முன்கதை: ஷாலினிக்கு சக ஆராய்ச்சியாளரிடமிருந்து துப்பறிவாளர் சூர்யாவின் உதவிகேட்டு மின்னஞ்சல் வந்தது. சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் குட்டன்பயோர்க் என்னும் முப்பரிமாண உயிர்ப்பதிவு நிறுவனத்துக்கு விரைந்தனர். அவர்களை வரவேற்ற அதன் நிறுவனர் அகஸ்டா க்ளார்க்கிடம் சூர்யா ஓர் அதிர்வேட்டு யூகத்தை வீசினார். வரவேற்புக் கூடத்திலிருந்த புகைப்படங்களையும் அலங்கரிப்புகளையும் வைத்தே தாம் யூகித்ததாகச் சூர்யா விளக்கினார். வியப்புற்ற அகஸ்டா, சூர்யாவின்மேல் பெரும்நம்பிக்கையுடன் தன் ஆராய்ச்சிக் கூடத்தைச் சுற்றிக்காட்டினாள். உயிரியல் முப்பரிமாணப் பதிப்பால் மனிதர்களின் உள்ளங்கங்களின் பற்றாக்குறையைத் தீர்க்க இயலும் என்று விளக்கினாள். திசுப்பதிக்குமுன் அதற்கு அடிப்படையான உயிரியல் சார்பற்ற பொருட்களைப் பதிக்கும் பொது நுட்பங்களை விவரித்துவிட்டு திசுப்பதிப்பு (bio-tissue printing) நுட்பங்களை விவரித்தாள். மின்வில்லைகளின்மேல் திசுக்களைப்பதித்து, அவற்றை மிருகங்களுக்குப் பதிலாக பரிசோதனைக்குப் பயன்படுத்தலாம் என்றாள். ஆனால், முப்பரிமாணப் பதிப்பால் முழு அங்கங்களை உருவாக்க வேண்டுமெனில் இன்னும் தாண்டவேண்டிய தடங்கல்கள் பல உள்ளன என்று விவரித்தாள்....
*****
முழு அங்கங்கள் பதிப்பது சிக்கல் மிகுந்த விவகாரம், பற்பல விதமான உயிரணுக்கள் பதிக்கப்படுவது மட்டுமல்லாமல், அவை உயிரோடு தொடர்ந்து வேலை செய்யவேண்டும், உடல் நிராகரிக்காமலிருக்க வேண்டும்; ஏதாவது சரியாக வேலை செய்யவில்லை என்றால் உடலுக்குள்ளேயே நிவர்த்திக்கப்பட வேண்டும்; இப்படிப் பல கஷ்டமான நுட்பங்களை யாவற்றையும் ஒருங்கிணைக்கவேண்டும் என்று அகஸ்டா அடுக்கியதும் அசந்தே போன நம் மூவர், மேற்கொண்டு உரையாடினர். பற்பல விதமான உயிரணுக்களை அவையவை இருக்க வேண்டிய இடத்தில் பல மெல்லிய அடுக்குகளில் பதிப்பது, இருபரிமாண வண்ணப் பதிப்பு நுட்பம், தன் பழைய மின்வில்லைத் தொழிலில் பயன்படுத்திய மறைப்பு நுட்பத்தைப் போலிருப்பதாகக் குறிப்பிட்ட சூர்யா, மற்றத் தடங்கல்களை விவரிக்குமாறு அகஸ்டாவைத் தூண்டினார்.
சூர்யா, கிரண், ஷாலினி மூவருமே, இத்துறையிலுள்ள தடங்கல்களைப் பற்றிக் கச்சிதமாகக் கூறியதாகப் பாராட்டிய அகஸ்டா, மேற்கொண்டு விவரித்தாள். "சரி, இதுவரை பலவிதமான உயிரணுக்களைச் சேர்த்துப் பதிக்கும் சவாலை எப்படிச் சமாளிக்கலாம் என்றுதான் பார்த்தோம். ஆனால் அதைவிட மிகமிகக் கடினமான அடுத்த தடங்கல் என்ன தெரியுமா?"
