மே 9, 2015 அன்று தமிழ் நாடு அறக்கட்டளை நியூ யார்க் கிளை அன்னையர்நாள் விழாவை நிதிதிரட்டும் நிகழ்ச்சியாக நடத்தியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. பாட்டுப் போட்டிகளில் நியூ யார்க் பகுதியில் இசைபயிலும் குழந்தைகள், அவர்தம் ஆசிரியர், பெற்றோர் ஆகியோர் பங்குபெற்றனர். மரபுப்பாடல், மரபுசார்ந்த பாடல், திரைப்பாடல் என்று மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. அடுத்து, தமிழ் நாடு அறக்கட்டளையின் நோக்கம், குறிக்கோள், குறிப்பாக, நியூ யார்க் அமைப்பின் குழுப்பணியான வேலூர் அரசுப்பள்ளி திட்டம் பற்றி ஒரு விழிமக்காட்சி வழங்கப்பட்டது. எட்டாம் வகுப்பிற்கு மேற்பட்ட குழந்தைகள் கோடையில் தமிழகத்தில் சில பள்ளிகளுக்குச் சென்று தன்னார்வத் தொண்டாற்றும் வழிமுறையும் விளக்கப்பட்டது.
உணவு இடைவேளைக்குப் பின், மெல்லிசைக் கச்சேரி தொடங்கியது. பன்னாட்டு இசைக்கலைஞர்களின் துணையுடன் இன்னிசை வெள்ளத்தில் நீந்தவைத்தார் கித்தார் பிரசன்னா. பிரசில், போர்ட்டோ ரீகோ, போலந்து, அமெரிக்கக் கலைஞர்களுக்கு மெல்லிசை மன்னர், இசைஞானி, மற்றும் ஏ.ஆர். ரகுமான் ஆகியோரின் திரைப்பாடலிசையைக் கற்றுக்கொடுத்து, சேர்ந்து நிகழ்த்திக் காட்டியதே ஒரு சாதனைதான்.
நிகழ்ச்சியின் இறுதியில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அறக்கட்டளையின் நியூ யார்க் அமைப்பு, மருத்துவ நிபுணர் சந்திரகுப்தா அவர்களின் தலைமையிலான செயற்குழு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிமூலம் கிட்டத்தட்ட 10,000 டாலர் திரட்டப்பட்டது. இது வேலூர் அரசுப்பள்ளிகளின் கல்வி மேம்பாட்டுக்கெனப் பயன்படுத்தப்படும்.
செய்திக்குறிப்பிலிருந்து |