மே 17, 2015 அன்று மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக்கழகம் தனது முதல் ஆண்டுவிழாவை சென்ட் சர்ச் கலையரங்கத்தில் கொண்டாடியது. டாலஸ் தமிழ்ச்சங்கத்தின் வழியாக இந்தத் தமிழ்ப்பள்ளி தொடங்கப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது. மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத் தலைவி கீதா அருணாச்சலம் வரவேற்றார். பின்னர் நடந்த குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் மனதைக் கவர்ந்தன. 'குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்' பாடலுக்கு நடனம், 'மரியாதை ராமன்' நாடகம், யாவுமே சுவைபட அமைந்திருந்தன. சிறப்பு விருந்தினராக மதுரை பாத்திமா கல்லூரி முன்னாள் துணைமுதல்வர். விசாலாட்சி சுப்ரமணியன் பங்கேற்றுப் பேசினார்.
2014-15 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை கல்விக்கழகத் தலைவர். திரு. சுப்ரமணியன் சொக்கலிங்கம் வாசித்தளித்தார். அடுத்த ஆண்டு துவங்கவிருக்கும் புதிய பள்ளிகளின் பொறுப்பாளர்கள், சுப்ரமணியன் சொக்கலிங்கம், மணிமேகலை சுகுமார், கவிதா ஆனந்த், வெங்கடேசன் வீரப்பன், சபரி வீரப்பன், ஆதிரை பாஸ்கரன், சாவித்ரி கிருஷ்ணன், சரவணன் குருசாமி, சுமித்ரா பிரபு ஆகியோரை கீதா அறிமுகப்படுத்தினார். சிறப்பு விருந்தினருக்குச் சிறப்பு ஆலோசகர் ஸ்ரீநிவாசன் நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார். சிறப்பு விருந்தினர் விசாலாட்சி, ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசும், குழந்தைகளுக்கு நினைவுக்கோப்பையும் வழங்கினார். திருமதி. மணிமேகலை சுகுமார் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது. விழாவைக் கல்லூரிமாணவி நிவேதா தமிழ்மணி, உயர்நிலைப்பள்ளி மாணவி நிவேதா சுப்ரமணியன் இருவரும் அழகாகத் தமிழில் தொகுத்து வழங்கினர்.
சித்ரா மஹேஷ், டாலஸ், டெக்சஸ் |