லிவர்மோர் ஆலயத்தில் பஞ்சபூதங்களின் மறுபக்கம்
அக்டோபர் 1, 2005 அன்று சென்னையைச் சேர்ந்த 'நிருத்யோபாசனா' நாட்டியப் பள்ளியின் இயக்குநர் டாக்டர் ஹேமா ராஜன் லிவர்மோர் சிவாவிஷ்ணு ஆலயத்தில் 'இயற்கை அன்னையை ஆராதிப்போம்' என்ற தலைப்பில் ஓர் அற்புதமான நாட்டிய நாடகத்தை வழங்கினார். வருடந்தோறும் இவரது பிரம்மாண்டமான படைப்புகளில், எல்லா நாட்டியப் பள்ளியைச் சேர்ந்த கலைஞர்களும் பங்கு கொண்டு, ஒரு குடும்பமாகக் கலைவிருந்து படைப்பது பாராட்டுதலுக்கு உரியது.

லிவர்மோர் நிகழ்ச்சியிலும் பல நடன ஆசிரியைகள் தமது மாணவியருடன் பங்கேற்றனர். மைதிலி குமாரின் மாணவியர் ரஸிகா குமார், அனுரங்கநாதன் மற்றும் சாரதா மூர்த்தி பஞ்சபூதங்களில் ஆகாயத்தைச் சித்தரித்தனர். பூமித்தாயின் பொறுமையைக் கண்முண் கொண்டுவந்த ஸ்ரீலதா சுரேஷ், மனிதர்கள் அவளைச் சீண்டினால் சீறுவதையும் அயரச்செய்யும் ஜதிகளுடன் அபிநயம் பிடித்தார். குழந்தைகளைக் கொள்ளை கொண்ட நெருப்பைப் படம்பிடித்த உஷா நாராயணன் கண்ணீல் நீரை வரவைழத்தார்.

அடுத்து வந்த ரஸிகா குமார் தம் மாணவியருடன் மென்மையே உருவான தென்றல் சூறாவளியாகிச் சீறும் கொடூரத்தைத் தத்ரூபமாகக் கொணர்ந்தனர். இறுதியில் பொங்கியெழும் கடல் நீர் தன்னை நம்பியிருந்தோரின் உயிர்களைக் கொள்ளை கொண்ட கொடுமையைச் சித்தரித்தபோது நெஞ்சு உருகிப் போனது.

இயற்கையை மாசுபடுத்தாமல் அதனுடன் ஒன்றி வாழக் கற்றுக் கொண்டால், மனித உள்ளத்தின் மாசுகளைக் களைந்து, இறை உணர்வின் இனிய ஜோதியை ஏற்றினால் இவ்விடர்களிலிருந்து விடுபட்டு ஏற்றமுடன் வாழலாம் என்று கூறும் சாயி பஜனைப் பாடலுடன் நிகழ்ச்சியை இனிது முடித்தனர் ஸ்ரீலதா சுரேஷின் மாணவிகள். அற்புதமாய் ஆடிய அனைத்து நடனமணிகளுமே பெரும் பாராட்டுதலுக்குரியவர்கள்.

சென்னையில் சுனாமியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிதிதிரட்ட இந்த நாட்டிய நாடகத்தை ஹேமா ராஜன் சென்னையின் தலைசிறந்த 250 நாட்டிய மணிகளின் உதவியுடன் வழங்கி, திரட்டப்பட்ட நிதியை, தாங்கள் தயாரிப்புக்குச் செலவழிந்த பணத்தைக் கூட கழிக்காமல் கொடுத்து உதவி, பத்திரிகைகள் பொதுமக்களின் ஏகோபித்த பாராட்டுதலைப் பெற்றார். கடந்த இருபது ஆண்டுகளாக தன்னலமற்ற தொண்டாற்றி கலை கலாசாரத்தை வளர்த்து வரும் ஹேமா ராஜன் ஒரு மாறுபட்ட நடன ஆசிரியை என்பது குறிப்பிடத்தக்கது. இவரது படைப்புகளில் 'அற்புத இராமானுஜர்' , 'அருள்நிதி இராகவேந்திரர்', 'அகிலம் காக்கும் அன்னை', 'நடேச நர்த்தாஞ்சலி', 'சர்வம் பிரம்மமயம்', 'மாத்ரு தேவோ பவா' குறிப்பிடத்தக்கவை. திருப்பதி தேவஸ்தானம், ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமம் (பாண்டிச்சேரி) ஆகிய அமைப்புகளிலும் இவரது நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.

இந்தப் பகுதிக்கு இத்தனை அருமையான நாட்டிய நாடகத்தைக் கொண்டு வந்த கோவில் நிர்வாகிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

சுஜாதா சீனிவாசன்

© TamilOnline.com