தி ஐடியல் கிட்ஸ் 2015
மார்ச் 21, 2015 அன்று தி ஐடியல் கிட்ஸ் அமைப்பு (www.theidealkids.org) ஃப்ரீமான்டிலுள்ள மிஷன் சான் ஹோஸே துவக்கப்பள்ளியில் ஓவியம், கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி ஆகியவற்றை நடத்தியது. இதில் முன்னூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகளை மிஷன் சான் ஹோஸே துவக்கப்பள்ளி முதல்வர் திரு. சக் கிரேவ்ஸ் மற்றும் இண்டரோ ரியல் எஸ்டேட் நிறுவனர் திரு. ரிஷி பக்‌ஷி துவக்கிவைத்தனர். ஃப்ரீமான்ட் மேயர் திரு. பில் ஹாரிசன், திரு. ஜேம்ஸ் மாக்ஸ்வெல் (Director of Secondary Education, FUSD) மற்றும் எம்பியுட் நிறுவனர் திரு. ராஜேஷ் சி. சுப்ரமணியம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்து வெற்றிபெற்ற குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கினர்.

தி ஐடியல் கிட்ஸ் விரிகுடாப் பகுதிக் குழந்தைகளுக்கான தன்னார்வ அமைப்பு. வலுவான, ஆரோக்கியமான மனம் மற்றும் உடல் கொண்ட சந்ததிகளை உருவாக்குவதே இதன் நோக்கம். இந்த அமைப்பு கோடை நாட்களில் வார இறுதியில் ப்ரீமான்ட், சான் ஹோஸே, டப்ளின், சன்னிவேல் ஆகிய இடங்களிலுள்ள பூங்காக்களில் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் கிட்ஸ் ரன் நிகழ்ச்சியின்மூலம் மூன்று மைல் தூரம் ஓடுவதற்கு ஊக்குவிக்கிறது. குழந்தைகள் பின்பற்ற வேண்டிய ஆரோக்கியமான உணவு முறையும், உடற்பயிற்சியும் சொல்லித் தரப்படுகின்றது. பங்குபெறும் குழந்தைகளுக்கு கோப்பையும் சான்றிதழும் வழங்கப்படுகின்றன.

வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளவும், நேர்மையான மனிதர்களாக உருவாகவும், தோல்வி கண்டு துவளாமல் இருக்கவும் குழந்தைகளுக்கு வெற்றிபெற்ற ஆர்வலர்கள்மூலம் பட்டறைகளை நடத்துகிறது. இதற்குக் கட்டணம் வசூலிப்பதில்லை. நன்கொடை மற்றும் தன்னார்வத் தொண்டர்களின் மூலம் இயங்கிவருகிறது.

ரமேஷ் சத்தியம்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com