வெ. இறையன்பு
இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரியான வெ. இறையன்பு எழுத்தாளர், பேச்சாளர், கட்டுரையாளர், சிந்தனையாளர், தன்னம்பிக்கைச் சொற்பொழிவாளர், சமூக ஆர்வலர் எனத் தன் ஆளுமையை விரித்தவர். 16 ஜூன் 1963 அன்று சேலம் மாவட்டம் காட்டூரில் ஒரு மத்தியதரக் குடும்பத்தில் பிறந்தார். இளவயதிலிருந்தே எழுத்து, பேச்சு எனக் கலைகளில் ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளியில் பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகள் பெற்றார். விதவிதமாகப் புத்தகங்களை வாங்கிப் படிக்கும் சூழல் இல்லாதிருந்தாலும் தனக்குக் கிடைத்த பரிசுப் புத்தகங்களைக் கொண்டும், நூலகங்களுக்குச் சென்று படித்தும் தனது பல்முனை அறிவை வளர்த்துக்கொண்டார். உயர்கல்விப் படிப்பு முடித்ததும் வேளாண்மைப் பிரிவில் இளங்கலை வகுப்பில் சேர்ந்தார். கல்லூரி பல வாசல்களைத் திறந்துவிட்டது. இலக்கிய ஆர்வமும், சமூக உணர்வும் மக்களுக்காகப் பணியாற்றும் எண்ணமும் தீவிரமாயின. ஓய்வுநேரத்தில் கவிதைகள் எழுதினார்.

படிப்பை முடித்தபின் வேளாண் அலுவலராகப் பணியாற்றினார். இந்திய ஆட்சிப் பணித்துறைக்குத் (ஐ.ஏ.எஸ்.) தேர்ச்சி பெற்றார். முதல் பணி நாகப்பட்டினத்தில் அமைந்தது. கடலூரில் பணியாற்றியபோது "பூபாளத்திற்கொரு புல்லாங்குழல்" என்ற முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். கல்லூரியில் எழுதிய புதுக்கவிதைகளின் தொகுப்பு அது. பல்வேறு பொறுப்புகளும், மாறுதல்களும் நிகழ்ந்தாலும், இலக்கிய வாசிப்பைத் தொடர்ந்தார். உள்ளூர் இலக்கியம் முதல் உலக இலக்கியம்வரை வாசித்து அறிவுப் பார்வையை விசாலமாக்கிக் கொண்டார். இதழ்களுக்குக் கதை, கவிதை, கட்டுரைகளை எழுதத் துவங்கினார். சிந்தனைகளைத் தூண்டும் இவரது கட்டுரைகள் வாசக வரவேற்பைப் பெற்றன. இதயம் பேசுகிறது, தாமரை, கணையாழி, புதிய பார்வை, தமிழன் எக்ஸ்பிரஸ், அமுதசுரபி, ஆனந்த விகடன் இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகி வாசக கவனம் பெற்றன.

Click Here Enlarge"வாய்க்கால் மீன்கள்" என்னும் இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்புக்குத் தமிழக அரசின் சிறந்த கவிதை நூலுக்கான பரிசு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக "வைகை மீன்கள்" என்ற கவிதைத் தொகுதியையும் எழுதினார். முதல் நாவல் 'ஆத்தங்கரை ஓரம்' ஜெயகாந்தனின் அணிந்துரையுடன் வெளியானது. நர்மதா அணை கட்டப்படுவதற்காகக் கரையோரத்தில் வசித்த மக்கள் விரட்டப்பட்டதை அடிப்படையாகக் கொண்டது இந்நாவல். பரவலான வரவேற்பைப் பெற்ற இந்த நூலுக்குத் திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த நாவலுக்கான பரிசும் கிடைத்தது. நூலின் அணிந்துரையில் ஜெயகாந்தன், "மிகவும் மேன்மையாக எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல் தமிழில் எழுதப்பட்ட இந்திய இலக்கியம் எனலாம்." என்றும், "வாசகனின் மனதை விசாலப்படுத்திச் சிந்தனையைக் கிளர்த்துகிற அதே சமயத்தில் அழகியல் உணர்வையும் மனிதநேயப் பண்புகளையும் வலியுறுத்தி எழுதப்பட்ட ஆசிரியரின் உன்னத நோக்கம் பாராட்டுதற்குரியது" என்றும் புகழ்ந்துரைக்கிறார்.

