கவசம் வாங்கி வந்தேனடி!
"உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும்" என்றார் அந்த முதியவர். அவர் குரல் நடுங்கியது. முதுமையின் விளைவோ? அல்லது சொல்லப்போகும் விஷயம் அச்சம் தரக்கூடியதோ? அந்தப் பெண் சட்டென்று திரும்பினாள். அவள் முகத்தில் எள், கொள், கடுகு எல்லாம் வெடித்தன. "என்ன தைரியம் இருந்தால் என்னிடம் இப்படி முறைகேடாகப் பேசுவீர்கள்?" என்று சீறினாள்.

சம்பவம் சூடுபிடித்திருக்கும் இந்தச் சமயத்தில் நாம் ஒரு முக்கியமான ரகசியத்தை வெளிப்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். அந்த முதியவர் ராகவன், அந்தப் பெண் மாலாவின் சாட்சாத் மாமனார். அவள் வெகுண்டதின் காரணம் வேறொன்றுமில்லை: அவர் மரியாதையுடன் தன் மருமகளை "உங்களிடம்" என்று சொன்னதுதான். மாலா, ரமேஷைத் திருமணம் செய்துகொண்டபின் மருமகளாக வீட்டில் காலடிவைத்த முதல்நாள் அது!

பூகம்பத்தில் அகப்பட்ட பூனைபோல் ராகவன் நடுங்கினார். மாலா போரைத் தொடர்ந்தாள்: "நீங்கள் செய்தது தப்பு அல்ல. மகாபாவம்! என்னிடமா "உங்களிடம்" என்கிறீர்கள்? அன்புக்குப்பதில் மரியாதையைக் கொடுத்து ஏமாற்றிவிடலாம் என்று பார்க்கிறீர்களா? மரியாதை என்பது நானல்லவோ உங்களுக்குக் கொடுக்கவேண்டியது? வக்கிரமாகப் பேசுகிறீர்களே!" என்று பொரிந்தாள். கிஸ்தி கொடுக்கமறுத்த கட்டபொம்மனின் கோபம் அந்தப் பெண்ணிடம் தெரிந்தது.

ராகவன் பதில் சொன்னார்: "நீங்கள் தப்பாக நினைக்கிறீர்கள். எனக்குப் பெண் ஒருத்தி இருந்தால் அவளுடைய கணவரை மரியாதையுடன் "நீங்கள்" என்றுதான் அழைப்பேன். மருமகனுக்குக் கொடுக்கும் மரியாதையை ஏன் மருமகளுக்குக் கொடுக்கக்கூடாது? பெண்கள் சமூகத்தில் இன்னும் முன்னேற வேண்டும். அதற்கு உங்களைப் போன்ற படித்தபெண்களே தடையாக இருக்கக்கூடாது" என்றார்.

விரைவில் சரணாகதி அடையும் எண்ணம் மாலாவுக்கு இல்லை. அவள் தொடர்ந்தாள், "நீங்கள் பாரதியாரின் வாரிசாக இருக்கலாம். ஆனால் பெண்குலத்தின் போர்க்கொடியைத் தூக்கும் பாரத்தை என் தலையில் போட்டுவிடாதீர்கள். அவரவர்கள் தூக்கட்டும்! நான் பத்துவயதில் தந்தையை இழந்தவள். ஒரு தந்தையின் அன்புக்காக ஏங்குபவள். நீங்கள் அந்தக் குறையைப் போக்குவீர்கள் என்கிற நப்பாசை இருக்கிறது. நீங்களோ மரியாதை என்கிற வேலியைக்கட்டி என்னை அப்பால் தள்ளப் பார்க்கிறீர்கள். உங்கள் நெஞ்சில் ஈரம் இருக்கிறதா?" என்றாள். கோபமும் ஏக்கமும் அவள் முறையீட்டில் பொங்கி வழிந்தன.

இது என்ன விபரீதம்? நான் அறிவினால் எய்த பாணத்துக்குப் பதில் இந்தப் பெண் இதயத்தால் எய்கிறாளே! போர்விதிகளுக்குப் புறம்பானதல்லவோ இது? ராகவன் பிரம்மாஸ்திரத்தைத் தொடுத்தார்: "நான் ஒரு வாக்குறுதிக்குக் கட்டுப்பட்டிருக்கிறேன். அது ஒரு கதை" என்று பெருமூச்சு விட்டுத் தொடர்ந்தார்: "உங்களுடைய மாமியார் சுசீலாவை நீங்கள் பார்த்ததில்லை. அது உங்களுடைய துரதிர்ஷ்டம். அவள் நல்லவள். உத்தமி என்கிற வார்த்தைக்கு அர்த்தமாக அகராதியில் அவள் பெயரைத்தான் போட்டிருப்பதாக ரமேஷ் சொல்லுவான்! நல்லவர்களைக் கடவுள் எங்கே விட்டுவைக்கிறார்? என்ன அவசரமோ தெரியவில்லை. நடுவயதிலேயே அழைத்துக் கொண்டுவிட்டார். அவள் வாழ்க்கையில் நிறையக் கஷ்டப்பட்டவள். என்னுடைய... என்னுடைய...'' ராகவன் தடுமாறினார். பின் குனிந்ததலையுடன் தொடர்ந்தார், "என்னுடைய தாயும் தந்தையும் அவளிடம் அன்பு காட்டியதில்லை. கோர்ட்டில் அநீதியை எதிர்த்துப் போராடிய அட்வகேட் நான் வீட்டில் ஊமையாக இருந்தேன்." ராகவன் சட்டென்று தலையை நிமிர்த்திக் கேட்டார்: "நீங்கள் எப்பொழுதாவது கடந்தகாலத்துக்குத் திரும்பிச் சென்று சரித்திரத்தை மாற்றிப் படைக்கவேண்டும் என்று நினைத்ததுண்டா?" ராகவனின் குரல் தழுதழுத்தது. பதிலை எதிர்பாராமல் தொடர்ந்தார்: "நான் நினைக்கிறேன். கடந்தகாலத்துக்குத் திரும்பிச் சென்று அவளுக்கு நடந்த அநீதிகளைத் தடுத்துநிறுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். நான் எவ்வளவு பைத்தியம் பார்த்தீர்களா! கையில் சந்தர்ப்பம் இருந்தபோது நழுவவிட்டு இப்பொழுது கையாலாகாதவன்போல் பிதற்றுகிறேனே!" அவர் குரலில் சுயவெறுப்பு விஸ்வரூபம் எடுத்தது. மாலா தன்முன் முதியவரின் கோலத்தில் நின்ற அந்தக் குழந்தையைக் கண்கொட்டாமல் பார்த்தாள்.

ராகவன் தொடர்ந்தார்: "சுசீலா கண்மூடும்முன் வாக்குறுதி ஒன்று வாங்கிக்கொண்டாள். தன்னுடைய பிற்கால மருமகளைப் பாதுகாப்பதற்காக! "அவளுக்கு உங்களால் ஒரு கஷ்டமும் வரக்கூடாது. என் கதி அவளுக்கு நேரக்கூடாது. அவளை நீங்கள் மரியாதையுடன் நடத்தவேண்டும். சொல்லப்போனால் நீங்கள் அவளை 'நீங்கள்' என்று மரியாதையுடன் கூப்பிடவேண்டும். மரியாதையிருக்கும் இடத்தில் எதிர்பார்ப்புகள் குறையும். அதனால் ஏமாற்றங்களும் குறையும். அதுவே நீங்கள் அவளிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வைக்கும். அந்த 'நீங்கள்' என்கிற வார்த்தைதான் நீங்கள் அவளுக்குத் தரும் கவசம். அந்தக் கவசம் உங்களிடமிருந்து அவளைப் பாதுகாக்கும். அந்த வார்த்தையில் நான் குடிகொண்டு நீங்கள் அவளுக்குக் கொடுக்கவேண்டிய மரியாதையை நான் நினைவுறுத்திக் கொண்டிருப்பேன்" என்று சொல்லிக் கண்மூடினாள்". அவர் குரல் கம்மியது. ராகவன் தொடர்ந்தார்: "பார்த்தீர்களா! உங்களைப் பார்த்திராத ஒருவள் உங்களுக்காக எவ்வளவு வாதாடியிருக்கிறாள்! நீங்கள் அதிர்ஷ்டசாலி" என்றார். தான் பார்த்திராத ஒரு தெய்வத்தை மாலா மானசீகமாக வணங்கினாள்.

ராகவன் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்: "இப்பொழுது உங்களுக்குப் புரிகிறதா? கொடுத்த சத்தியத்திற்கு நான் கடமைப் பட்டிருக்கிறேன். ஆகையால், யுவர் ஆனர், ஐ மூவ் தட் தி கேஸ் பி டிஸ்மிஸ்ட்" என்று அட்வகேட் பாணியில் வாதத்தை முடித்துக்கொண்டார்.

"நாட் ஸோ ஃபாஸ்ட், யுவர் ஆனர்" என்றாள் மாலா கண்களைத் துடைத்துக்கொண்டே. "உங்களைப் பார்த்தால் எனக்குப் பூதமாகத் தெரியவில்லை. ஒரு பண்புடைய மனிதராகத்தான் தெரிகிறது. உங்களிடமிருந்து எனக்குப் பாதுகாப்பு தேவையில்லை. அன்பின் அரவணைப்புதான் தேவை. இத்துடன் இந்தக் கதையை முடித்துக் கொள்ளலாம்" என்றாள் மாலா.

ராகவன் விரக்தியுடன், "விஷப்பரீட்சை வேண்டாம் அம்மா. ஆங்கிலத்தில் நீ, நீங்கள் என்கிற வித்தியாசம் இல்லை. 'யூ' என்கிற வார்த்தையில் அரசனும் அடங்குகிறான், ஆண்டியும் அடங்குகிறான். நம் மொழியில் அதைப் பாகுபடுத்தி தாராளமனதுடன் 'நீ', 'நீங்கள்' என்று இரண்டு வார்த்தைகள் கொடுத்திருக்கிறார்கள். அந்தத் தாராளத்தை அனுபவிக்கவேண்டியது நம் கடமை" என்றார்.

மாலா உறுதியாக இருந்தாள். "இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டவள் நான். ஆகையால் நான் சொல்வதே கடைசிவார்த்தை. இப்பொழுது 'நீ' என்றே என்னைக் கூப்பிடுங்கள். பிற்காலத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் நம் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யலாம்" என்று பழுத்த அரசியல்வாதியைப்போல் சொன்னாள். "நீ இன்று வென்றுவிட்டாய், அம்மா. உன் வெற்றி நிலைக்கவேண்டுமே என்கிற கவலை எனக்கு இருக்கிறது" என்று ராகவன் முடித்தார். கண்ணைமூடி, "என்னை மன்னித்துவிடு" என்று அவர் மனதில் வேண்டிக்கொண்டது சுசீலாவுக்குக் கேட்டிருக்கும். சஞ்சலம் அவர் மனதை ஆட்கொண்டது.

நாட்கள் ஓடின. அன்று இருட்டிவிட்டது. கடிகாரம் இரவு எட்டுமணி அடித்தது. ராகவனுக்குப் பசி வயிற்றைக் கிள்ளியது. ஏன் மாலா இன்னும் ஆஃபீசிலிருந்து வரவில்லை? என்ன பெண் இவள்? ஒரு வயதானவருக்குப் பசியெடுக்கும் என்பது தெரியாதா? மணி வளரப் பசியும் வளர்ந்தது. அதனுடன் கோபமும் வளர்ந்தது. ரமேஷ் டூரில் ஊருக்குப் போனால் இவளுக்குத் திமிர் அதிகமாகிவிடுகிறதோ? வரட்டும். பார்க்கலாம்! "ஸாரி அப்பா! இன்று லேட்டாகிவிட்டது" என்கிற குரல்கேட்டுத் திரும்பினார் ராகவன். மாலா அங்கே நின்றுகொண்டிருந்தாள். "என்ன, ஆரத்தி கொண்டுவந்து உன்னை வாசலில் வரவேற்க வேண்டுமா?" என்றார் ராகவன். அவருடைய வார்த்தைகளில் நிறைந்திருந்த விஷத்தில் மாலா ஸ்தம்பித்து நின்றாள்.

"ரொம்பவும் ஸாரி அப்பா! ஆஃபிசிலிருந்து கிளம்புவதற்கு லேட்டாகிவிட்டது. இன்று பார்த்து செல்ஃபோன் பேட்டரியும் ஸ்டிரைக் செய்தது. மன்னிக்க வேண்டும்" என்றாள் மாலா. "ஆஃபீஸ், வீடு என்று இரண்டு பொறுப்பையும் சேர்ந்து கவனிக்கத் தெரியாதவர்களுக்கு ஆஃபீஸ், மண்ணாங்கட்டி எல்லாம் ஏன் அவசியம்? வீட்டில் ஒருவன் பட்டினி கிடக்கிறேன் என்பது தெரியவில்லையா?" என்றார் ராகவன். அவர் குரலில் ஏளனம் தெரிந்தது.

மாலா கூர்ந்த கண்களால் அவரை நோக்கினாள். "இது தினமும் நடக்கும் தப்பு இல்லை. அது உங்களுக்கும் தெரியும். கிச்சன் டேபிளின்மேல் எப்பொழுதும் வாழைப்பழம் இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். அதை நீங்கள் முன்பசிக்குச் சாப்பிட்டிருக்கலாமே" என்றாள். ராகவன் வெகுண்டார்: "ஓஹோ, பழி என் மேலேயா? குற்றவாளி என்கிற பட்டத்தை சாமர்த்தியமாகக் கொடுத்து விட்டாயே! வேறு என்னவெல்லாம் பட்டம் எனக்குச் சூட்டவிருக்கிறாய்? பத்மஸ்ரீ பட்டம் கிடைக்காத குறையை நீ தீர்த்து வைத்துவிடுவாய் போலிருக்கிறதே!" ராகவனின்

நாக்கில் சனி புகுந்து விளையாடியது. மாலா கூர்மையாக அவரைப் பார்த்தாள். பார்வையின் கூர்மைக்குச் சக்தி இருந்திருந்தால் அன்றே ராகவன் பஸ்மாசுரனின் கதியை அனுபவித்திருப்பார்.

பேச்சை வளர்ப்பதில் பயனில்லை என்பதை உணர்ந்த மாலா பேசாமல் அவருக்குச் சாப்பாடு போட்டுவிட்டுப் பட்டினியாகத் தூங்கச்சென்றாள். நாவினால் சுட்ட வடு ஆறாமல் அவளை வாட்டியது. தலையணை குளமாகியது. யுத்தத்தில் தோற்றவள் தூங்கவில்லைதான். ஆனால் வென்றவரும் தூங்கமுடியாமல் தவிக்கிறாரே! எண்ணங்களின் ஊர்வலம் ராகவனை வாட்டியது: இப்பொழுதெல்லாம் ஏன் எனக்கு அவள்மேல் நிறையக் கோபம் வருகிறது? கண்மண் தெரியாமல் பேசிவிடுகிறேனே! நான் செய்வது தப்பு என்பது தெரிகிறதே. அப்படியும் ஏன் மறுபடியும் தவறு செய்கிறேன்? என்னிடம் இருந்த நியாய உணர்வு எங்கே? ஒரு தீயவனின் செயல்களைவிட ஒரு நல்லவனின் மனச்சாட்சிக்குக் கடுமை அதிகம் என்பார்கள். அந்த மனச்சாட்சி ஈவிரக்கமில்லாமல் ராகவனை சித்திரவதை செய்தது.

மறுநாள் காலை! "உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும்" என்றார் அந்த முதியவர். அவர் குரலில் நடுக்கம் இல்லை. தெளிவுதான் இருந்தது. அந்தப் பெண் சட்டென்று திரும்பினாள். அவருடைய வார்த்தையின் அர்த்தம் அவள் முகத்தில் பீதியாகவும் ஏமாற்றமாகவும் பிரதிபலித்தது. ராகவன் தொடர்ந்தார்: "நான் உங்களுக்குக் கவசம் ஒன்று வாங்கி வந்திருக்கிறேன். உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?" அவர் குரலில் குழந்தைக்கு ஒரு பஞ்சுமிட்டாய் வாங்கி வந்த தாயின் சந்தோஷம் தெரிந்தது. கலங்கிய கண்களுடன் மாலா பேசினாள்: "அன்பை உங்களிடமிருந்து வாங்குவதில் தோற்றுவிட்டேன் இல்லையா? மரியாதை கொடுத்தே தீரவேண்டும் என்கிற உங்கள் பிடிவாதத்தில் வென்றுவிட்டீர்கள் இல்லையா?"

ராகவன் அவளைத் தேற்றினார்: "அது என் தப்பு அம்மா. பகுத்தறிவு படைத்த மனிதனின் புத்தி நல்லதையும் கெட்டதையும் பாகுபடுத்த அறிந்திருக்கலாம். ஆனாலும் பரம்பரை பரம்பரையாக அவனுடைய மரபணுக்களில் ஊறிய குணங்கள் சுலபமாக மாறுவதில்லை. அந்த உண்மையை நான் நேரடியாகச் சந்தித்தேன். மருமகளை மகளாக நடத்தும் பக்குவம் எனக்கு இன்னும் வரவில்லை. ஆனால் அந்தப் பக்குவம் இல்லை என்கிற உண்மை எனக்குத் தெரிகிறது. அந்தவகையில் நீங்கள் அதிருஷ்டசாலிதான். முட்டாளாக இருந்துகொண்டே அதைத் தெரியாமல் இருப்பதைவிட தெரிந்திருப்பது மேல் அல்லவா?" என்று சொல்லிச் சிரித்தார். சிரிப்பவரின் கண்கள் ஏன் குளமாகின்றன?

ராகவன் தொடர்ந்தார், "அந்தப் பக்குவம் எனக்கு வரும்வரையில் இந்தக் கவசம் உங்களைப் பாதுகாப்பது முக்கியம். உங்கள் நலனில் அக்கறையுள்ள ஒரு கிழவனின் பரிசாக அதை ஏற்றுக்கொள்ளுங்கள்" அவர் குரல் தழுதழுத்தது. மாலாவின் கண்கள் கலங்கின. அவள் கண்முன் அவருடைய உருவம் தெய்வமாக ஒரு பீடத்தில் ஏறிக் காட்சியளித்தது.

ஹாலில் மாட்டியிருந்த படத்திலிருந்து சுசீலா நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். தன் கணவரைப்பற்றிய பெருமிதம் அவள் முகத்தில் ஏறியிருந்ததைக் கூர்மையான பார்வையாளர்கள் கவனித்திருப்பார்கள். அப்பொழுதுதான் மார்கழி மாதத்துக் கதிரவன் சன்னல் வழியாக ஹாலில் பிரவேசித்திருந்தான். அவன் அருளிய வெளிச்சத்தில் மாலா அணிந்திருந்த பொற்கவசம் சுசீலாவின் கண்களில் பளீரென்று ஜ்வலித்தது.

ஹம்ஸானந்தி,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com