மார்ச் 28, 2015 அன்று சிகாகோவிலுள்ள பரதம் நாட்டியப் பள்ளியின் (Bharatam Academy of Dance Arts) 11ம் ஆண்டுவிழா ஓஸ்வேகோ கிழக்கு உயர்நிலைப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிகளை, நடனத்திலும் பாட்டிலும் தேர்ச்சிபெற்ற சுதீக்ஷ்ணா தொகுத்து வழங்கினார். கணேச கவுத்துவத்தோடு நிகழ்ச்சி தொடங்கியது. அடுத்தடுத்து வந்த 17 நடன நிகழ்ச்சிகள் அவையோரைக் களிப்பில் ஆழ்த்தின. நாட்டியப் பள்ளி நிறுவனரும் மேடையேறிய 109 குழந்தைகளின் ஆசிரியையுமான வனிதா வீரவல்லி, முதுநிலை மாணவி அன்னு முத்தொலோத்துடன் ராஜராஜேஸ்வரி அஷ்டகத்துக்கு நடனம் ஆடினார். பல்வேறு படிநிலையிலிருக்கும் மாணவர்களின் இயல்புக்கேற்ப நடனங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
சமீபத்தில் அரங்கேற்றம் நிகழ்த்தி 'பரதமணி' பட்டம்பெற்ற அங்கிதா நாதன், கண்ணன் மண்தின்ற கதையைச் சிறப்பாக அபிநயித்தார். மற்றொரு பரதமணியான மாதவி ராமகிருஷ்ணன், அனுமனின் 'கண்டேன் சீதையை' கதையைத் தானே அனுமனாகவும், ராவணனாகவும், சீதையாகவும் மாறிமாறிச் சித்திரித்தது அதிசயிக்க வைத்தது. 109 குழந்தைகளும் சேர்ந்து மங்களம் பாடியது கண்கொள்ளாக் காட்சி.
வலைமனை: www.bharatam.org
குமார் சரவணன், அரோரா, இல்லினாய்ஸ் |