மே 16, 2015 அன்று லாஸ் ஏஞ்சலஸ் நந்தலாலா மிஷன் தனது சமூகப் பணிகளுக்கு நிதிதிரட்டும் முகமாக பத்மஸ்ரீ கே.எஸ். சித்ரா குழுவினரின் இசைநிகழ்ச்சி ஒன்றை டாரன்ஸ் மார்ஸி ஆடிட்டோரியத்தில் நடத்தியது. நந்தலாலா அமைப்புகளின் நிறுவனர் பூஜ்யஸ்ரீ மதியொளி சரஸ்வதி அவர்களின் விசேடச் செய்தியுடன் நிகழ்ச்சி ஆரம்பமாயிற்று. ஆறுமுறை இந்திய அரசின் சிறந்த பாடகிக்கான விருதைப் பெற்றிருக்கும் சித்ரா, தமது சிறப்பான பல பாடல்களின் மூலம் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டார்.
2008ம் ஆண்டின் ஆஸ்கர்விருது பெற்ற "ஜெய்ஹோ" பாடல் புகழ் விஜய் ப்ரகாஷ் பாடிய 'ஓம் சிவோஹம்' சிறப்பு விருந்தினராக வந்திருந்த சின்மயா மிஷன் ஈஸ்வரானந்த சுவாமிகளைக் கண்கலங்க வைத்தது. பன்மொழிப் பாடகி ப்ரியா ஹிமேஷ் தமது "சிங்கரிங்கா" பாடல்மூலம் ரசிகர்களை எழுந்து ஆடவைத்தார். பக்திப் பாடல்களுக்கான தேசியவிருது பெற்ற ஸ்ரீக்ருஷ்ணா தமது இனிமையான குரலில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை நினைவுபடுத்தினார். 'பாடறியேன் படிப்பறியேன்' பாடலின் முடிவில் மிருதங்கம், தபேலா மற்றும் மேற்கத்திய டிரம்ஸ் ஆகியவற்றின் தனி ஆவர்த்தனம் சிறப்பாக இருந்தது. கீபோர்ட், கிடார், சாக்ஸபோன், புல்லாங்குழல் வாசித்த இசைக்குழுவினர் சிறப்பாக வாசித்தனர்.
நிகழ்ச்சியை விவேக் தியாகராஜன் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சிமூலம் திரட்டப்பட்ட நிதி லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் சான் ஹோஸே நகரங்களிலுள்ள எளியோருக்கு உணவு மற்றும் வசதிகுறைந்த மாணவர்களுக்கு உபகரணங்கள் வாங்கப் பயன்படுத்தப்படும். தரமானதொரு இசை நிகழ்ச்சியை லாஸ் ஏஞ்சலஸில் நடத்தக் காரணமாக இருந்த நந்தலாலா உறுப்பினர் டாக்டர் ந. செந்தில்குமார் பாராட்டுக்குரியவர்.
சங்கரி செந்தில்குமார், பசடினா, கலிஃபோர்னியா |