மே 24, 2015 அன்று குரு இந்துமதி கணேஷ் அவர்களின் சிஷ்யையும் ந்ருத்யோல்லாசா நடனப்பள்ளி மாணவியுமான செல்வி. அபூர்வா ரங்கனின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஓலோனி ஜாக்சன் அரங்கத்தில் நடைபெற்றது.
ஆரபிராகப் புஷ்பாஞ்சலியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. சுத்தசாவேரி, ரூபக தாளத்திலமைந்த ஜதிஸ்வரத்துக்குப் பின், கலைமாமணி ரங்கநாயகி ஜெயராமன் அமைத்த வர்ணத்துக்கு ஆடினார். கண்ணனின் பாலலீலைகளை இதில் சித்திரித்து பாராட்டுக்களைப் பெற்றார். 'ஆனந்த நடமிடும் பாதம்' என்ற பாடலுக்குப் பின், ஆண்டாளின் 'வாரணம் ஆயிரம்' பாடலுக்கு ஆடினார். ரங்கன்மீது கண்மூடித்தனமாக காதல்கொண்ட ஆண்டாள், ரங்கனோடு தனக்கு நடக்கும் திருமணத்தைக் கனவுகாண்கிறார். ஆயிரம் யானைகள் சூழ மணமகனாக வரும் இறைவன், தன்னை மணமகளாய் அலங்கரித்துக் கொள்ளும் ஆண்டாள், மணப்பந்தல் வர்ணனை, இறுதியில் தான் கண்டதனைத்தும் கனவே என்று முடிக்கும் ஆண்டாளைச் சித்திரித்து ஆடுகையில் பலர் கண்களிலும் நீர் துளிர்த்ததைப் பார்க்க முடிந்தது. அடுத்து கமாஸ் ராகத்தில் பட்டாபிராமையாவின் பதத்திற்குப் பின், லால்குடி ஜெயராமன் இயற்றிய தில்லானாவுடன் முடித்தார்.
இளம்பாடகி சிந்து சிறப்பாகப் பாடினார். இளம்நர்த்தகி அக்ஷயா கணேஷின் நட்டுவாங்கமும், பிரபல கலைஞர்களான நாராயணனின் மிருதங்கமும், சாந்தி நாராயணனின் வயலினும், இந்துமதியின் நடன அமைப்பும் இவ்வரங்கேற்றத்திற்கு பலம் சேர்த்தன.
நித்யவதி சுந்தரேஷ், ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா |