டாலஸ்: வசந்தகால பிக்னிக்
மார்ச் 28, 2015 அன்று டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம் ப்ளேனோ ரஸல் க்ரீக் பார்க்கில் ஏற்பாடு செய்திருந்த பிக்னிக்கில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டனர். குளத்தைச் சுற்றி நடப்பது, வாலிபால், கூடைப்பந்து, சைக்கிள் ஓட்டுவது, பட்டம் விடுதல் என்று தமக்குப் பிடித்தவற்றைச் செய்து மகிழ்ந்தனர். முகத்தில் வண்ண வண்ண டிசைன்களில் பெயிண்ட் செய்தனர்.

இந்தக் கேளிக்கையிலும் ஒரு உயரிய நோக்கம். இதன்மூலம் 11,000 டாலர் நிதி திரட்டி, தமிழ் நாட்டில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கும் திட்டத்திற்கு வழங்கப்பட்டது. தமிழ் நாடு அறக்கட்டளையின் உபதலைவர் சோலை இதில் பங்கேற்று நிதியை ஏற்றார்.

ஹெல்த் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் முருகானந்தன் வரவேற்றார். சங்கத் தலைவர் கீதா அருணாச்சலம் ஆண்டுதோறும் ஒரு சமுதாயப் பணிக்காக நிதி வழங்கி வருவதைக் குறிப்பிட்டார்.

தமிழ்ச் சங்கத்தின் இணைச் செயலரும், தமிழ் நாடு அறக்கட்டளை டாலஸ் கிளை ஒருங்கிணைப்பாளருமான இளங்கோவன் நன்றியுரை கூறினார். சிற்றுண்டி ஏற்பாடுகளை லஷ்மி, சித்ரா, கீதா, தீபா, லதா, சுமதி, சுமித்ரா செய்திருந்தனர். கவிதாவும் சுமித்ராவும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் முகத்தில் பெயிண்டிங் செய்து நிகழ்ச்சியை வண்ணமயமாக்கினார்கள்.

செய்திக்குறிப்பிலிருந்து
புகைப்படம்: நந்தகுமார்

© TamilOnline.com