அரக்குமாளிகையில் பாண்டவர்களையும் குந்தியையும் சேர்த்து உயிரோடு எரிப்பதற்கான அனுமதியை திருதிராஷ்டிரன் வழங்கினான். அவனுடைய முழுச்சம்மதத்தின் பேரிலேயே இந்தச் சம்பவம் தொடங்கியது என்பதைப் பார்த்தோம். அவனுக்கே பாண்டவர்களைக் கொல்வதற்கான நோக்கம் இருந்ததையும் அது அவன் வாய்மொழியாகவே வெளிப்பட்டதையும் பார்த்தோம்.
இப்படி சதித்திட்டம் உருவானதும், பாண்டவர்களை வாரணாவதத்துக்கு 'அனுப்பி வைப்பது' எப்படி என்ற சிக்கல் ஏற்பட்டது. அவர்களை அங்குவைத்துக் கொன்றால், அவர்கள் சாவுக்கு நாம் காரணம் என்பது தெரியவந்தால், பாண்டுவால் பெரிதும் ஆதரிக்கப்பட்ட அந்தவூர் மக்கள் 'நம்மையும் நம்மைச் சேர்ந்தவர்களையும் ஏன் கொல்லார்' என்பது திருதிராஷ்டிரனின் கேள்வி. இதற்கு துரியோதனன் பதில் சொல்கிறான்: "தந்தையே! நீங்கள் சொன்னது சரி. நம்மிடத்தில் ஏற்பட்ட குறைவைக் கண்டுதான் மந்திரிகள் எல்லோரையும் திரவியங்களினாலும் வெகுமதிகளினாலும் நான் சிறப்பித்திருக்கிறேன். அவர்கள் நமக்கு முக்கியமான ஸகாயர்களாக இருப்பார்களென்பது நிச்சயம். ராஜரே எல்லாப் பொருள்களும் மந்திரிகளும் இப்போது என் ஸ்வாதீனத்திலிருக்கின்றனர். ஆதலால் நீர் பாண்டவர்களை நயமான உபாயத்தினால் உடனே வாரணாவத நகரத்துக்கு பிரயாணப்படுத்த வேண்டும்." (ஆதி பர்வம், அத்: 154, ஜதுக்ருஹ பர்வம்) (Duryodhana replied, 'What thou sayest, O father, is perfectly true. But in view of the evil that is looming on the future as regards thyself, if we conciliate the people with wealth and honours, they would assuredly side with us for these proofs of our power. The treasury and the ministers of state, O king, are at this moment under our control. Therefore, it behoveth thee now to banish, by some gentle means, the Pandavas to the town of Varanavata). அதாவது நிதி 'தற்சமயத்துக்கு' என்வசம் இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு உரியவர்களையெல்லாம் நிதியால் 'திருப்தி' செய்துவிடுகிறேன். அவர்கள் நம்பக்கம் வந்துவிடுவார்கள். எனவே பாண்டவர்கள் வாரணாவதத்துக்குப் போவதற்கோ, அங்கே ஏற்படப் போகும் விபத்துக்கோ யாரிடமிருந்தும் எதிர்ப்பிருக்காது என்பது துரியோதனன் சொல்வது. ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில், மக்கள் என்பக்கம் திரும்பும்போது, அதாவது ராஜ்ஜியத்தில் என்பிடி இறுகும்போது வேண்டுமானால் அவர்கள் திரும்ப வந்துகொள்ளட்டும் என்றும் துரியோதனன் பேசினாலும், கொலைத்திட்டம் என்னவோ வடிவெடுக்கத்தான் செய்தது.
அமைச்சர்களை விலைக்கு வாங்கிவிடலாம். நிதியால் மக்களின் வாயை அடைத்துவிடலாம். ஆனால் அதற்கு மேலும் சில தடைகள் ஏற்படும். திருதிராஷ்டிரன் சொல்கிறான்: "துரியோதனா! இந்த ஆலோசனை என் உள்ளத்திலும் விடாமல் இருந்துகொண்டிருக்கிறது. ஆனால், இந்த எண்ணம் கெடுதல்; ஆதலின் நான் வெளிப்படுத்தாமல் இருக்கிறேன். குந்திபுத்ரர்களை ஊரைவிட்டுப் புறப்படுத்துவதை பீஷ்மர், துரோணர், விதுரர், கிருபர் முதலிய யாரும் ஒருபோதும் ஸம்மதிக்க மாட்டார்கள்..... குழந்தாய் அப்படிச் செய்கிற நம்மை இந்த மஹாத்மாக்களான கௌரவர்களும் மற்ற உலகத்தாரும் எவ்வாறு கொல்லாமல் இருப்பார்கள் - (மேற்படி, பக்கம் 555). இருக்கலாம். விலைக்கு வாங்க முடியாத சிலர் இருக்கிறார்கள். அவர்கள் இதற்குச் சம்மதிக்க மாட்டார்கள். நடந்தது தெரிந்தால் நம்மை இவர்களே நிச்சயமாகக் கொன்றுவிடுவார்கள் என்பது திருதிராஷ்டிரன் கவலை.