இறையன்புக்கு மிகவும் புகழ் சேர்த்த படைப்பு அவரது "ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்" என்ற நூலாகும். பாரத ஸ்டேட் வங்கியின் சிறந்த கட்டுரை நூலுக்கான இரண்டாம் பரிசு பெற்ற இந்த நூல், ஒரு லட்சம் பிரதிகளுக்குமேல் விற்பனை ஆகியுள்ளதுடன் இன்றும் ஐ.ஏ.எஸ். மாணவர்களால் வரவேற்கப்படும் நூலாக உள்ளது. இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு "அரிதாரம்". இது 'தலைமாணாக்கன்', 'மயானம்,' 'மாயைகள்' போன்ற சிறப்பான சிறுகதைகளைக் கொண்டது. இவரது "ஏழாவது அறிவு" என்ற கட்டுரை நூல் முக்கியமானது. தொடர் கட்டுரைகளாக வெளிவந்த இந்த நூல் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் "மனம் என்பது சிந்தனைகளின் தொகுப்பு. சிந்தனைகளின் மூலம் சிந்தனைகளைக் கடக்கக் கற்றுக்கொள்வதற்கு ஆறாவது அறிவில்தான் சாத்தியம். ஆறாவது அறிவையும் தாண்டி சிந்தனைகளற்ற நிலைக்குச் செல்லவேண்டும். அது ஏழாவது அறிவாக உதயமாகிறது. ஏழாவது அறிவு என்பது அறிவு அல்ல; அனுபவம். அப்போது இறைமையோடு இயைகிற அனுபவம் ஏற்படுகிறது" என்று இறையன்பு சொல்வது சிந்திக்கத்தக்கது. இவரது 'சாகாவரம்' நாவல். மரணம் என்பது அஞ்சவேண்டியது அல்ல. அது ஒரு நிகழ்வு என்பதை நாவல் வடிவத்தில் பேசுகிறது. மரணத்தைச் சந்திக்கின்ற நசிகேதன் என்கிற இளைஞன் மரணமில்லாத வாழ்வைத் தேடி பயணம் செய்கிறான். அப்படியொரு வாழ்வு அமைந்தால் அது எப்படியிருக்கும் என்பதை உணர்கிறான். அந்த உணர்வின் வெளிப்பாடே சாகாவரம் நாவலாக விரிகிறது.

'பூனாத்தி', 'நரிப்பல்', 'அழகோ அழகு' போன்றவை சிறுகதைத் தொகுப்புகள். "சின்னச் சின்ன வெளிச்சங்கள்" சிறுசிறு கதைகளைக் கொண்ட நூல். பெயருக்கேற்றாற் போல் வாசிப்பவர்கள் உள்ளத்தில் வெளிச்சம் பாய்ச்சக்கூடியது. மதுரை வானொலியில் உரையாற்றியதன் நூல் வடிவம் "திருப்பாவைத் திறன்" என்பது. "முகத்தில் தெளித்த சாரல்" ஹைக்கூ கவிதைகளைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பு. இது ஒலிப்பேழையாகவும் வெளி வந்துள்ளது. இவை தவிர்த்து தன்னம்பிக்கை, இசை, பாடல், கவிதை எனப் பல உள்ளடக்கங்களைக் கொண்ட ஒலிப்பேழைகளைத் தந்துள்ளார். தொலைக்காட்சியில் இவர் ஆற்றிய தன்னம்பிக்கைச் சொற்பொழிவுகளும் குறுந்தகடுகளாக வெளிவந்துள்ளன. "உள்ளொளிப் பயணம்", "படிப்பது சுகமே", "முகத்தில் தெளித்த சாரல்", "ஓடும் நதியின் ஓசை", "ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்", "வேடிக்கை மனிதர்கள்", "சிற்பங்களைச் சிதைக்கலாமா?", "மென்காற்றில் விளைசுகமே" போன்ற நூல்கள் முக்கியமானவை. "வாழ்க்கையே ஒரு வழிபாடு" நூல் பிறப்புமுதல் இறப்புவரை ஒவ்வொரு நிகழ்வையும் ஆன்மீகப் பார்வையுடன் அணுகுவது எப்படி என்பதை மதம்கடந்து சமயம்சாராமல் சொல்கிறது. "பத்தாயிரம் மைல் பயணம்" என்பது பயணம்பற்றிய நூலாகும். 'சறுக்கு மரம்' கவிதை நடையில் எழுதப்பட்ட அனுபவத் தொகுப்பு. கண்ணீர், விடுதி வாழ்க்கை, மரணம், மரங்கள் என மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்தவற்றைப் பற்றி இந்நூல் பேசுகிறது. 'Canal Fish', 'Steps to Super Students', 'Sprinkle On The Face', 'Random Thoughts' போன்றவை இவரது தமிழ் நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள்.

