புயல்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தென்றல் தனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறது.
இயற்கையின் சீற்றம் பலரது வாழ்க்கையை அனாவசியமாக சீர்குலைத்து விட்டது. இந்தச் சோகத்துக்கு ஊழல், நிர்வகிக்கும் திறமையின்மை, மேம்போக்கு ஆகியவையும் காரணங்கள் என்பது அடிமட்டத்திலிருந்து அனைவருக்கும் புரிந்து விட்டது. ஆனால் அமெரிக்க அதிபரும் அவரது ஆப்த நண்பர்களும், தவிர்க்கக் கூடிய ஆட்சேதமும், பொருட்சேதமும் நடக்காத மாதிரி அவர்களுக்கு அவர்களே சான்றிதழ் வழங்கிய வண்ணம் பவனி வந்து கொண்டிருக்கிறார்கள்.
இதற்குப் பின்னணியில் காரணமாக இருந்த போக்குக்களை உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருதல் மிக அவசியம். ஒரு காலத்தின் உலகத்தின் தார்மீகப் பொறுப்பை ஏற்றிருந்த ஒரு மக்களாட்சி, இன்று ஏறத்தாழ ஒரு மன்னராட்சி அளவிற்கு முறைகேடுகள் மலிந்து விட்ட நிலைக்கு வந்து விட்டது. இந்தியாவில், மும்பையில் நிகழ்ந்த மழை, வெள்ளத்துடன் பலர் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். அமெரிக்க மக்கள் இப்பொழுதாவது விழித்துக் கொண்டு செயல்படாவிட்டால், பண்டைய உரோமாபுரியுடன் ஒப்பிட்டு, வரலாற்றறிஞர்கள், "The decline and fall of USA" என்று புத்தகம் எழுத நேரிடலாம். இந்த ஒரு நெருக்கடியைச் சந்தித்த தோரணையில் இந்தியா அப்படியே முன்னேறி விட்டது என்று முழங்கிய வண்ணம் ஒரு சில மின்னஞ்சல்களும், கட்டுரைகளும் வந்துள்ளன. அப்படியெல்லாம் பயந்து விடாதீர்கள் என்று சொல்வது போல், அண்ணா பல்கலைக் கழகம் சில முடிவுகளை எடுத்துள்ளது. அவற்றின் சாராம்சம்: கல்லூரி மாணவர்களுக்கு ஓட்டுப் போட்டு நாட்டின் போக்கையே மாற்றும் உரிமையும் தகுதியும் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு எது சரியான உடை என்பதைப் பகுத்தறியும் அளவுக்குத் தெரியாது. மேலும் ஒரு படி மேலே சென்று, 'பாலியல் வன்முறைகளுக்கு பெண்கள் உடையணியும் முறை ஒரு பெரிய காரணம்' என்று விளக்கவுரையும் அளிக்கப்பட்டிருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்னர் வேறொரு பல்கலைக் கழகத்திற்கும் இதே ஞானோதயம் வந்தது. எதிர்ப்புகளுக்குப் பின் வழக்கம்போல் பூசிமெழுகி பின்தள்ளப்பட்டது. ஆட்சியாளர்களும் கல்வித்துறையிலிருப்போரும் கல்வியை மேம்படுத்துவதையும் இன்னும் பல கல்விநிலையங்கள் IIT தரத்தை எட்டவைப்பதையும் செய்யவேண்டுமே தவிர இப்படி 'சீர்திருத்தங்கள்' செய்யக் கூடாது. அடுத்த இதழுடன் தென்றல் தனது ஐந்தாவது ஆண்டை பூர்த்தி செய்கிறது. இனிவரும் இதழ்களில் சில புதிய பகுதிகளை தொடங்க உத்தேசித்துள்ளோம்.
மீண்டும் சந்திப்போம்
பி. அசோகன் அக்டோபர் 2005 |