கவலைப்பட வேண்டாம் என்று துரியோதனன் சொல்கிறான். "பீஷ்மர் எப்போதும் நடுநிலை வகிப்பவர், இரண்டு பக்கத்தாருக்கும் பொதுவானவர். துரோணர் என் பக்கத்தில்தான் நிற்பார். ஏனெனில் அஸ்வத்தாமன் என் நண்பன். புத்திரன் இருக்கும் பக்கத்தில்தான் துரோணர் இருப்பார். துரோணர் எந்தப் பக்கதிலிருக்கிறாரோ அந்தப் பக்கத்தில்தான் கிருபரும் இருப்பார். (கிருபரின் தங்கையான கிருபிதான் துரோணரின் மனைவி.) இதிலே நிதி என்ற காரணத்தால் நமக்குக் கட்டுப்பட்டிருக்கும் விதுரர்மட்டுமே விலக்கு. அவர் பாண்டவர்கள் பக்கத்தில்தான் நிற்பார். இவர் ஒருவரை மட்டும்தான் நம்முடைய வசத்துக்குக் கொண்டுவர முடியாது. இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் தைரியமாக பாண்டவர்களையும் குந்தியையும் வாரணாவதத்துக்கு அனுப்பலாம்." ஒவ்வொருவரையும் மிகத்திறமையாக அனுமானித்து எடைபோடுகிறான் துரியோதனன். அவன் இவ்வளவு சொன்னதற்குப் பிறகுதான், தன் மனத்தில் பொத்திப்பொத்தி வைத்துக்கொண்டிருந்த எண்ணத்தைச் செயலாக்கும் துணிவு திருதிராஷ்டிரனுக்குப் பிறக்கிறது. 'ஒரு தீபத்தில் சென்று கொளுத்திய பந்தம் தேசு குறைய எரியுமோ?' என்பது துரியோதனனைக் குறித்து சகுனி வாய்மொழியாக பாரதி சொல்வது. திருதிராஷ்டிரா! அறிவில் நீயொரு தீபம். உன்னிடமிருந்து கொளுத்தப்பட்ட துரியோதனனோ அதைப்போல பல்லாயிரம் மடங்கு கொழுந்துவிட்டெரியும் பந்தம் என்பது இதில் குறிப்பு.
இந்தச் சதித்திட்டத்தில் இப்போது முக்கியமான கட்டம். பாண்டவர்களை வாரணாவதத்துக்குப் அனுப்பவேண்டும். ஆனால் அவர்கள் தங்களுடைய சொந்த விருப்பத்தின் பேரில்தான் அங்கே போகிறதாகத் தோற்றமும் ஏற்பட வேண்டும். இதற்கான ஆரம்பக்களனாக துரியோதனன் யுயுத்ஸு ஒருவனைத் தவிர மற்ற தம்பிகளையும் மந்திரிகளையும் காலப்போக்கில் தன் வசப்படுத்திக்கொண்டான். காந்தாரியின் இரண்டாண்டு கர்ப்ப காலத்தில் திருதிராஷ்டிரனுக்கு வேறொரு பெண்ணிடத்தில் பிறந்தவன் யுயுத்ஸு. யுத்தத்தின்போது இவன் பாண்டவர்களுடைய பக்கத்துக்குப் போய்விட்டான்.