எதையோ சொல்ல வாய்திறந்த ஷாலினியை முந்திக்கொண்டு கிரண் குறுக்கிட்டான், "ஓ! பிக் மீ, பிக் மீ! எனக்குத் தெரியும். ஷாலினிதான் முதல்லயே கேட்டாளே. அங்கங்களைப் பதிச்சா போதாது, அவை உயிரோட வேலை செய்யணுங்கறதுதானே அடுத்த பெரிய தடங்கல்?"
அகஸ்டா கைதட்டவும் கிரண் பூரிப்புடன் அகஸ்டாவைப் பார்த்துப் புன்னகைத்தான். அவனை விளையாட்டாக மண்டையில் தட்டிய ஷாலினி, "ஏய் கிரண், ரொம்பத்தான் வழியாதே, இந்தக் கூடமே ரொம்பிடப் போகுது!" என்று சீண்டிவிட்டு, மேலே கேட்டாள், "ஆமாம், அகஸ்டா. நான் முன்னமே கேட்டபடி, முப்பரிமாணமா உருவான அங்கங்கள் தங்களோட சரியான வேலையைச் செய்யணும்னா, அவற்றுக்கு எப்படியாவது சக்தி வேணும் இல்லயா? மனிதவுடல், ஏன், மிருகவுடல்களில்கூட, செயல்படணும்னா அந்தச் சக்தி ரத்த ஓட்டத்தில் கிடைக்கும் ஆக்ஸிஜன் மற்றும் சத்துப்பொருள் மூலமாத்தானே கிடைக்குது. அவை வேலை செய்வதில் உருவாகும் கழிவுகளை அங்கிருந்து அகற்றவும் ரத்த ஓட்டம்தான் பயன்படுது. முப்பரிமாணத் திசுப்பதிப்பில் நீங்க உருவாக்கற அங்கங்களுக்கு எப்படி அந்த மாதிரி சக்தி கிடைக்குது, எந்த வழியில் கழிவு அகற்றப்படுது?"
அகஸ்டா மீண்டும் கைகொட்டினாள். "ரொம்ப கரெக்ட் ஷாலினி! உயிரோடுள்ள பிராணி அல்லது மனிதருக்குப் பொருத்திய பதிக்கப்பட்ட அங்கம் சரியாக வேலைசெய்து பலனளிக்க வேண்டுமானால் அதற்கு ரத்த ஓட்டம் அத்தியாவசியம். அதனால். முப்பரிமாண முறையில் திசுக்களைப் பதிக்கும் போது பலவித அகலமுள்ள ரத்த நாளங்களை அங்கம் முழுவதிலும் பரவியிருக்கும்படி திசுக்களுடன் சரியான இடங்களில் பொருந்தி ஆக்ஸிஜன் மற்றும் சத்துப்பொருட்களை அளித்து, கழிவுகளை அகற்றும்படிப் பதிக்க வேண்டியிருக்கிறது. ஆனால்..."
சூர்யா குறுக்கிட்டார், "ஆனால் என்ன அகஸ்டா? ரத்த நாளங்களும் திசுக்கள் கொண்டவைதானே! அங்கங்களில் சரியான அடுக்குகளில் மற்ற அணுக்களைப் பதிப்பதுபோல் அவற்றையும் பதிக்கலாம் அல்லவா? இதில் என்ன தடங்கல்?"
அகஸ்டா புன்னகையுடன் தலையாட்டினாள். "அது ஓரளவு சரிதான். ஆனால் ரத்த நாளங்களை அங்கம் முழுவதும் ஊடுருவி, கேப்பிலரிக் குழாய்களாகப் பிரிந்து மற்ற உயிரணுக்குளுடன் சரியாகத் தொடர்புகொண்டு செயலாற்றும்படிப் பதிப்பது, மற்ற உயிரணுக்களைப் பதிப்பதைவிட பலமடங்கு கடினமானது. இதற்கு நாளமிடல் (vascularization) என்று பெயர். அதுவும் திசுதானே என்று கேட்டீர்கள். ஏனெனில், பெரிய நாளங்களை, திசுப்பதிப்பது போலவே பதிக்க இயலக்கூடும். ஆனால் அவை குழாய்களாக இருப்பதால் வெற்றிடத்தில் அமைப்பது கடினம். மேலும், சிறு சிறு கேப்பிலரி நாளங்களின் துவார அகலமும், அவைகளை உயிரணுக்களுடன் சரியான இடங்களில் பொருந்தும்படி உருவாக்குவதும் மிகக்கடினமாக இருந்தது. அதனால், திசுக்களைப் பதிக்கப் பயன்படுத்தி திசு வளர்ந்ததும் அகற்றப்படும் பயோஜெல் போன்று குழாய்போன்ற ரத்தநாளங்களை மிகச்சிறிய அகலத்தில் எப்படிப் பதிப்பது என்பதுதான் தடங்கல். புரிகிறதா?"
