ஈஸ்வர் நாட்யாலயா ஆண்டுவிழா
ஏப்ரல் 14, 2015 அன்று டாலஸ் ஈஸ்வர் நாட்யாலயாவின் 4வது ஆண்டுவிழா, அலன் லைப்ரரி அரங்கில் நடைபெற்றது. ஃப்ரிஸ்கோவில் நான்கு ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் நாட்யாலயாவில் பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், ஒயிலாட்டம், பாங்க்ரா, கோலி, கர்பா, கரகம் உள்ளிட்ட பலவகை நடனங்களும் பயிற்றுவிக்கப் படுகின்றன. விழாவில் இவ்வகை 17 நடனங்கள் இடம்பெற்றன. பள்ளியின் 30 மாணவர்களும் பங்கேற்றனர்.

சிங்கம்-எலி நீதிக்கதைப் பாடலுக்குச் சிறுமியரின் நடனம் சிறப்பாக இருந்தது. திருப்புகழ், பாரதியார் பாடல்கள் உட்பட்ட பல தமிழ்ப்பாடல்களுக்கு நடனங்கள் அமைத்திருந்தது முக்கிய அம்சமாகும். சில தனிப்பாடல்களை தமிழகத்தில் இதற்கென இசையமைத்துப் பதிவுசெய்து தருவித்திருந்தனர். நாட்யாலயா நிறுவனர் குரு கல்பனா ரவிசங்கர் 3 வயதுமுதல் நடனம் பயின்று 8 வயதில் மேடையேறியவர். அழகப்பா பல்கலைக் கழகத்திலிருந்து பரத நாட்டியத்தில் பட்டயம் பெற்றுள்ளார். குச்சிப்புடி நடனத்தின் தரங்கம் கலையில் பயிற்சி பெற்றவர். பரதநாட்டியத்துடன் நாட்டுப்புற நடனங்களையும் அடுத்த தலைமுறைக்கு கற்றுக் கொடுக்கவே நாட்யாலயாவை நிறுவியதாகக் கூறுகிறார்.

சிறப்பு விருந்தினர் திருமதி. சாந்தி ராமரத்தினம் நிகழ்ச்சியைப் பாராட்டிப் பேசுகையில், கல்பனாவின் புருவம்கூட அபிநயிப்பதாகக் குறிப்பிட்டார். சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் திருமதி. விசாலாட்சி வேலு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். குரு கல்பனா அறக்கட்டளை மற்றும் தமிழ்ப் பள்ளி நிகழ்ச்சிகளுக்கு, குறுகிய காலத்தில் நடனம் அமைத்துத் தரும் சேவையைப் பாராட்டினார். கல்பனா ரவிசங்கர் நன்றி கூறினார்.

சின்னமணி,
ஃப்ரிஸ்கோ, டெக்சஸ்

© TamilOnline.com