மே 2, 2015 அன்று சான் டியகோ தமிழ்ப்பள்ளி குவால்காம் க்யூ அரங்கில் பள்ளி ஆண்டுவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது. விழாவில் 3 வயதிலிருந்து 14 வயதிற்குட்பட்ட சுமார் 60 குழந்தைகள் கலைநிகழ்ச்சிகளை வழங்கினர். மாறுவேடம், கடையேழு வள்ளல்களின் கதைகள், குல்லாய் வியாபாரி நாடகம், குழந்தைப் பாடல்கள், வார்த்தை விளையாட்டு, பாரதி, பாரதிதாசன் பாடல்களுக்கு நடனம், பட்டிமன்றம் போன்ற கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
பேரா. சுரேஷ் சுப்பிரமணி (நிர்வாகத் துணைவேந்தர், கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், சான் டியகோ), மரு. வேணு பிரபாகர் (ஷார்ப் மருத்துவமனை) ஆகியோர் சிறப்புரையாற்றியதோடு மாணவ மாணவியருக்குச் சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கினர். சுரேஷ் சுப்பிரமணி தாம் மாணவனாக இருந்தபொழுது ஐந்து மொழிகளைக் கற்றதாகவும், பன்மொழிப்புலமை ஒரு முக்கியத்திறன் என்றும் அறிவுறுத்தினார். பன்மொழித்திறன் கொண்ட மாணவர்கள் பிற துறைகளிலும் சிறந்து விளங்குவதைக் குறிப்பிட்டார். வேணு பிரபாகர் தமது உரையில் எத்தகைய கடினமான சவால்களைத் தம் வாழ்வில் சாமாளித்து மருத்துவரானார் என்பதை விளக்கிக் கூறியதுடன், என்னால் முடிந்தால் உங்களாலும் முடியும் என்று ஊக்கப்படுத்தினார். மாணவர்களுக்கு உயர்கல்வியில் தம்மாலான உதவிகளைத் தருவதாகவும் உறுதியளித்தார்.
இந்தப்பள்ளி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 6:45 மணிமுதல் 8:15 மணிவரை, குழந்தைகளுக்கு ப்ரீஸ்கூல் முதல் ஐந்தாம் வகுப்புவரை தமிழ் வகுப்புகளை இலவசமாக நடத்துகின்றது.
மேலும் தகவலுக்கு வலைமனை: tamilforkids.com/tamilschool முகநூல்: fb/TamilSchool
ராஜாராமன், சான் டியகோ |