இலங்கை வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்
கனகசபாபதி விசுவலிங்கம் விக்னேஸ்வரன் (C.V. Wigneswaran) இலங்கை உச்சநீதிமன்ற இளைப்பாறிய நீதிபதியும், வடக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சரும் ஆவார். இவர் ஒரு முன்னணி தமிழ் வழக்கறிஞரும்கூட. மாவட்ட நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதியாகவும், நீதித்துறை நடுவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 2011 செப்டம்பரில் நடைபெற்ற வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு மிக அதிக வாக்குகள் பெற்று முதலாவது மாகாண சபையின் முதலமைச்சர் ஆனார். அக்டோபர் 2013ல் பதவியேற்றார்.

2015 FeTNA தமிழ்விழாவுக்காக சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதிக்கு வருகைதந்திருக்கும் நீதியரசர் விக்னேஸ்வரன் தென்றல் அனுப்பிய கேள்விகளுக்கு விடையளித்தார். அவை இதோ....

*****


கே: வடமாகாணக் குடிமக்களைப் பொருத்தவரையில் உங்களது கடமைகள் என்னென்ன?
ப: சட்டப்படி பார்த்தால் எங்கள் அமைச்சரவை எடுக்கும் நிர்வாகம் சம்பந்தமான, சட்டவாக்கம் சம்பந்தமான தீர்மானங்களை ஆளுநருக்கு தெரியப்படுத்துவது அல்லது ஆளுநர் அவை சம்பந்தமாக விபரங்களைக் கேட்டபின் அவற்றை அவருக்கு அறிவிப்பது மேலும் ஆளுநர் கேட்டால் அமைச்சர் ஒருவர் எடுத்த ஏதாவது ஒரு தீர்மானத்தை அமைச்சரவையில் பரிசீலிப்புக்கு விடுவதே எனது கடமைகளாவன. அவைபற்றித்தான் சட்டம் குறிப்பிடுகிறது. வேறேதேனும் கூறப்படவில்லை. ஆனால், வடமாகாணக் குடிமக்களைப் பொறுத்தவரையில் அவர்களின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், பொருளாதார விருத்தி, சமூக சுமுகநிலையை உறுதிப்படுத்தல், அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொடுத்தல் யாவுமே எனது கடமைகளாவன என்று கருதுகின்றேன்.

கே: வடமாகாணத்திலுள்ளோர் பேச்சு சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியாக வாழும் சுதந்திரத்தை அனுபவிக்க முடிகிறதா?
ப: 150000 போர்வீரர்களைக் கொண்ட, தோற்றவர்களைக் கண்காணிப்பதற்கான வதிவிட இராணுவம் வடமாகாணத்தில் நிலைநிறுத்தப் பட்டிருக்கும்போது சுதந்திரத்தை எவ்வாறு அனுபவிப்பது? ஆனால் புதிய அரசாங்கத்தின்கீழ் கருத்துச் சுதந்திரம் காணப்படுகிறது. இராணுவம் வெளியேறினால்தான் இயல்பு வாழ்க்கை திரும்பவரும்.

கே: இப்போது உங்கள் கவனம் எதில் குவிந்துள்ளது?
ப: பொருளாதார நன்மைகளை எவ்வாறாகவும் மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதே என்பதில்.

கே: இப்போதிருக்கும் பெரிய சவால்கள் எவை?
ப: அரசாங்கம் வடமாகாணசபையைப் புறக்கணித்து வேலைகளில் ஈடுபட்டு வருகின்றது. அந்நிலைமையை மாற்றவேண்டும். மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளைத் தீர்க்கவேண்டும். இராணுவத்தைப் படிப்படியாக வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். மனிதவளங்களை மேம்படுத்த வேண்டும்.

