மிசௌரி தமிழ்ப்பள்ளி: தமிழ்த்தேனீ போட்டிகள்
மார்ச் 7, 2015 அன்று மிசௌரி தமிழ்ப்பள்ளியின் 2014-15 கல்வி ஆண்டுக்கான தமிழ்த்தேனீ போட்டிகள் செயின்ட் லூயிஸ் நகரில் டேனியல் பூன் நூலகத்தில் நடைபெற்றன. 6 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மட்டும் நாற்பது குழந்தைகள் போட்டியிட்டது இதுவே முதல்முறை! போட்டிகளில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல் மிசௌரிவாழ் குழந்தைகள் பலரும் பங்கேற்றனர். பயிலும் வகுப்புக்கேற்ப 4 நிலைகளில் போட்டிகள் இருந்தன. ஒவ்வொரு நிலைக்கும் 9 பரிசுகள் தரப்பட்டன.

ஆறு வயதுக்குட்பட்ட தேனீ-1 பிரிவில் குழந்தைகள், ராகத்தோடு பாடியும், அபிநயத்தோடு கதை சொல்லியும், படங்களை விரைந்து கண்டறிந்தும் அசராமல் முன்னேறி வந்தனர். இந்தப் பிரிவிலிருந்து 18 குழந்தைகளைத் தேர்வு செய்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. நடுநிலை மற்றும் உயர்நிலை மாணவர்கள் திருக்குறளை மனப்பாடமாக ஒப்பித்து, அழகாகப் பொருள் கூறினர். மேலும், சொல்வதெழுதுதல், ஒரே ஓசையுடைய வார்த்தைகளை எழுதுதல், கட்டுரை, கட்டுரையைப் படித்து விடையெழுதுதல் போன்ற போட்டிகளில் பங்குபெற்றனர். பேச்சுப்போட்டியில் "உடல்நலனைக் காக்க உதவும் உணவுவகைகள் மற்றும் பழக்க முறைகள்", "அலைபேசியினால் விளையும் நன்மை, தீமைகள்" போன்ற தலைப்புகளில் அழகுத் தமிழில் பேசினர். அனைத்து நிலை மாணவர்களும் குழுக்களாகப் பங்கேற்ற பன்முகத்திறன் போட்டி (Jeopardy) நடைபெற்றது. படம் பார்த்துக் குறள் கூறுதல், மகாகவி பாரதியார், நாமக்கல் கவிஞர் பாடல்கள், தமிழ் இலக்கியம், திரைப்படப் பாடல், சொல்திறன் எனப் பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற இப்போட்டியில் மாணவர்கள் வியக்க வைத்தனர்.

ஏப்ரல் 11 அன்று பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினராக முன்னாள் அமெரிக்கத் தமிழ்க்கல்வி கழகத் தலைவரும், தற்போதைய நிர்வாகக்குழு இயக்குனருமான முனை. அரசு செல்லையா வந்திருந்து, பரிசுக் கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கினார்.

ரம்யா ஜானகிராம், ரேவதி திருநா,
செயிண்ட் லூயிஸ், மிசௌரி

© TamilOnline.com