மே 10, 2015 அன்று தமிழ்நாடு அறக்கட்டளையின் ஹூஸ்டன் கிளை அன்னையர் தினவிழாவை மீனாட்சியம்மன் ஆலய மண்டபத்தில் கொண்டாடியது. விழாவில், ஹூஸ்டன் பகுதியில் கல்வி மற்றும் சமுதாயப் பணிகளில் ஈடுபட்டுள்ள தனம் தியாகராஜன், நளினி முகோபாத்யாயா, நலினகஷி ரங்கலா, மாலா கோபால், மலர் நாராயணன் ஆகியோருக்கு 'சிறந்த அன்னை' விருதுகள் வழங்கப்பட்டன. ஆண்டுதோறும் இவ்விருதுகளை வழங்க முடிவுசெய்துள்ளதாகக் கிளையின் செயலர் ராஜ் தியாகராஜன் அறிவித்தார்.
வேலூர் மாவட்டம் காட்டுப்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம் ஜெகனாதபுரம் ஆகியவற்றிலுள்ள அரசுப்பள்ளியில் ஹூஸ்டன் கிளை செய்துள்ள பணிகளைத் தலைவர் முனைவர் சிவராமன் தொகுத்து வழங்கினார். பெரி அழகப்பன், அபிநயா கோவிந்தன் ஆகியோரை இளைஞர்குழு ஒருங்கிணைப்பாளர்களாக அறிமுகப்படுத்தினார்.
'பெண்ணின் பரிமாணங்கள்' என்ற இசை நாடகத்தின்மூலம் குழந்தைப் பருவம் முதல் முதுமைவரை ஒரு பெண்ணின் வாழ்வைச் சிறப்பாக மாலா கோபால் குழுவினர் வழங்கினர். தமிழகத்திலிருந்து வந்திருந்த ராகமாலிகா குழு 'தியாகராஜாவிற்கு இளையராஜாவின் வணக்கம்' என்ற கருத்தில் கிழக்கையும், மேற்கையும் இணைக்கும் இன்னிசைப் பாலத்தை உருவாக்கி அளித்தனர்.
நிகழ்ச்சியில் திரட்டப்பட்ட 10,000 டாலர் நிதி திருவாரூர் மாவட்ட அரசுப்பள்ளிகளில் TBF-ABC கல்வித் திட்டத்தை அமலாக்கப் பயன்படும் என்ற செய்திக்கு அறக்கட்டளை துணைத்தலைவர் முனை. சோமலெ சோமசுந்தரம் மகிழ்ச்சி தெரிவித்தார். ராஜன் ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். ஹூஸ்டன் அத்தியாயத் துணைத்தலைவர் பாலா பாலச்சந்திரன் நன்றியுரையாற்றினார்.
சோமலெ சோமசுந்தரம், ஹூஸ்டன், டெக்சஸ் |