சூர்யா புரிகிறது என்று தலையாட்டினார். "அதாவது, பரப்பளவு ரீதியில் பதித்து வளர்க்கப்படும் திசுக்களைப் பதிப்பதைவிட, பல கோணங்களில், பல அகலங்களில் ஊடுருவும் நாளங்களையும், மிகச்சிறிய திசு-குழாய் கேப்பிலரி இணைப்புகளையும் பொருத்துவது மிகக்கடினமானது, குழாய்களைப் பதிக்க எதாவது அடிப்படையாகத் தேவை, அதற்குத் திசுக்களின் பரப்பு அடிப்படையான பயோஜெல் தகுதியற்றது, குழாய்போன்ற ஆதாரம் தேவை என்கிறீர்கள் அதுதானே?!"
"ஆஹா! மிக நன்றாகப் புரிந்துகொண்டு கச்சிதமாக விளக்கிவிட்டீர்களே!"
"அகஸ்டா, குழாய்மாதிரி அடிப்படை வேணும்னா, நீளமா, நன்றாக வளைந்து நெளியற மெல்லிய இழைமாதிரி எதாவது பயன்படுத்தலாம் இல்லையா? அதுமேல நாளங்களின் மூலப்பொருளை ஒட்டவெச்சுட்டு, அடிப்படை இழையை இழுத்தோ, உருக்கியோ எடுத்துடலாம் இல்லயா? அப்போ குழாய் மாதிரி ஆயிடும் இல்லயா?" என்றார் சூர்யா.
அசந்தேபோன அகஸ்டாவின் முகம் போனபோக்கு கிரணுக்குச் சிரிப்பை வரவழைத்தது. அடக்கிக்கொண்டு ஷாலினியைத் தட்டி, அகஸ்டாவின் முகபாவத்தைப் பார்க்கத் தூண்டினான். ஷாலினி சிரிப்பை அடக்க வேறுபக்கமாகத் திரும்பிக்கொண்டாள்.
சற்றே தடுமாறிய அகஸ்டா, "அது,… அது... எப்படி உங்களுக்கு... நீங்க எப்படி?" என்று திணறியவள், சுதாரித்துக்கொண்டு "சூர்யா, நீங்க ஒரு மந்திரவாதியா என்ன! இந்தத் துறையில பல வருஷமாக் கஷ்டப்பட்டு மிகத்திறனுள்ள விஞ்ஞானிங்க கண்டுபிடிச்ச நுட்பத்தை எப்படி ஒரு நொடியில பட்டால்னு சொல்லிட்டீங்களே! முதல்லயே எங்கயாவது படிச்சீங்களா என்ன?" என்றாள்.
சூர்யா முறுவலுடன் தலையசைத்தார். "ஒரு மந்திரமும் இல்லை, படிக்கவும் இல்லை. ஒரு கலப்பட யூகந்தான். முதல்ல ஒருமுறை கிரண் வீட்டில கார் மாடல் செய்ய துவாரம் வைக்கவேண்டிய இடங்களில் எதோ கருப்பு ப்ளாஸ்டிக் பதிச்சுட்டு அப்புறம் உருக்கி எடுத்துட்டதா ஷாலினி சொல்லியிருந்தா. இப்பகூட இந்தப் பரிசோதனைக்காக உயிரணுக்களைப் பதிக்கறப்போ பயோஜெல் மேல பதிக்கறதா சொன்னீங்க. மேலும் சாதாரண இரும்புக் குழாய்களைச் செய்யறதா இருந்தாலும் அச்சு நடுவுல மண்ணை வச்சுதானே பலநூறு வருஷமா செய்யறாங்க? அதையெல்லாம் சேர்த்து யோசிச்சுப் பார்த்தேன். வளைவு நெளிவா திசுக்குழாய்கள் பதிக்கணும்னாலும் அதே நுட்பத்தைப் பயன்படுத்த முடியுமோன்னு தோணிச்சு, கேட்டேன். அவ்வளவுதான். அந்த நுட்பத்தின் நுணுக்கங்கள் என்ன விவரம் சொல்லுங்க."
