மாற்றம்
"முரளி, நான் வழக்கம்போல் நாலு மணிக்கு வந்துடறேன். இன்னிக்கு உங்களுக்கு நல்ல நியூஸ் கட்டாயம் கிடைக்கும். ப்ளீஸ் சியர் அப்" என்ற தன் மனைவி லதாவை அரைத்தூக்கத்தில் இருந்த முரளி திரும்பிப் பார்த்தான்.

"கொள்ளை அழகடி நீ" என்று சொல்ல நினைத்தான். அழகுமட்டும்தானா அவள்! சாமர்த்தியம், தன்னம்பிக்கை எல்லாம் நிறைந்தவள். இவளுக்குத் தன்னைவிட நல்ல கணவன் கிடைத்திருக்க வேண்டுமென முரளி நினைத்தான்.

"என்ன மறுபடியும் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஹேமாவின் லஞ்ச்சை ஃப்ரிட்ஜில் வைத்திருக்கிறேன். நான் வரட்டுமா?" என்று சொல்லிக்கொண்டே தான் வேலை செய்யும் நர்சிங்ஹோமிற்குச் செல்ல ஆயத்தமானாள் லதா.

முரளி சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தான். ஆறேகால் காட்டியது. இப்போதே எழுந்து என்ன பெரிதாகக் கிழித்துவிடப் போகிறோம் என்ற எண்ணம் தோன்றியதால் அதே அரைத்தூக்கத்தில் படுத்திருந்தான். கொஞ்சநேரத்தில் தூங்கியும் விட்டான்.

"அப்பா, இன்னும் தூங்கறியா? எனக்கு ஸ்கூலுக்கு நேரமாச்சு" என்ற குரலைக் கேட்டுக் கண்விழித்தான் முரளி.

"வாசல்ல லிண்டா காத்திண்டிருக்கா. நான் லஞ்ச்சை எடுத்து வச்சுண்டுட்டேன். பை பை" என்று சொல்லிக்கொண்டே வாசலை நோக்கிச் சென்றாள் ஹேமா.

முரளி படுக்கையை விட்டெழுந்து ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான். ஹேமா, லிண்டாவுடன் சிரித்துப் பேசிக்கொண்டு செல்வது தெரிந்தது. ஆறே வயதான ஹேமாவின் பொறுப்புணர்ச்சி அவனை நெகிழவைத்தது. அடுத்த நாளாவது கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து அவள் பள்ளிக்குச் செல்லுமுன் அவளைக் கட்டியணைத்து முத்தமிட வேண்டும் என எண்ணினான்.

வழக்கம்போல் மனதில் ஒரு அயர்ச்சி. நான்கு மாதங்களாகவே இப்படித்தான். எதிலும் ஒரு பிடிப்பு இல்லை. முரளி வேலையிழந்து ஆறு மாதமாகிறது. அவன் வேலைசெய்த அலுவலகத்தில் முரளியுடன் பதினைந்து பேர்களுக்கு வேலை போய்விட்டது. ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் டிபார்ட்மெண்டில் வேலை செய்த பெரும்பாலோர் வேலை இழந்தார்கள். முதலில் முரளி வேறு வேலை கிடைத்துவிடும் என்று தைரியமாகத்தான் இருந்தான். மும்முரமாக வேறு மாகாணங்களில் இருக்கும் பல இடங்களுக்கு மனுக்கள் எழுதினான். இரண்டு மாதம் கழித்தும் வேலை கிடைக்காததால், அவன் மனவுறுதி பெரிதாகப் பாதிக்கப்பட்டது. முன்பிருந்த ஆர்வம் குன்றிவிட்டது.

அவர்கள் சேமித்து வைத்திருந்த பணம் குறைவதைக் கண்ட லதா, ஒரு நர்சிங்ஹோமில் வேலை தேடிக்கொண்டாள். கடினமான வேலை. அவள் கஷ்டப்படுவதைக் கண்ட முரளி மிகவும் வேதனையடைந்தான்.

யார் கண்டது? இன்றாவது நான் போட்ட மனுக்களுக்கு ஏதாவது பதில் வரலாம் என்று நினைத்தான் முரளி. பாத்ரூமுக்குச் சென்று முகத்தைக் கழுவினான். முகத்தில் இரண்டுநாள் தாடி. ஷேவ் செய்ய விருப்பமின்றி வெளியே வந்தான். அவசரமாக லதா போட்டு வைத்திருந்த காப்பியை மைக்ரோவேவில் சூடாக்கிக் குடித்தான். அன்று புதன்கிழமை. பேப்பர்கள் அவனுடைய போஸ்ட் பாக்ஸிற்கு வந்திருக்கும். அவரசமாக டிரஸ் செய்து கொண்டு தபால் நிலையத்திற்குப் புறப்பட்டான்.

அவனுடைய போஸ்ட் பாக்ஸில் வெளி மாகாணப் பேப்பர்கள் இருந்தனவே தவிர, அவன் அனுப்பிய மனுக்களுக்குப் பதில் எதுவும் வரவில்லை. சோர்வுடன் வீடு திரும்பினான்.

