மே 17, 2015 அன்று அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கம் (GATS) தமிழ்ப் புத்தாண்டு விழாவை குஜராத்தி சமாஜில் கொண்டாடியது. காலை 11.30 மணிக்குத் தொடங்கிய இவ்விழா இரவு பத்து மணிவரைக்கும் தொடர்ந்தது. ஆயிரத்து முன்னூறுக்கும் மேலானோர் பங்கேற்று மகிழ்ந்தனர்.
அட்லாண்டாவிலுள்ள இசை, நாட்டியப் பள்ளிகளின் குழந்தைகள் வழங்கிய ஆடல் பாடல்களோடு நிகழ்ச்சி தொடங்கிற்று. நிகழ்வின் ஒரு பகுதியாக, சன்டிவி புகழ் கல்யாணமாலை குழுவினர் வந்திருந்தனர். TV மோகன், மீரா நாகராஜன், புலவர் ராமலிங்கம், டாக்டர் கு. சிவராமன் , சிவக்குமார் ஆகியோருடன் உள்ளுர் பேச்சாளர்களான ராஜி பெருமாள், ஜெயா மாறன் இணைந்து வழங்கிய பேச்சரங்கம் மனதைக் கொள்ளைகொண்டது.
தொடர்ந்து 'சொல்வேந்தர்' சுகி சிவம் "செய்யும் தொழிலே தெய்வம்" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். சங்கத் தலைவர் பிரகாஷ் சூசை நன்கொடையாளர்கள், விழா நாயகர்களுக்குப் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். துணைத்தலைவர் லக்ஷ்மி தேசம் வரவேற்புரையும், பொருளாளர் பழனிச்சாமி வீரப்பன் நன்றியுரையும் வழங்கினர்.
சதீஷ் பாலசுப்ரமணி, அட்லாண்டா, ஜார்ஜியா |