இப்படி, பாண்டவர்கள் வாரணாவதத்துக்குச் செல்லவேண்டுமென்பதற்காக நிபுணர்களாகிய அமைச்சர்களைக் கொண்டு, வாராணவத நகரத்தின் அழகையும் சிறப்பையும் பற்றி அவர்கள் காதுபட அடிக்கடி பேச ஏற்பாடானது. "அங்கே போகலாமா' என்ற எண்ணம் தர்மபுத்திரனுக்கு ஏற்பட்டதுமே, திருதிராஷ்டிரன் அவனைத் தனிமையில் அழைத்து, 'நீங்கள் இங்கேயிருந்து சாஸ்திரங்களையெல்லாம் கற்றீர்கள்; கிருபரிடமிருந்தும் துரோணரிடமிருந்தும் ஆயுதப்பயிற்சி பெற்றீர்கள். இத்தனை காலமும் (நீங்கள் கல்வியில் தேர்ச்சியடைவதற்கு ஏதுவாக) அரசு பரிபாலனத்தையும் மற்ற செயல்களையும் நானே பார்த்துக்கொண்டு வருகிறேன். வாரணாவதம் மிக அழகியது என்று என்னிடத்தில் தினமும் பலர், பலமுறை சொல்கிறார்கள். அங்கே ஏதோ உத்ஸவம் நடைபெறுகிறதாம். அதைப் பார்க்கும் விருப்பம் உங்களுக்கு இருக்குமாயின் 'சேனைகளோடும் பந்துக்களோடும் சென்று தேவர்களைப்போல் அங்கே விளையாடிக் கொண்டிருங்கள்.... இவ்வாறு கொஞ்சகாலம் வினோதமாக இருந்து மிகுந்த ஸந்தோஷத்தை அனுபவித்து மறுபடியும் இந்த அஸ்தினாபுரத்துக்கு வரலாம்." (மேற்படி அத்: 155, பக்: 587). அப்படியானால் தர்மபுத்திரனுக்கு இளவரசுப்பட்டம் கட்டியிருக்கிறதே, திருதிராஷ்டிரனுக்குக் கண்ணற்ற நிலையில் மக்கள் தர்மபுத்திரனே அரசு பரிபாலனத்தில் ஈடுபடவிரும்புகிறார்களே. இவர்கள் வாராணாவதத்தில் இருக்கும் காலத்தில் இங்கே அரச காரியங்கள் தடைப்படாதா? திருதிராஷ்டிரன் சொல்கிறான்: "ராஜ்ய ரக்ஷணத்தைக் கவனித்து அங்கேயே வாஸம் செய்யுங்கள்' (மேற்படி) அதாவது வாரணாவதத்திலிருந்தவாறே நீங்கள் அரச காரியங்களை கவனித்துக் கொள்ளலாம்."
இத்தனை சொன்னதன் பிறகு தர்மபுத்திரன் வாரணாவதத்துக்குப் போகச் சம்மதித்தான். எனவே, இந்தக் குற்றத்துக்கான நோக்கம் (motive) அவனுக்கு இருந்திருக்கிறது, குற்றம் செய்வதற்கான வாய்ப்பு (opportunity) இருந்திருக்கிறது, குற்றத்துக்கான வழிவகையும் (means) இருந்திருக்கிறது. குற்றமே அவனுடைய அனுமதியின் பேரில்தான் நடத்தப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, குற்றத்துக்கு இலக்கானவர்களை, குற்றம் நடப்பதற்கு ஏதுவான திசையில் செலுத்திய காரணத்தால் அவன் குற்றத்தில் பங்கேற்கவும் (partaking in the crime) செய்திருக்கிறான்.
வாரணாவதத்துக்குப் போகச் சம்மதித்த தர்மபுத்திரனுக்கு திருதிராஷ்டிரனுடைய மனத்தில் ஏதோ கெட்டநோக்கம் இருப்பது தெரியாமலில்லை. "யுதிஷ்டிரர் த்ருதராஷ்டிரனுடைய அந்தக் கருத்தையும் தமக்கு ஸஹாயம் யாருமில்லாமலிருப்பதையும் தெரிந்துகொண்டு, 'அப்படியே ஆகட்டும்' என்று அவனுக்கு மறுமொழி சொன்னார்." (மேற்படி பக்: 587) பெரியப்பனுக்கு ஏதோ கெட்டநோக்கமிருக்கிறது. இருந்தபோதிலும் அவனுடைய நோக்கம் சுற்றியிருக்கும் மற்றவர்களுக்குத் தெரியாத நிலையில், தானே மற்றவர்களுக்கு இப்படி ஒரு நோக்கமிருப்பதாக சொல்லப் புகுந்தால், நல்லவர்களிடம் உள்நோக்கம் கண்டுபிடிப்பது போன்ற தேவையற்ற தோற்றம்தான் ஏற்படும் என்பதை உணர்ந்த தருமன் சம்மதித்தான். எப்படி? வியாசர் சொல்கிறார்: 'சந்தனு புத்திரராகிய பீஷ்மரையும்....(இதரர்களையும்) காந்தாரியையும் தாய்மாரனைவரையும் விதுரருடைய ஸ்த்ரீகளையும் மரியாதை செய்து துக்கத்துடன் மெல்லமெல்லப் பின்வரும் சொற்களைச் சொல்லானார்'. எப்படி? துக்கத்துடன். ஏன்? பார்ப்போம்....
ஹரி கிருஷ்ணன் |