ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா குருக்ஷேத்திரப் போர் முடிந்தபின் அரசி காந்தாரியைப் பார்த்து ஆறுதல் கூறச் சென்றார். அவள் ஸ்ரீகிருஷ்ணரைப் பார்த்து, "நீ கடவுளாக இருந்தும் எவ்வாறு ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்ளலாம்? நீ பாண்டவர்களை ஆதரித்தாய். ஆனால் நான் பெற்ற மைந்தர்கள் நூறுபேரில் ஒருவனைக்கூட உன்னால் காப்பாற்ற முடியவில்லையே!" என்று குற்றம் சாட்டினாள்.
ஸ்ரீகிருஷ்ணர், "சகோதரி! உன் மைந்தர்களின் மரணத்துக்கு நான் பொறுப்பாளி அல்லன். நீயேதான் பொறுப்பு" என்று பதிலுரைத்தார். இதைக்கேட்ட காந்தாரி, "கிருஷ்ணா! என்னையே இப்படிக் குற்றம் சாட்டும் அளவுக்கு உன்னால் எப்படிக் கல்மனதுடன் இருக்க முடிகிறது?" என்றாள்.
ஸ்ரீகிருஷ்ணர், "சகோதரி! நீ நூறு மைந்தர்களை ஈன்றெடுத்தாய். ஆனால் எப்பொழுதாவது ஒருமுறையேனும் அவர்களில் ஒரு மகனையாவது அன்போடு பார்த்திருப்பாயா? நீயும் பார்வையற்றவளாகவே வாழ முடிவுசெய்தாய். உன் மைந்தர்கள் எவ்வாறு வளர்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று உன்னால் பார்க்கக்கூட முடியவில்லை. தாயின் மென்மையான பரிவையும், பாசத்தோடு கூடிய அன்புப் பார்வையும் கிடைக்கப்பெறாத உன் குழந்தைகள் உண்மையில் துரதிர்ஷ்டசாலிகளே. அவர்கள் கடமை, ஒழுக்கம், தர்மநெறி ஆகியவற்றை எவ்வாறு அறிந்து வாழ்வார்கள்? தாய்தான் ஒருவருக்கு முதல் ஆசிரியரும், போதகரும் ஆவாள்" என்று பதிலுரைத்தார்.
ஸ்ரீகிருஷ்ணர் மேலும் கூறினார், "நீயே உன் நிலையையும், குந்திதேவியின் நிலையையும் ஒப்பிட்டுப் பார். குந்திதேவி தன் கணவர் இறந்த கணத்திலிருந்தே தன் மைந்தர்களை மிகுந்த அன்புடனும், அக்கறையுடனும் வளர்த்துவந்தாள். அரசமாளிகையோ, அரக்கு மாளிகையோ எதுவானாலும் அவள் தன் மைந்தர்களைப் பிரியாமல் உடன் வாழ்ந்துவந்தாள். பாண்டவர்கள் தமது தாயின் அருளாசியைப் பெறாமல் எதையும் செய்வதில்லை. அவர்கள் என் அருளைப் பெற்றதும், அவர்களில் யாருடைய தனிப்பட்ட திறமையாலும் கிடையாது. குந்தி இடைவிடாது என்னிடம் செய்த பிரார்த்தனையால்தான். 'உன்னால்மட்டுமே என் மக்களைக் காப்பாற்றமுடியும்' என்று அவள் சதா என்னிடம் வேண்டிக் கொண்டிருப்பாள். யாரால் தன் தாயின் அன்புப் பார்வையைப் பெறமுடியவில்லையோ அவரால் தெய்வத்தின் அருட்பார்வையையும் பெறமுடியாது. கடவுளின் அன்பையும் பெறமுடியாது."
இவ்வாறாக, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் குழந்தைகளின் நல்வாழ்வில் ஒரு தாயின் பங்கு என்ன என்பதைக் காந்தாரிக்குத் தெளிவுபடுத்தினார்.
நன்றி: சனாதன சாரதி, அக்டோபர் 2012
பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா |