ஆயிற்று 16 வருடகாலம், அட்லாண்டாவில் குடியேறி.
பல இனத்தவருடன் வேலைசெய்தாலும், நானுண்டு என் வேலையுண்டு என்றிருக்கும் கூச்சசுபாவம் எனக்கு. வற்றல்குழம்பு, தயிர்சாதம் என்றே பழகிய நாக்கு, எனவே நான் சகபணியாளர்களுடன் உணவகங்களுக்குப் போய் உணவுண்ட நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
நான் வேற்றினத்தைச் சேர்ந்த நெருங்கிய தோழியர் சிலரை என் வீட்டில் விருந்துக்கு அழைத்ததுண்டு. "ஆஹா, ஓஹோ" என்று முதலில் புகழ்ந்துவிட்டு, பிறகு மசால்தோசை, இட்லி, வடை, சாதம், ரசம், பாயசம் என்று எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்துகொண்டு, சாப்பிடமுடியாமல் தர்மசங்கடத்தில் உட்கார்ந்திருக்கும் அவர்களைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கும். எனவே என் தமிழ்நாட்டுச் சமையல் பிரதாபங்களை அவர்களிடம் காட்டிச் சிரமப்படுத்த வேண்டாம் என்று வீட்டுக்குக் கூப்பிடுவதைக் குறைத்துவிட்டேன்.
ஓரிருமுறை கிறிஸ்துமஸ் விருந்துகளுக்குக் கூட்டத்தோடு வேற்றினத்தவர் வீடுகளுக்குப் போயிருக்கிறேன். ஆனால் எனக்கு அவர்களிடமிருந்து தமது வீடுகளுக்கு வரச்சொல்லிப் பிரத்தியேக அழைப்பு ஏதும் வந்ததில்லை—சென்றவாரம் என் மகனின் தைவானியத் தோழியின் பெற்றோர் விருந்துக்குக் கூப்பிடும்வரை.
அழைப்பு வந்ததுமே என்மனம் தமிழரின் பண்பாட்டுக் கூறுகளை அசைபோட ஆரம்பித்தது. இவற்றில் தலையாய இடம் வகிப்பது விருந்தோம்பல். அது நம் ரத்தத்தில் ஊறியது. சங்க நூல்களிலிருந்து நவீனநூல்கள், பாடல்கள்வரை விருந்தோம்பலின் புகழ் பாடப்பட்டுள்ளது. மன்னர்கள், புலவர்களுக்கும், அறிஞர்களுக்கும் விருந்தளித்துப் போற்றிய வரலாறுகள், கதைகளும் ஏராளம். வள்ளுவரின் விருந்தோம்பல் அதிகாரமும் பாரதிதாசனின் 'குடும்ப விளக்கு' பாடலும் என்னைக் கவர்ந்ததுண்டு. தமிழ் நாட்டின் அன்னச்சாவடிகளும், சத்திரங்களும், மண்டபங்களும், கோவில்களும், பிரசாதங்களும், திருவிழா சமயங்களில் தென்மாநிலங்களில் கீற்றுக்கொட்டகைக்குள் போடப்பட்ட தண்ணீர்ப்பந்தலில் வழங்கப்படும் பானகமும், நீர்மோரும் நம் விருந்தோம்பலைப் பறைசாற்றுவன.
சிவகங்கை, நாட்டரசன்கோட்டை வட்டாரத்தில் பிரபலமான என் தாத்தா ஸ்வர்ணமணி டாக்டரும், அவரது சந்ததியினரும் விருந்தினர்களைக் கவனிக்கும்விதத்தைப் பார்த்துப் பலமுறை வியந்திருக்கிறேன். மானாமதுரையில் என் அம்மா, அப்பாவும் அதே வழியைப் பின்பற்றிவந்தார்கள், தெருவில் கொளுத்தும் வெயிலில் தலையில் கூடையைச் சுமந்து கொண்டு வரும் பெண்களை வீட்டுத் திண்ணையில் உட்காரவைத்து, முதலில் மோரைக் கொடுத்துவிட்டுத்தான் என் அம்மா அவர்களிடம் நெய்யோ, காய்கறியோ, சுண்டைக்காயோ, மாவடுவோ வாங்குவார்.
இதுபோன்ற பல விஷயங்கள் நினைவுக்குவர, உபசரணையில் தமிழர்களை மிஞ்ச ஆளில்லை என்ற கர்வம் தலைதூக்கியது. ஆனால் "மெலிந்த உடல் கொண்டிருந்தாலும், விருந்தோம்பலில் தமிழருக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல" என்பதை நிரூபித்தார்கள் அந்தத் தைவானியக் குடும்பத்தினர்.
அவர்கள் எங்களை விருந்துக்கு வரச்சொன்ன நேரம் இரவு ஏழுமணி, அவர்கள் வீட்டுக்கு 40 மைல் தொலைவு போகவேண்டும். ஆறுமணிக்குக் கிளம்பத் திட்டம். சாதாரணமாக நேர உணர்வு சற்றுக்குறைந்தே காணப்படும் என் மகன், அன்று என்றுமில்லாத திருநாளாக, ஊருக்குமுன்னால் கிளம்பி உட்கார்ந்திருந்தான், என்னையும், என் மகளையும் அவசரப்படுத்திக் கொண்டிருந்தான். கிளம்ப மணி ஆறேகால் ஆகிவிட்டது. போகும்வழியில், தாமதத்துக்கான காரணத்தைப் போக்குவரத்து நெரிசலின் தலையில்போட்டு, அவர்களுக்குக் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிவைத்தோம்.
அவர்கள் வீட்டை அடையும்போது மணி ஏழேகால். கோடைகாலம் என்பதால் நல்லவெளிச்சம். முகப்பில் ஏழெட்டுப் படிகளுடன், வீடு சற்று உயரத்தில் மிடுக்காக வீற்றிருந்தது. வெளியில் களை ஒன்றுகூட இல்லாத நன்கு பராமரிக்கப்பட்ட புல்வெளி. மூன்று வாரங்களுக்கு ஒருமுறை புல்வெட்டுவதே எங்களுக்கு பிரம்மப்பிரயத்தனம். தந்தையார் மூன்றுநாட்களுக்கு ஒருமுறை புல்வெளியைச் சீர்செய்வாராம்!
அழைப்புமணியை அடித்ததும், தைவானியப் பெற்றோர், மகள், மகன் ஆகியோர் இன்முகத்துடன் கதவைத் திறந்து வரவேற்றார்கள். தாயாரின் இடுப்பில் கைக்குழந்தைபோல் ரீஸ் என்ற நாய்க்குட்டியும் வரவேற்றது.
எனக்குச் சிறுவயது முதலே நாய் என்றால் இனந்தெரியாத பயம். இரண்டு வருடங்களுக்கு முன் ஒருமுறை வாஷிங்டனில் வெள்ளைமாளிகை அருகில் நடைபாதையில் போய்க்கொண்டிருந்தபோது, எதிரே ஒரு போலீஸ்காரர் கையில் நாயுடன். அந்த நாயைப்பார்த்து பயந்து, தமிழில் கத்திக்கொண்டு சாலையில் இறங்கி ஓடினேன். அதிருஷ்டவசமாக வண்டியேதும் வரவில்லை. போலீஸ்காரர் கோபமாக ஏதோ சொல்லிவிட்டுப் போய்விட்டார். என்மேல் சந்தேகம் ஏற்பட்டு, நாயை என்மேல் முகர்ந்து பார்க்க வைத்திருந்தால் இன்னும் கஷ்டமாகப் போயிருக்கும்! எனது நாய் பயம் தைவானியக் குடும்பத்தாருக்கு முன்கூட்டியே தெரியும். எனவே, "ரீஸைக் கீழேவிடாமல், நாங்கள் ஒருவர்மாற்றி ஒருவர் தூக்கியே வைத்துக்கொள்கிறோம். இன்னொரு பெரியநாயைக் கீழே தூங்கவைத்து விடுகிறோம். நீங்கள் பயப்படாமல் உள்ளே வாருங்கள்" என்று தைரியம்சொல்லி அழைத்தார்கள்.
கதவருகில் ஓர் அழகான கூடை. அதில் மெத்தென்ற சுத்தமான பல ஜோடி செருப்புகள். மகள், அந்தக் கூடையிலிருந்து எங்கள் காலளவுக்கு ஏற்ற ஜோடிகளை எடுத்துக் கொடுத்துப் போட்டுக்கொள்ளச் சொன்னாள். போட்டுக்கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தால், பளிச்சென்ற அறைகள். கண்ணைக்கவரும் திரைச்சீலைகள். பளபளக்கும் இருக்கைகள். கம்பீரமான பியானோ. நேர்த்தியாக வைக்கப்பட்ட அழகுப்பொருட்கள். சுவரலங்காரங்கள், ஓவியங்கள், அளவான புகைப்படங்கள். வீடா இல்லை ஐந்துநட்சத்திர விடுதியா என்று மலைத்துப்போனோம்! தாயார் மற்றவர்களிடம் எங்களுக்கு வீட்டைச் சுற்றிக்காட்டச் சொல்லிவிட்டு, கடைசிக்கட்ட விருந்து ஏற்பாட்டைக் கவனிக்கச் சென்றார்.
சிரித்த முகத்துடன் தந்தையார், மகள், மற்றும் மகன் எங்களை எல்லா அறைகளுக்கும், அடித்தளத்துக்கும், தோட்டத்துக்கும் அழைத்துச்சென்று ஒவ்வொன்றாக விளக்கிச் சொன்னார்கள். அமெரிக்கா வந்தபின்தான் பெர்ஸிமன் என்ற சுவையான பழத்தைச் சாப்பிட்டிருக்கிறேன். அந்த மரத்தை அவர்கள் வீட்டில் முதல்முறையாகப் பார்த்தேன். வீட்டின் மரத்தரைகளும், கம்பளங்களும் அவ்வளவு சுத்தம். செல்லப்பிராணிகள் வளரும் வீடு என்று சொல்லவேமுடியாது. இப்படி வைக்க அவர்கள் எத்தனை சுறுசுறுப்பானவர்களாக இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். வீட்டுச் சுற்றுலா முடிந்து சாப்பிடும் அறைக்கு வந்தோம்.
மிகப்பெரிய இரண்டடுக்குச் சீன வட்டமேஜை. மேலடுக்கில் உணவுவகைகள் பொருத்தமான பாத்திரங்களில் போடப்பட்டு, வரவேற்றன. கீழடுக்கில் சாப்பிட வாகான, சற்றே குழிவான வண்ணத்தட்டுகள், மேஜைக்கரண்டிகள், முள்கரண்டிகள், சீன சாப்ஸ்டிக்ஸ் (எத்தனை முயன்றும் இவற்றை உபயோகிக்க முடியவில்லை என்பது வேறு விஷயம்), காகிதக் கைக்குட்டைகள். மேலடுக்கு சுழலக்கூடியது. எனவே சாப்பிடுவோர் அதை மெதுவாகச் சுற்றிவிட்டு, தமக்கு வேண்டியதைச் சுலபமாக எடுத்துக்கொள்ளலாம். சாதாரணமாக அமெரிக்காவில் தட்டைக் கையில் எடுத்துக்கொண்டு, நின்றபடியோ அல்லது கிடைக்குமிடத்தில் உட்கார்ந்தபடியோ சாப்பிட்டுப் பழக்கம். எனவே பத்து நாற்காலிகளுடன் கூடிய மேஜை அமைப்பில் எங்கே உட்காரலாம் என்று யோசிப்பதற்குள், தாயார் புன்னகையோடு ஒவ்வொருவருக்கும் ஓர் இருக்கையைக் காட்டி, அதில் உட்காரும்படி அன்புக்கட்டளை இட்டார். அவர் உட்காரச் சொன்ன இடங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள வசதியாக இருந்தன.
