இந்திய மேம்பாட்டு நிறுவனம் - சன்ஹிதி வழங்கிய 'அதிர்வுகள்'
2005 அக்டோபர் 1 மற்றும் 2 தேதிகளில் இந்திய மேம்பாட்டு நிறுவனம் (AID) சன்ஹிதி நாட்டியக் குழுவினரின் 'Vibes' (அதிர்வுகள்) என்ற நடன நிகழ்ச்சியை பாலோ ஆல்டோவிலுள்ள கப்பர்லி தியேட்டரில் நடத்தியது.

பிரபஞ்ச நடனம் ஆடும் தில்லை நடராஜப் பெருமானைப் போற்றி ஆடிய கடவுள் வணக்கத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமாயிற்று. நடனமணிகள் ஜனனி நாராயணன், ரூபா பரமேஸ்வரன், பிரியா கிருஷ்ணமூர்த்தி, சம்பத்குமார், குமுதா, கிஜு, இவா ஆகியோரின் நடனத்தில் உருவான இந்நிகழ்ச்சியில் துக்கம், சாதனை, பயமும் வியப்பும் கலந்த நிலை, வீரம், வெறுப்பு, நட்பு, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், எதிர் பார்ப்பு, காதல், வற்புறுத்தல் முடிவாக ஆனந்தம் என்று பலவகை உணர்வுகளை ஒன்றன்பின் ஒன்றாக மிக அழகாக வெளிப்படுத்தி ஆடினர். சிகரமாக தாய் நாட்டுப்பற்றை வலியுறுத்தும் 'தாய் மண்ணே வணக்கம்' இடம்பெற்றது.

பாடல்களை ஒரு கதையில் வருபவையாக அமைத்திருந்தது சிறப்பு. எந்த வேலையிலும் தொடர்ந்து நீடிக்காத வசந்த் கதையின் நாயகன். இதே காரணத்திற்காக அவன் காதலி மாயா அவனைக் கைவிட்டு விடுகின்றாள். வசந்தின் நண்பன் கணேஷ் அவனை உற்சாகப்படுத்தி டாக்டர் பூஜா விடம் சிகிச்சைக்கு அழைத்துப் போகிறான். இதற்கிடைடையில் கணேஷ் பூஜா இடையே காதல் மலர்கிறது. தென்னிந்திய நடன நிகழ்ச்சி என்பதால் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய பிறமொழிப்பாடல்களும் இடம்பெற்றன.

இறுதியில் வசந்த் பழைய நிலைக்குத் திரும்புகின்றான். மகிழ்ச்சியின் எதிரொலியாகத் தெலுங்கு மொழிப்பாடலுக்கு நடனம் இடம் பெறுகிறது. இவ்வாறு 12 மன உணர்வுகளுக்குப் பொருத்தமான திரைப் படப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து நடனம் ஆடிக் கரவொலி பெற்ற நடனச் சுடர்கள் ஜனனி நாராயணன், ப்ரியா, ரூபா, கவிதா, சுமன், உமா கைலாசம், கிருஷ்ணா, ராஜீவ், வாசு, பிரியா பாலா, சாய் கிரண்குமார், கார்த்திக், ப்ரீத்தி, பூர்ணிமா, ஸ்ரீவித்யா, ஷ்வேதா, பால்கி, முனிஷ், முத்து, பிரவீண், சம்பத், சூரஜ், அனு, மீனா, நவீன், ராஜா, ராஜேஷ், சனா, ஜயஸ்ரீ, ஜ்யோதி, மிருதுளா, உமா மஹாதேவன், நவனீத், பூர்ணிமா ஆகியோர்.

நாடகத்தில் பங்கு கொண்டு நகைச்சுவை மிளிர நடித்த ராஜிவ், கவிதா, பாலாஜி, குமுதா, சாய் ஆகியோர் அவையோரின் அமோகமான பாராட்டுதல்களைப் பெற்றனர்.

நிகழ்ச்சியில் திரட்டப்பட்ட நிதி யுரேகா மக்கள் நூலகத்திற்கு அளிக்கப்பட உள்ளது. தரமான கல்வி அறிவு பெற்ற ஆண்களைத் தவிர குழந்தைகளோ பெண்மணிகளோ மற்ற இளம் பெண்களோ கிராமப்புற நூலகங்களை ஏறிட்டுக் கூடப் பார்ப்ப தில்லை. இதனால் இந்திய மேம்பாட்டு நிறுவனம் 'நூலக இயக்கம்' ஒன்றை ஆரம்பித்து அதனைக் கிராமப் புறங்களில் வலுப்படுத்த எண்ணியுள்ளது.

இதன் நோக்கம் தமிழகத்திலுள்ள 5000 கிராமங் களுக்கு குறைந்த விலையில், சுவையான, படிக்கத்தூண்டும் புத்தகங்களைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதாகும்.

ஒரு நூலகத்திற்கு ஓர் ஆண்டுக்கு 30 டாலர்கள் மட்டுமே தேவைப்படுகின்றது. தொண்டுள்ளம் கொண்டவர்கள் ஒரு நூலகத்திற்குத் தேவைப்படும் 30 டாலர் களைக் கொடுத்து ஒரு கிராமத்திற்கு உதவலாம். நிதி உதவி தவிர நூலகத்திற்குத் தேவைப்படும் புத்தகங்களுக்கான செய்தி சேகரிப்பிற்கு உதவும் வேறு வகையிலும் உதவலாம். இவ்வுதவி நூலக இயக்கத்திற்கு இணையற்ற நன்கொடையாகும்.

அன்பர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரிகள்: president@aidsfbay.org, aidchennai@gmail.com

ஆர்த்தி ரிஷி

© TamilOnline.com