லாஸ் ஏஞ்சலஸ் இந்தியன் மியூசிக் அகாதமி துவக்கம்
ஏப்ரல் 12, 2015 அன்று இசை, கலை, பண்பாட்டு ஆர்வலர்கள் பிரசன்னா மற்றும் முகுந்த் ஆகியோரின் முயற்சியால் லாஸ் ஏஞ்சலஸ் இந்தியன் மியூசிக் அகாதமி உருவாகியுள்ளது. இது லாப நோக்கின்றி, இசை, கலை ஆர்வலர்களை ஊக்குவிக்கும் சேவாதளமாகச் செயல்படும். மாலிபு இந்துக் கோயில் அறக்கட்டளையினர் இந்த அமைப்பின் ஆரம்ப நிகழ்வுக்கு ஆலயத்தில் இடம் தந்துதவினர்.

பிரசன்னா வரவேற்புரை நிகழ்த்த, இசையறிஞர்கள் முரளி கிருஷ்ணா, ரோஸ் முரளி கிருஷ்ணா தம்பதியினரின் மாணவி மருத்துவர் அம்ருதவர்ஷணி கடவுள் வாழ்த்து பாடினார். ரோஸ்-முரளி கிருஷ்ணா, இந்து-வரதன், ஆர்த்தி-மீனா, மீனா கடப்பா மற்றும் நாராயண பல்லவுர் ஆகியோர் குத்து விளக்கேற்றினர். ஆலய அர்ச்சகர்கள் நரசிம்மாசாரி பட்டர், கிருஷ்ணமாசாரி பட்டர் ஆகியோரின் மறையோதலுடன் நிகழ்ச்சி துவங்கியது.

துவக்க நிகழ்ச்சியாக மல்லாடி சகோதரர்கள் ஸ்ரீராம் பிரசாத் மற்றும் ரவிகுமார் இசைக்கச்சேரி நிகழ்த்தினர். எம்பார் கண்ணன் வயலினிலும், நெய்வேலி நாராயணன் மிருதங்கத்திலும் துணையாக இருந்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் டாக்டர் இந்து வரதன் கலைஞர்களை கௌரவித்தார். முகுந்த் நன்றி கூறினார்.

அடுத்த நிகழ்ச்சியாக மே 10 அன்று மாலிபு இந்துக் கோயிலில் டாக்டர் சௌம்யா கர்நாடக இசை வழங்கவுள்ளார். எம்பார் கண்ணன், நெய்வேலி நாராயணன் பக்கம் வாசிப்பர்

பிரசன்னா,
லாஸ் ஏஞ்சலஸ், கலிஃபோர்னியா

© TamilOnline.com