகழ்ச்சித்தொகுப்பாளர் பொறுப்பு ஏற்றதுண்டு. ஒருமுறை கேட்டால் நினைவில் நிறுத்தும் ஆற்றல் இவரது சொத்து.

கல்லூரிக்குப் பின் பாரதீய ஸ்டேட் வங்கியில் அதிகாரியாகப் பணி. அங்கு திரும்பிவராக் கடன்களை (NPA) வசூல் செய்யும் வேலை இவருடையது. அதை வெற்றிகரமாகச் செய்ததில் ’வசூல் ராணி’ என்ற பட்டப்பெயர் கிடைத்ததாகச் சொல்லும்போது முகத்தில் ஒரு மெல்லிய சிரிப்பு. "ஏனோ என்னை மிகக் கண்டிப்பானவள் என்கிறார்கள். எனக்கு எல்லாம் கிரமப்படி நடக்க வேண்டும். அதில் நான் சிறிதும் விட்டுக் கொடுப்பதில்லை" என்கிறார்.

சிறுவயது முதலே அகில இந்திய வானொலியின் 9 மணி இரவுச் செய்தியைத் தினமும் கேட்பாராம். அது சிவில் சர்வீஸ் தேர்வில் மிகவும் உதவியதென்கிறார். நாட்டுநடப்பைத் தெரிந்து கொள்வதில் இவருக்கு ஆர்வம் அதிகம். அதனால் பொருளாதாரத்தில் நாட்டம் வந்ததாம். நீர்ப்பாதுகாப்பு, இயற்கை, வனவிலங்குகள் என்று பல்வகை ஈடுபாடுகள் உண்டு.

IFS தேர்வு பெற்றதாக வெளியுறவு அமைச்சகத்திலிருந்து தொலைபேசிச் செய்தி வந்தபோது, அழவோ, மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கவோ இல்லையாம். உணர்ச்சி வசப்படாமல், எல்லாவற்றையும் சமமாக ஏற்றுக்கொள்வதில் இவருக்கு மகிழ்ச்சி. "நாட்டுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன்" என்கிற பினோ, பிரதமரைச் சந்தித்து ஆசிபெற விரும்புகிறார். இப்போது பள்ளி, கல்லூரிகளிலிருந்து இவருக்குப் பேச அழைப்புகள் குவிகின்றன. "வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் வேண்டும் என்று கூறி அவர்களை ஊக்குவிக்கிறேன்" என்கிறார். "நான் பார்வையிழந்தவள் என்பதில் எனக்கு விருப்போ வெறுப்போ கிடையாது. It is just a fact. அவ்வளவே" என்று தெளிவாகச் சொல்கிறார். பார்வையின்மை குறித்துப் பள்ளி மாணவர்களிடம் பேசுவதில்லை. ஆனால் கல்லூரி மாணவர்களிடம் கண்டிப்பாகக் கூறுவாராம்.

இந்தியாவின்மீது இவருக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. "மக்கட்தொகையால் எவ்வளவோ தடங்கல்களைச் சந்தித்திருந்தாலும், நிறைய சாதித்துள்ளோம். குறைகளை மட்டுமே பார்ப்பது நமது பழக்கம். இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி அல்லது எல்லையில் பாகிஸ்தானிய படையுடன் சண்டை இவற்றின்போது தேசப்பற்று பெருக்கெடுக்கிறது. அதுவே தெருவில் குப்பை கொட்டும்போதோ, தேசத்தின் வளங்களைச் சுரண்டும்போதோ தேசப்பற்று எங்கு போகிறதென்று தெரியவில்லை! எந்த மாற்றமும் ஒரேநாளில் நிகழ்வதில்லை. அமெரிக்கா இன்றைய நிலையை அடைய பல நூற்றாண்டுகள் ஆயின. ஆனால் ஏன் இந்தியாவில் மட்டும் எல்லாம் வேகமாகச் சீரடையவேண்டும் என நினைக்கிறார்கள்?" என்று கேட்டு அவர் நம் கண்களைத் திறக்கிறார்.

"இல்லாததப்பற்றிக் குறைகூறாதீர்கள். இருக்கும் வாய்ப்பை உபயோகப்படுத்துங்கள். அவை மேலும் வாய்ப்புக்களைக் கொண்டுவரும். சவால்கள் வரத்தான் செய்யும். எதிர்கொண்டு, வெற்றியடையப் பாருங்கள். உங்கள் பலம், பலவீனம் இவற்றைத் தெரிந்து கொண்டால்தான், பலத்தை அதிகரிக்கவும், பலவீனத்தை வீழ்த்தவும் முடியும்" என்று அவர் சொல்லும்போது, அதைச் சொல்வதற்கான தகுதிபெற்றவர் இவர் என்று நம் மனம் சொல்கிறது.

தனக்கென்று தனியாக எந்தக் கனவும் கிடையாது. இந்தியா வளர்ச்சியடைய வேண்டும் என்பதுதான் இவரது கனவு. அது நனவாகிக் கொண்டிருப்பதைப் பார்ப்பதாகக் கூறுகிறார். பரிதாபத்தையோ, பச்சாதாபத்தையோ எதிர்பார்க்காத இவர், எல்லோரையும்போல் தானும் நடத்தப்பட வேண்டும் என்கிறார். "நான் சந்தித்த பெரியசவால் எது எனக் கேட்கிறார்கள். அப்படி எதையும் என்னால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்" என்கிறார்.

பினோ ஸெஃபைன் என்ற இவரது பெயரில், பினோ என்றால் கடவுளின் பெண் எனப் பொருளாம். ஸெஃபைன் என்றால் புதையல். இவர் உண்மையாகவே இந்த நாட்டுக்குக் கடவுள் தந்த புதையல்தான்.

தகவல் தொகுப்பு: மீனாட்சி கணபதி

© TamilOnline.com