ஆண்டுவிழா: லட்சுமி தமிழ் பயிலும் மையம்
ஏப்ரல் 4, 2015 அன்று லட்சுமி தமிழ் பயிலும் மையத்தின் 27வது ஆண்டுவிழா, மார்கரெட் வின்ஹோல்ட் பள்ளி வளாகத்தில் நடந்தது. திருமதி. சந்தோஷிமா ஹரியின் வரவேற்புரையுடன் தொடங்கிய விழாவைப், பதின்ம வயதினரான திவ்யாவும், ஸ்ரீவிஷ்ணுவும் தமிழில் சுவையாகத் தொகுத்து வழங்கினர். 28 ஆண்டுகளுக்கு முன்பு திருமதி. லக்ஷ்மி சங்கரால் நிறுவப்பட்ட இப்பள்ளியில், பெற்றோரையே சிறப்பு விருந்தினராக்கிக் கௌரவிப்பது வழக்கம். இம்முறை திரு. மாறன் ராமநாதன் சிறப்பு விருந்தினராக வந்திருந்து நகைச்சுவை கலந்து உரையாற்றினார்.

நேத்ரா, நிர்மல், சிந்து, திவ்யா, மீனா, ஹர்ஷா, செளம்யா, சஞ்சீவ் மற்றும் மாணவர்கள் பல்வேறு நடன, இசை, நாடக நிகழ்ச்சிகளை வழங்கினர். தரமான திரையிசைப் பாடல்களும் பாடப்பட்டன. விஜய் தொலைக்காட்சியின் 'ஒரு வார்த்தை ஒரு லட்சம்' விளையாட்டின் சாயலில் குழந்தைகளுக்கான வார்த்தை விளையாட்டு, ஹேமா மோகன் மற்றும் ஜெயா மாறன் ஆகியோரால் நடத்தப்பட்டது. தலைவர்கள், மரம் செடிகள், காய்கறிகள் என்ற தலைப்புகளில் மாணவர்கள் காட்டியங்களைச் செய்து காட்சிக்கு வைத்திருந்தார்கள். அவற்றில், திவ்யா, செளம்யா, நேத்ரா ஆகியோரின் காட்டியங்கள் பரிசு வென்றன.

பேச்சுப்போட்டி, வாசிப்புப்போட்டி, திருக்குறள் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்றோருக்கு நினைவுப்பரிசுகளும், தேர்ச்சி பெற்றவர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளைத் திருமதிகள் ராஜி ராமச்சந்தின், அகிலா சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர். திருமதி. லட்சுமி நிஜவீரப்பாவின் நன்றியுரையோடு விழா நிறைவடைந்தது.

ஜெயா மாறன்,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com