மிச்சிகன்: 'சரோவர்' இசைத்திருவிழா
2015 மே 29 முதல் 31ம் தேதிவரை, மிச்சிகன் கிரேட்லேக்ஸ் ஆராதனைக் கமிட்டியும் (GLAC), ஓக்லாந்து பல்கலைக்கழகமும் இணைந்து 'சரோவர் 2015' என்னும் இசைவிழாவை ஓக்லாந்து பல்கலைக்கழக வளாகத்தில் (Varner Hall, Oakland University, 2200 N Squirrel Rd, Rochester, MI 48309; தொலைபேசி: 248.370.2100) நடத்தவுள்ளனர். உலக அமைதிக்காக நடத்தப்படும் இவ்விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் GLAC தனது 30 வருடத்தையும், சரோவர் 5வது ஆண்டு நிறைவையும் கொண்டாடுகின்றன.

இவ்வாண்டின் சிறப்பம்சம் ஆராதனைக் கமிட்டியும் அரபு அமெரிக்க தேசிய மியூசியமும் இணைந்து வழங்கும் Divine Sounds of the Bamboo ஆகும். இதில் பல முன்னணி கர்நாடக இசைக்கலைஞர்களின் கச்சேரி, கதா காலட்சேபம், மேற்கத்திய/கர்நாடக இசைக்கலவை, சினிமாப் பாடல்கள் எனப் பலவகையான நிகழ்ச்சிகள் இடம்பெறும். கர்நாடக இசைக்கலைஞர்கள் திரு. டி.என்.சேஷகோபாலன், திரு. சஞ்சய் சுப்ரமணியம், திருமதி சாந்தலா சுப்ரமணியம், பரத் சுந்தர், Keytar எஸ். ராம், திருவாரூர் வைத்யநாதன், ராகவேந்திர ராவ் ஆகியோர் இதில் பங்கேற்பர். இவர்களோடு ஜெயா டி.வி. புகழ் 'ஹரியுடன் நான்' ரவிசங்கர் வருகிறார். ஓக்லாந்து பல்கலைக்கழக இசைக்குழுவும் இணைகிறது. இறுதியாக மிச்சிகன் நகர் இசை, நடனப் பள்ளி மாணவர்கள் பல்வேறு சங்கீத-நாட்டிய-நாடக நிகழ்ச்சிகளை வழங்குவார்கள். அறுசுவை உணவும் வழங்கப்படும். தவிர, இப்பகுதி வியாபாரிகள் விற்பனைக் கூடங்கள் அமைக்க உள்ளனர். அமெரிக்காவில் இந்நிகழ்ச்சிக்காக வழங்கப்படும் நன்கொடைக்கு வரிவிலக்கு உண்டு. மூன்று நாட்கள்

காலைமுதல் இரவுவரை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு: www.glacmichigan.com



சுபா கணபதி,
கேன்டன், மிச்சிகன்

© TamilOnline.com