நாங்கள் சைவஉணவு மட்டுமே சாப்பிடுபவர்கள் என்பதால் அவர் எல்லாமே சுத்தசைவமாகச் செய்திருந்தார். மிதமான உப்பு, காரத்துடன் காய்கறிசாதம், கண்ணாடி நூடுல்ஸ் கொத்சு போன்ற சுவையுடைய சீனக் கத்தரிக்காய்ப் பதார்த்தம், உருளைக்கிழங்கு மசாலா போன்ற ஒன்று, செலரியையும், உருளைக்கிழங்கையும் மெல்லிய கீற்றுகளாக நறுக்கி, நிறம்மாறாமல் அரைவேக்காட்டில் வதக்கிய கறி, சிறப்புக் காளான்வகைகளைக் கொண்டு சோயாசாறு சேர்த்துச்செய்த பொரியல், பெரிய சதுரவடிவத்தில் வெட்டி, பொன்னிறத்தில் வறுத்து, வெங்காயத் தாள்களால் அலங்கரிக்கப்பட்ட டோஃபூ, மாவுடன் பல்வேறு காய்கறிகளைச் சேர்த்து எண்ணெயில் பொரித்த பருப்புசிலிச் சுவையிலான வெள்ளைநிறப் பண்டம், ஒவ்வொன்றுக்கும் ஏற்றாற்போன்ற மணமுள்ள கிரேவிக்கள், சிவப்புமொச்சையைக் கொண்டு அரைச்சர்க்கரை போட்டு பேக்செய்த இனிப்புவகை, குளிர்பானங்கள் என்று விமரிசையான விருந்து!
சாப்பிட்டது எட்டுப்பேர் (ரீஸ் அவ்வப்போது சிலவற்றைச் சுவை பார்த்தது). ஆனால் தாயார், 15 பேர் சாப்பிடும் அளவுக்குச் சமைத்திருந்தார். இரண்டு நாட்களுக்கு வேலை நெட்டிவாங்கி இருக்கும். ஆனால் முகத்தில் சோர்வுகாட்டாமல் உபசாரம் செய்தார். தமிழ் விருந்துகளில் நாம் சாப்பிட்ட இலையை நாமே எடுக்கக் கூடாது என்பார்கள். தைவானியர்களும் அப்படிச் சொல்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இதுதான் வேற்றுமையில் ஒற்றுமை என்பதா?
பிரதான விருந்து முடிந்ததும் குடும்ப அறைக்குச் சென்று பேசிக்கொண்டிருந்தோம். கோலமிட்ட தட்டுகளில் பழவகைகளைக் கொண்டுவந்து மீண்டும் உபசரணை. இதற்கும்மேல், அழகான செவ்வகத் தாம்பாளத்தில் அலங்கார கெண்டி, கிண்ணங்கள் சகிதமாகச் சூடான, பால், சர்க்கரை சேர்க்காத "ஊலாங்" தேநீர். வயிற்றில் இடமில்லை. ஆனால் பாரம்பரியச் சீனத்தேநீரைக் குடித்துப்பார்க்கும் ஆர்வத்தில் ருசித்தோம். இரண்டரை மணிநேரம் போனதே தெரியவில்லை. ரீஸும், ஒய்யாரமாக, ஒவ்வொருவரின் அரவணைப்பிலும் அமைதியாக உட்கார்ந்துகொண்டிருந்தது. அதன் பங்குக்குக் கடைசியில், தாயார் ஆங்கிலத்திலும், மாண்டரினிலிலும் இட்ட ஆணைகளுக்கு அடிபணிந்து சில வித்தைகளைச் செய்துகாட்டி எங்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
"விருந்தோம்பல் இனமறியாது" என்ற நிறைந்த உணர்வுடன், (வயிற்றுடனும்தான்) வீடு திரும்பினோம்.
ராஜி ராமச்சந்திரன், அட்லாண்டா |