ஆனிகா ஷா 15 வயதேயான மௌன்டன்வியூ உயர்நிலைப்பள்ளி மாணவி. சான் ஃப்ரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதியில் வளர்ந்தவர். சமுதாய உணர்வு மிக்கவர்.
நேபாள நிலஅதிர்வைப்பற்றி அறிந்ததும் அதனால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களைப் பற்றியும், மற்ற சேதங்களயும் ஊடகங்களில் பார்த்தும் படித்தும் மிகவும் வேதனைப்பட்டார். அத்தோடு நின்றுவிடாமல் தன்னாலான உதவியைச் செய்ய உறுதிகொண்டார். இதற்கென 5000 டாலர் திரட்டத் திட்டமிட்டு, நண்பர்வட்டம் மூலம் எண்ணத்தைப் பரப்பித் தொகையைத் திரட்டினார். இன்னொரு நல்ல உள்ளம் இந்தத் தொகையை இரட்டிப்பாக்கியது. இரண்டையும் சேர்த்து ஒரு நிறுவனத்தின் மூலம் (Corporatate Giving) நான்கு மடங்காக்கி Global Giving தன்னார்வத்தொண்டு நிறுவனத்தின்மூலம் நேபாள நில அதிர்வு நிவாரணத்திற்கு உதவ ஏற்பாடு செய்துள்ளார்.
ஆனிகாவுக்கு இது முதல்முயற்சியல்ல. எப்போதெல்லாம் விடுமுறைக்கு இந்தியா செல்கிறாரோ அப்பொதெல்லாம் தேர்ந்தெடுத்த பள்ளிகளிலோ அல்லது அதிலுள்ள சிறாருடன் சேர்ந்தோ தன்னார்வத்தொண்டு செய்கிறார். முதியோர் இல்லங்கள், மனநிலைகுன்றிய சிறுவர்பள்ளிகள் போன்ற இடங்களிலும் தன்னாலியன்ற உதவிகளைச் செய்வார்.
எல்லாவித வாய்ப்புக்களும் அமையப்பெற்ற 15 வயதுப் பள்ளிமாணவி ஒருவர் சமுதாய அக்கறையும், அதைச் செயலாற்றும் திறனும் பெற்றிருப்பது பாராட்டத்தக்கது. ஆனிகா போன்ற அணில்கள் இன்றைய உலகுக்கு மிகவும் தேவை. |