கே: இவற்றைச் சமாளிப்பதில் ஸ்ரீலங்கா ஐக்கிய அரசின் ஆதரவை நீங்கள் பெற்று வருகிறீர்களா?
ப: ஓரளவுக்கே பெறக்கூடியதாக உள்ளது. பொதுத்தேர்தல் ஒன்றினை நோக்கி நாடு நின்றுகொண்டிருப்பதால் அரசின் பங்கு மிகக்குறைவாகவே தென்படுகிறது. சிங்களவரைத் தமிழர்களுக்கு விற்றுவிட்டார்கள் என்று எதிர்க்கட்சியினர் கூறக்கூடாது என்பதில் அரசாங்கத்தவர் கண்ணுங்கருத்துமாக உள்ளனர்!

கே: வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் உங்களுக்கு எவ்வகையில் உதவலாம்?
ப: வெளிநாட்டில் வாழுந் தமிழர்களின் உதவி வெகுவாகத் தேவைப்படுகிறது. எம்மை நாமே கட்டி எழுப்புவதற்கு எமது உறவுகள் உதவியை உளமாற வேண்டி நிற்கின்றேன். ஆனால் இவை முறையாகப் பெறப்பட வேண்டும். முறையாகச் செயல்படுத்தப்பட வேண்டும். இதற்காகத்தான் உத்தியோக பூர்வமான முதலமைச்சர் நிதியத்தை வேண்டி நிற்கின்றேன். அவ்வாறான நிதியம் கணக்காளர் நாயகத்தினால் கணக்காய்வு செய்யப்படும். குற்றம், குறைகள், தகாத நடைமுறைகளில் எவரேனும் ஈடுபட்டால் அவர்கள் பிடிபடுவார்கள். பல பணங்கள் பலரையும் வந்து சேர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதிக்குங் குறைந்த பணம் செல்வதைக் கண்டுள்ளோம். ஆகவே விரைவில் எம்மக்கள் வாழ்வில் மறுமலர்ச்சியைக் கொண்டுவர எம் புலம்பெயர் மக்கள் எவ்வாறான உதவிகளில் ஈடுபடலாம் என்று உங்களுக்கு உணர்த்துவோம்.

கே: உங்கள் பதவிக்காலம் என்ன? அதற்குள் நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன?
ப: ஐந்து வருடங்கள். அதில் ஒன்றரை வருடங்கள் சென்றுவிட்டன. அடித்தளத்தைக் கெட்டியாக அமைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்பேற்குந் தன்மை, ஊழலற்ற நிர்வாகம் இவையாவும் இதனுள் அடங்கும்.

கே: வட அமெரிக்கத் தமிழ்ச் சமுதாயத்துக்கு நீங்கள் கூறவிரும்புவது என்ன?
ப: ஜனநாயகக் கோட்பாட்டினுள் வசிப்பவர்கள் நீங்கள். எமது மக்களிடையே ஜனநாயக விழுமியங்கள் நிலைத்து நிற்க நாங்கள் யாவரும் ஒன்று சேர்ந்து உழைக்கவேண்டும். வடகிழக்கு மாகாண மக்கள் தனிமனித ஆணைக்கு அடிபணிந்தே அண்மைக் காலங்களில் வாழ்ந்து பழகிவிட்டார்கள். இயக்கமோ இராணுவமோ ஆணைக்கு ஆட்படுத்தியே எமதாட்களை அடிபணிய வைத்தார்கள். சுதந்திரமான, ஜனநாயக முறையிலான கலந்துரையாடலும் கருத்துப் பரிமாறலும் இனித்தான் எம்மிடையே பரவி விரவ வேண்டும்.

எனது தாயாரின் உறவினர் ஆனந்தகுமாரசாமி அவர்களின் நூல்கள் பொஸ்டன் நகரில் நூலகமொன்றில் ஆர்வத்துடன் வைக்கப்பட்டுள்ளது. பொஸ்டனில் இருந்து வந்த அமெரிக்க மிஷனரிமார்களின் கல்விச்சேவை எம் மாணவ சமுதாயத்தைக் கல்விப் பாதையில் கடுகதியில் பயணிக்க உதவியுள்ளது. எம் இருநாட்டு மக்களுள்கூடிய உறவையும் உதவி மனப்பாங்கையும் வளர்க்க எமது வடஅமெரிக்கத் தமிழுறவுகள் முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

சி.கே. வெங்கட்ராமன்

© TamilOnline.com