வைணவத் திருத்தலங்களில் ஆண்டு தோறும் நடைபெறும் தனிப்பெரும் விழா பிரும்மோத்ஸவம். விழாவின் முதல் நாள் த்வஜ ஆரோஹணம் (கொடியேற்றம்) எனப்படும். அதைத் தொடர்ந்து, மூன்று, ஐந்து, ஏழு அல்லது ஒன்பது நாட்களுக்கு வழிபாடு நடைபெறும். இந்தியாவில் திருப்பதியில் ஒன்பது நாட்கள் நடைபெறும் இவ்விழா, சான் ஃபிரான்சிஸ்கோ வளை குடாப் பகுதிக்கு அருகில் உள்ள லிவர்மோர் சிவா-விஷ்ணு கோவிலில் மூன்று நாட்கள் நடைபெற்றது.
கொடியேற்றத்தின் போது விஷ்ணுவின் கருடக்கொடி ஏற்றப்படுகிறது. இந்த வழிபாட்டில் கருடன், சுதர்ஸனர், விஷ்வாக் சேனர், விஷ்ணு, நரசிம்மர், ஸ்ரீராமர், பிரும்மா, திக்பாலகர்கள் போன்ற சர்வ தேவதைகளும் அழைக்கப்படுகின்றனர்.
அக்டோபர் 7, 2005 அன்று லிவர்மோர் கோவிலில் நடைபெற்ற வழிபாட்டுக்கு வயலின் கலைஞர் அனுராதா ஸ்ரீதர், மிருதங்கக் கலைஞர் ஸ்ரீராம் பிரும்மானந்தம் இருவரும் இணைந்து இசை அமைத்து, கோவில் பண்டிதர்களுடன் வழங்கியது தேவ கானமாக அமைந்திருந்தது.
பத்மப்ரியன் |