ப்ளேனோ தமிழ்ப் பள்ளி ஆண்டுவிழா
ஏப்ரல் 18, 2015 அன்று ப்ளேனோ தமிழ்ப் பள்ளியின் 14ம் ஆண்டு விழா கார்லண்ட் ஆர்ட்ஸ் சென்டரில் நடைபெற்றது. பள்ளியில் பயிலும் 260 மாணவர்களும் நாடகம், நடனம், பாடல்கள் எனப் பலவாறாகத் தமது தமிழ்த் திறமைகளை வெளிப்படுத்தினர். மதியம் 2:30 முதல் 7:30 மணிக்குள் இளநிலை, முதுநிலை மாணவர்களின் விழாக்கள் தனித்தனியே நடத்தப்பட்டன

மிருகங்கள்போல் வேடமணிந்த மழலையர் உண்மையே முக்கியமானது என்று வலியுறுத்தும் ஒரு நாடகத்தை வழங்கினர். 'ஊருவிட்டு ஊருவந்து' நகைச்சுவை நாடகம் அரங்கத்தைச் சிரிப்பில் ஆழ்த்தியது. மாறிவரும் உணவுப் பழக்கங்களைச் சித்திரிக்கும் 'நாட்டாமை' நாடகம் மிகச்சிறப்பு. முதல் பகுதியில் சிறப்பு விருந்தினராக, தன்னார்வத் தொண்டர் அவயம் ரமணி பரிசுகளை வழங்கினார். பள்ளி நடத்திவரும் விசாலாட்சி வேலு, வேலு ராமன் மற்றும் தன்னார்வப் பணியாற்றும் ஆசிரியர்கள், தொண்டர்களைப் பாராட்டினார்.

விழாவின் இரண்டாம் பகுதியில் ப்ளேனோ கல்வி மாவட்ட அறங்காவலர் (Plano ISD Trustee) மிஸி பின்டர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, நினைவுப் பரிசுகள், கேடயங்கள் வழங்கிச் சிறப்புரை ஆற்றினார். 'இத்தனை பேர் ஆர்வத்துடன் தாய்மொழியைப் பயிற்றுவதும், கற்பிப்பதும் மிகவும் ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது" என்று அவர் கூறினார். பள்ளிக்குத் தேவையானவற்றை இயன்றவரை செய்துதரத் தயாராக இருப்பதாக உறுதியளித்தார். ராஜி பிரபாகர் வரவேற்புரை ஆற்றினார். ராஜ்–தீபா தம்பதியினர் தொகுத்து வழங்கினர். ஸ்ரீராம் விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார். ஹேமா நன்றியுரை கூறினார்.

சின்னமணி,
ப்ளேனோ, டெக்சஸ்

© TamilOnline.com