பாலதத்தா தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா
மே 2, 2015 அன்று டெக்சஸ் மாநிலம் ஃப்ரிஸ்கோ நகரிலுள்ள ஸ்ரீகாரியசித்தி அனுமன் கோவிலில் இயங்கிவரும் பாலதத்தா தமிழ்ப்பள்ளியின் ஆண்டு விழா நடந்தேறியது. மழலைநிலை மாணவ மாணவிகள், அமெரிக்க நன்றிநவிலல் மற்றும் தமிழர் பொங்கல்விழாவை வைத்து மழலையில் பேசி நடித்து அசத்தினார்கள். நிலை-1 மாணாக்கர் 'அன்பால் எதையும் வெல்லலாம்' என்ற கருத்தை வலியுறுத்தும் அருமையான நாடகத்தை வழங்கினார்கள். நிலை-2 மாணாக்கர் இக்கால வகுப்பறை, முற்காலத்து மரத்தடிக் கல்விமுறை ஆகியவற்றை ஒரு நாடகமாகக் கண்முன் நிறுத்தினர். அதிலும் மாணவர்கள் "உள்ளேன் ஐயா" என்றவுடன் நம் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. நிலை-3 மாணாக்கர், வறட்டு கௌரவத்துக்காக தேவையில்லாமல் கடன்வாங்கினால் என்னவாகும் என்பதை 'வீண் பெருமை' நாடகத்தின்மூலம் வயிறுகுலுங்கச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார்கள்.

30 ஆண்டுகளுக்கு மேலாக உலகின் பல்வேறு பகுதிகளில் கோயில்களை வடிவமைத்து வரும் ஸ்தபதி தங்கம் சுப்பிரமணியன் அவர்கள் விழாவில் சிறப்புரை ஆற்றினார். பள்ளித் தலைமையாசிரியர் சிரிஷ் பூண்டலா, சிறப்பு விருந்தினரை கௌரவித்தார். நிகழ்ச்சிகளைப் பள்ளியாசிரியர்கள் ஜெய் நடேசன், கீதா சுரேஷ், ஷைலா நாராயணன், ஆர்த்தி ராமமூர்த்தி, மீனா கோவிந்தராஜன், சங்கீதா கார்த்திக், பவானி சுப்ரமோனி, ப்ரியா கோபிகண்ணன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

ஜெய் நடேசன்,
ஃப்ரிஸ்கோ, டெக்சஸ்

© TamilOnline.com