பரதநாட்டியம்: சுவாதி ரமேஷ்
ஏப்ரல் 25, 2015 அன்று மில்பிடாஸ் சாய் பரிவார் ஆலயத்தில் சுவாதி ரமேஷ் அவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டை ராக மல்லாரியுடன் நிகழ்ச்சி துவங்கியது. அடுத்து தேவி ஸ்லோகம் கன்னடத்தில் மிக உருக்கமாகப் பாடியதற்கேற்ப "பாக்யதலிகே, ஜயஜய ப்ருந்தாரி தேவதே தேவி" என்னுமிடத்தில் சிறந்த பாவத்தைக் கண்களால் காட்டியது அருமை. ஆதிசங்கரரின் சிவபஞ்சாக்ஷரிக்கு அருமையாக நிருத்யம், முகபாவம், கண்ணசைவுகளுடன் ஆடினார்.

ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் "மாதே மலயத்வஜ" எனும் வர்ணத்தில் கருத்துக்கேற்ப மாறி மாறி அபிநயித்து சிறந்த தாளக்கட்டுக்களுடன் ஆடினார். ஸ்வாதித் திருநாளின் "கலியோ குஞ்சனமோ" பஜன் பாடலும் ஆடலும் ரசிக்கத்தக்கவை. வாசுதேவாசார் கீர்த்தனையில் வில்லேந்திய ராமனைக் கண்முன் காட்டியவிதம் அற்புதம். ஊத்துக்காடு வேங்கடகவியின் "நின்றந்த மயில் ஒன்று" பாடலுக்குக் குழலூதும் கண்ணனை கனஜோராகச் சித்திரித்தார். சுமனேச ரஞ்சனி ராகத் தில்லானாவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

சுவாதி இந்தியாவில் குரு பத்மினி ராமச்சந்திரனிடமும், பிரபல புல்லாங்குழல் வித்வான் சஷாங்க் அவர்களின் மனைவி ஷிரிஷா சஷாங்க் அவர்களிடமும் பயின்றவர். விரிகுடாப் பகுதியின் சிறந்த நாட்டிய ஆசிரியைகளிடமும் பயிற்சி பெற்றவர். இந்த நிகழ்ச்சிமூலம் தமது குருநாதர்களுக்கு பெருமை தேடித் தந்துள்ளார் சுவாதி ரமேஷ்.

சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com