இறையன்பு தன் எழுத்தனுபவம் பற்றிக் கூறுகையில், "பெரிய அலை வந்து என்னை குலுக்குகிற போதெல்லாம் என் வாசிப்பும், எழுத்தும் நான் நிலைகுலைந்து விடாதபடி பார்த்துக்கொள்கின்றன" என்கிறார். தனது இலக்கியநோக்கம் பற்றி, "மனிதனுக்குள்ளிருக்கும் தெய்வீக உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்வதே என் படைப்புகளின் நோக்கம்" என்று சொல்வது குறிப்பிடத்தகுந்தது.

இறையன்புவின் மிக முக்கியமான நாவல் 'அவ்வுலகம்'. இது மரணம்பற்றிப் பேசும் நாவல் என்றாலும், மரணம் என்பதைத் தாண்டி அதன் பின்னானதொரு வாழ்க்கையைச் சொல்கிறது. வாழ்வில் இழந்த ஒரு நொடியைக்கூட திரும்பப் பெறமுடியாது. இது உண்மை. அப்படித் திரும்பப்பெறும் வாய்ப்பு ஒருவனுக்குக் கிடைத்தால் அவன் என்ன செய்வான்? அதைத்தான் 'அவ்வுலகம்' என்ற உலகம் ஒன்றைப் படைத்து அதில் சுவைபடச் சொல்லியிருக்கிறார் இறையன்பு. "அவ்வுலகம் என்பது இவ்வுலகமல்ல; அது நினைவின் நீட்சியாகவும் இருப்பதுண்டு. கனவின் காட்சியாகவும் அமைவதுண்டு" என்று அவர் நூலின் முன்னுரையில் சொல்கிறார்.

"பக்கத்துவீட்டுத் தாத்தா செத்துப் போயிட்டாராம்மா..?" என்று துவங்குகிறது நாவலின் முதல் வரி. கதையின் நாயகன் "த்ரிவிக்ரமன்" சந்திக்கும் முதல் மரணம் அது. "செத்துப் போறதுன்னா என்ன?" என்ற கேள்வி எழும்புகிறது அவனுக்கு. சிந்தனைகள் விரிகின்றன. அதிலிருந்து 'அவ்வுலகம்' துவங்குகிறது. ஆற்றொழுக்கான, அழகான நடை. ஜாலங்களில்லாத நேர்த்தியான கதைசொல்லும் முறையில் நாவல் பயணிக்கிறது. நடுநடுவே தனது பணி அனுபவங்களை அல்லது அரசு அலுவலங்களில் நடக்கும் சம்பவங்களாகக் கேள்விப்பட்டதை ஆங்காங்கே சேர்த்திருக்கிறார் என்று கருத இடமிருக்கிறது. நாவலில் வரும் மேற்கோள்கள் சிந்திக்க வைப்பன.

வாழ்க்கை என்பது ஓர் அற்புதம். அதை வாழ்வாங்கு வாழ முடியாவிட்டாலும், கூடுமானவரை நல்லபடியாகவாவது வாழ்ந்து முடிக்க வேண்டும். பிறருக்கு நன்மை செய்கிறோமோ இல்லையோ, பிறரைத் துன்புறுத்தாமல், மனதைப் புண்படுத்தாமல், கெடுதல் செய்யாமல் வாழ முனைய வேண்டும். தவறுதல் மனித இயல்புதான். அதைப்போல திருந்துதலும்தான். இதையெல்லாம் இந்த நாவல் வலியுறுத்துகிறது. இவ்வுலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை 'அவ்வுலக' சம்பவங்கள் மூலம் சொல்கிறார் இறையன்பு.

வெ. இறையன்பு, நல்ல பேச்சாளரும் கூட. பாமரருக்கும் மிக எளிதில் புரியும் வகையில் நிறுத்தி, நிதானமாகப் பேசுகிறவர். இளைஞர்களைக் கவரும் பேச்சாற்றல் கொண்டவர். உலக அளவில் பல கருத்தரங்குகளில் பங்கேற்று உரையாற்றியிருக்கிறார். திருக்குறள்பற்றி ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவரது கட்டுரை, நாவல், சிறுகதைத் தொகுப்புகளை ஆராய்ந்து பல மாணவர்கள் எம்.ஃபில், பிஎச்.டி பட்டம் பெற்றுள்ளனர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். வலைமனை: www.iraianbu.in

அரவிந்த்

© TamilOnline.com