தெரியுமா?: சக்தி ஜோதி
இவரது வலைப்பக்கம் 'சக்தி ஜோதி' கவிஞரும் சமூகச் செயல்பாட்டாளருமான சக்தி ஜோதியின் இந்த வலைப்பூவை சுல்தான் நிர்வகிக்கிறார். சங்க இலக்கியத்தின் சாரலை இவரது கவிதைகளில் அனுபவிக்கலாம். 'தனிமையின் வெளி', 'ஒற்றைச் சொல்', 'நினைவின் பயணம்' போன்ற கவிதைகள் நெஞ்சைத் தொடுவன. பல்வேறு இதழ்களில் இவரது கவிதைகள் பதிப்புக் கண்டுள்ளன. 'எனக்கான ஆகாயம்', 'கடலோடு இசைத்தல்', 'நிலம்புகும் சொற்கள்', 'காற்றில் மிதக்கும் நீலம்' போன்றவை இவரது முக்கியமான கவிதைத் தொகுதிகளாகும். குங்குமம் தோழி இதழில் சங்ககாலப் பெண்பாற் புலவர்களைப்பற்றித் தொடர் எழுதிவருகிறார்.

ஸ்ரீ சக்தி ட்ரஸ்ட் என்ற அறக்கட்டளையின் மூலம் திண்டுக்கல், தேனி மாவட்டங்களின் 780 கிராமங்களில் கல்வி, மகளிர் மேம்பாடு, சுயதொழில், நீர்வள மேம்பாடு எனப் பல்வேறு திறக்குகளில் சமுதாயப்பணிகளை ஆற்றிவருகிறார். தமது சிறந்த சேவைகளுக்காகப் பல அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார். இவரது கணவர் சக்தி. குழந்தைகள் திலீப், காவியா.

மிக நுண்மையான கருத்தொன்றைக் கூறும் இவரது கவிதை:
இரவெல்லாம் உறைந்து
அதிகாலை பசும்புல்லில்
துளிர்த்திருக்கிற பனித்துளி
நினைவூட்டுகிறது கடலின் இருப்பை
கடலுக்கும் பனித்துளிக்கும் இடையே
இருக்கும் அந்தரங்க வழித்தடத்தின்
மந்திரச் சொல்லை
அவளுக்குமட்டும் திறக்கும்படி
அதனோடு
ஓர் உடன்படிக்கை செய்துகொண்டாள்
ஏனெனில்
கடலாக அவளுடலும்
பனித்துளியாக அவள் மனமும்
இருப்பதை உணர்ந்திருக்கிறாள்.


ஸ்ரீவித்யா ரமணன்,
சென்னை

© TamilOnline.com