எதிலுமே பிடித்தம் இல்லை அவனுக்கு. அசிரத்தையாக ரிமோட் கண்ட்ரோலை எடுத்து ஒவ்வொரு ஸ்டேஷனாக மாற்றினான். ’எலன் டீ ஜனரஸ்’ ஷோவில் அவன் கண்ட காட்சி அவன் கவனத்தை ஈர்த்தது. சுமார் பதினைந்து வயதான ஒரு அமெரிக்கப் பையன், தன்னுடைய கேர்ள் ஃப்ரெண்டுடன் அமர்ந்திருந்தான். அவளுக்கும் அவன் வயதுதான் இருக்கும். கர்ப்பவதிபோல் இருந்தாள். எலன் அந்தப் பையனை "குழந்தை பிறந்தால் என்ன செய்யப் போகிறாய்?" என்று கேட்டபோது, "அந்தக் குழந்தையையும், அவள் அன்னையையும் காப்பாற்ற முடியும் என்னால்" என்று பதில் அளித்தான்.

முரளி அந்தப் பையனை மறுபடியும் பார்த்தான். நோஞ்சான் போலிருந்த அந்தப் பையன் பள்ளிப்படிப்பையே இன்னும் முடிக்கவில்லை. "என்ன வேலை நீ செய்வாய்?" என்று எலன் கேட்டதற்கு, "ஏதாவது வேலை செய்வேன். மெக்டொனால்ட், பர்கர் கிங் எங்கேயாவது" என்று பதிலளித்தான்.

முரளி அந்தப் பையனையும் தன்னையும் ஒப்பிட்டுப் பார்த்தான். அவனைவிட படிப்பிலும், வாழ்க்கை அனுபவத்திலும் பலமடங்கு உயர்ந்தவனாக இருந்தும், அந்த இளைஞனுக்கு இருக்கும் தைரியத்தில் பத்து சதவீதம்கூடத் தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்தான்.

ஏதோ ஒரு எண்ணத்தில் பாத்ரூமுக்குச் சென்று கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக் கொண்டான். கண்களில் பிரதிபலித்த பயம், அவனைத் தன்மேலேயே வெறுப்படையச் செய்தது.

"ஏன் இப்படிப் பயந்து சாகிறேன்? இருபதுவயது குறைவான, அதிகம் படிப்பில்லாத அந்த இளைஞனுக்கு இருக்கும் தைரியத்தில் கொஞ்சங்கூட எனக்கில்லையே. சீ... ஏதாவது வேலை என்னாலும் செய்யமுடியும். முன்போல நல்ல வேலை கிடைக்கும்வரை சோம்பேறியாக உட்காராமல் ஏதாவது வேலை செய்யப்போகிறேன்" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.

மறுபடியும் தன்னைப் பார்த்துக்கொண்டான். கண்களில் முன்பு இருந்த பயம் இல்லை. "மச் பெட்டர் நௌ" என்று சொல்லிக்கொண்டே ஷேவ் செய்துகொண்டான்.

இன்று என்ன செய்யலாம் என்று யோசித்தான். அவர்கள் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள லான்களில் புல்லை வெட்டினால் என்ன என்று நினைத்தான். ஒரு பேப்பரை எடுத்து, தன் பெயரையும் தொலைபேசி எண்ணையும், லான்களைச் சீர்படுத்த முப்பது டாலர்தான் என்பதையும் எழுதி, நகல்கள் எடுத்து, அக்கம்பக்கத்து வீட்டுக் கதவுகளில் சொருகிவிட்டு வந்தான்.

அரைமணிக்குள் அவனுக்கு இரண்டு ஃபோன் கால்கள் வந்தன. லான் மோயரைச் சரிசெய்து கொண்டபின், இரண்டு இடங்களுக்கும் சென்று நன்றாக லான்களைச் சரிசெய்தான். அறுபது டாலருடன் வீட்டிற்கு வந்தான். உடலால் செய்த உழைப்பு அவனை உற்சாகமடையச் செய்தது. உறங்கியிருந்த தன்னம்பிக்கை மறுபடியும் தலை தூக்க ஆரம்பித்தது.

குழந்தை ஹேமா வருவதற்குள் குளித்துவிட்டு, அவளுக்குப் பிடித்த உருளைக்கிழங்கு மசால் கறி செய்ய எண்ணினான். சீக்கிரமாகவே குளித்துவிட்டு, அவன் உருளைக்கிழங்குக் கறி பண்ணி வைப்பதற்கும் ஹேமா வருவதற்கும் சரியாக இருந்தது.

அவனைப் பார்த்த ஹேமாவுக்கு ஆச்சரியமும், சந்தோஷமும். "அப்பா, இன்னிக்குத்தான் உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. எப்பவும் இப்படி ஜாலியா இரேம்பா" என்றாள்.

"அட என் சமத்துக்கண்ணு" என்று சொல்லிக்கொண்டே அவளை வாரி அணைத்தான் முரளி.

அப்போது வீட்டிற்கு வந்த லதாவுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. எப்போதும் தூங்கி வழிந்து கொண்டிருக்கும் தன் கணவனின் உற்சாகம் அவளை மிகவும் சந்தோஷமடையச் செய்தது. பொங்கிவந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, "இன்னிக்கு உங்களுக்கு ஏதோ நல்ல நியூஸ் கிடைத்திருக்கிறது" என்றாள்.

சிரித்துக்கொண்டே முரளி, "ஆமாம்" என்றான்.

ஏ.சுந்தரராஜன்,
நார்மன், ஓக்லஹோமா

© TamilOnline.com