செப்டம்பர் 17, 2005 அன்று சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் லாஸ் ஆல்டோஸ் நகரத்தில் உள்ள ஃபுட் ஹில்ஸ் கல்லூரியின் ஸ்மித் விக் அரங்கத்தில் தொடு வானம் எனும் தலைப்பில் தமிழ்த்திரையிசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. பிரபல தில்லானா குழுவினர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியின் மூலம் சென்னை அடையாரில் உள்ள புற்று நோய் மருத்துவமனை மற்றும் தமிழ் மன்றத்திற்கு $12,700 நிதி திரட்டப் பட்டது. அதில் $6,500 புற்றுநோய்க் கழக அறக்கட்டளைக்கு (Cancer Institute Fondation - WIA) அளிக்கப் பட்டது.
மன்றத் துணைத்தலைவர் ஜெயவேல் முருகன் வரவேற்றார். இயற்கைச் சீற்றத்தால் சேதமுற்ற நியூ ஆர்லியன்ஸ் நகர மக்களுக்கு அஞ்சலி செலுத்தியபின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. CIF-ன் வளைகுடாப் பகுதித் தலைவர் கண்ணன் வைரவன் நன்றியுரை வழங்கினார்.
புதிய செயற்குழுத் தேர்தல் அக்டோபர் 16, 2005 அன்று தமிழ் மன்றத்தின் 2006-ம் ஆண்டிற்கான செயற் குழு தேர்தல் நடைபெற்றது. தலைவர் தில்லை குமரன் வரவேற்றார். நிதி அறிக்கையை பகீரதி சேஷப்பன் வாசித்தார். வளைகுடாப் பகுதியில் நிறுவ உள்ள தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் இயக்குனர் சிவா சேஷப்பன் மையத்தின் அவசியத்தை எடுத்துக் கூறிய பின்பு, ஜெயவேல் முருகன் அவர்களை நிதி திரட்டும் குழுவின் தலைவராக நியமனம் செய்தார்.
2006-ம் ஆண்டின் செயற்குழு உறுப்பினர்களாக TS ராம், சுமதி நடேசன், குறிஞ்சி குமரன், முஸ்த·பா அகமது மற்றும் டில்லிதுரை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.
தில்லை குமரன் |