அகஸ்டா பிரமிப்புடன் தலையசைத்தாள். "திஸ் இஸ் ஜஸ்ட் டூ மச்! கலப்பட யூகம்னு ரொம்ப சாதாரணமா சொல்லிட்டீங்க, ஆனா இது ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு. இதையே இவ்வளவு எளிதாப் புரிஞ்சிகிட்டீங்களே. எங்க பிரச்சனையையும் நீங்க படக்குன்னு புரிஞ்சிக்கிட்டு தீத்து வைப்பீங்கங்கற நம்பிக்கை எனக்கு இன்னும் வளருது!"
அகஸ்டாவின் பாராட்டை முறுவலுடன் ஏற்றுக் கொண்ட சூர்யா தொடருமாறு சைகை செய்தார். அகஸ்டா விளக்கினாள், "நீங்க சொன்னபடியேதான் செய்யறாங்க. வெவ்வேறு விட்ட அகலமுள்ள, வளைந்து நெளியக்கூடிய ப்ளாஸ்டிக் இழைகளை (flexible plastic fibers) வேண்டிய இடத்திலெல்லாம் முதல்ல பதிக்கறாங்க. அப்புறம் அதுமேல ரத்த நாளங்களின் திசு அணுக்களைப் பதிக்கறாங்க. அவை ஓரளவு நல்லாப் பதிஞ்சு நாளவலையா அமைஞ்சதும் ஒவ்வொரு இழையா மெல்ல உருவிடறாங்க. பதிக்கப்பட்ட நாளங்கள் அப்படியே அதே இடங்களில் இருந்து, ரத்த ஓட்டத்துக்கும் அது மூலமா ஊட்டச்சக்தி அளிக்கவும், கழிவுகளை அகற்றவும் பயன்படுது. ஓ! அப்புறம் சூர்யா, நீங்க நாளங்களுக்கு அடிப்படையா இருக்கறதை உருக்கிடலாம்னுகூட சொன்னீங்க இல்லயா? அந்த மாதிரியான ஜெல் உருக்கும் நாளமிடல் நுட்பத்தை ஹார்வர்டு விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்காங்க. யூ வின் அகெய்ன்!"
சூர்யா மீண்டும் பவ்யமாகத் தலையாட்டிப் பாராட்டை ஏற்றுக்கொண்டு, தீவிர சிந்தனையைத் தொடர்ந்தார். ஷாலினி ஆர்வத்துடன், "அப்படின்னா இந்த நாளமிடல் நுட்பத்தைமட்டும் வச்சே காயமடைஞ்ச அங்கங்களுக்கு மீண்டும் இயல்பா ரத்த ஓட்டம் வராமாதிரி சரிசெய்யலாம் இல்லயா? அதை இப்பவே செய்ய முடியுமா?" என்றாள்.
அகஸ்டா சற்றுச் சோகத்துடன் தலையசைத்தாள். "இல்லை ஷாலினி, இந்த நுட்பம் இப்பவரைக்கும் மிகமுன்னேறிய ஆராய்ச்சிக் கூடங்களில்தான் ஓரளவுக்கு பயன்படுத்தப்படுது. இன்னும் அன்றாட மருத்துவச் செயல்பாட்டுக்கு வரலை."
குட்டன்பயோர்கின் சிறப்பு நுட்பங்கள் என்ன, அதில் எழுந்த பிரச்சனை என்ன, சூர்யா அதை எவ்வாறு அவிழ்த்தார் என்பதை வரும் பகுதிகளில் காண்போம்!
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |