டாலஸ்: மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக்கழக ஆண்டு விழா
மே 17, 2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00மணி முதல் 6.00 மணிவரை ப்ளேனோ 'சென்ட் சர்ச்' வளாகத்தில் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக்கழகம்' (Metroplex Tamil Academy) தனது முதலாவது ஆண்டுவிழாவைக் கொண்டாடவுள்ளது. மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத்தின் ஓர் அங்கமான இந்தக் கல்விக்கழகம் கலிஃபோர்னியா தமிழ் அகாடமியின் பாடத்திட்டத்தைப் பின்பற்றுகிறது. கல்வியாண்டு 2014-15ல் ஆலன் நகரில் ஆரம்பிக்கப்பட்ட முதல் பள்ளியில் 50 குழந்தைகள் பயில்கிறார்கள். பணியை விரிவாக்கும் நோக்கில் இவ்வருடம் டாலஸில் மர்ஃபி, ஃப்லவர்மவுண்டு, ஃப்ரிஸ்கோ என மேலும் மூன்று இடங்களில் பள்ளிகள் தொடங்குகின்றது. பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க விரும்புவோர் பார்க்கவேண்டிய வலைமனை: www.dfwmts.org

மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத் தலைவர் திருமதி. கீதா அருணாச்சலம் தலைமையில், சிறப்பு விருந்தினராக பாத்திமா கல்லூரி முன்னாள் துணைமுதல்வர் திருமதி. விசாலாட்சி சுப்ரமணியம் பங்கேற்கிறார். இவர் சென்னை கம்பன் கழகத்தின் 'தமிழ்ச்சுடர்', பாரதி யுவகேந்திரா வழங்கிய 'பாரதி புரஸ்கார்', கர்நாடகத் தமிழ்ச்சங்கத்தின் 'கண்ணதாசன் புகழ்க்காவலர்', சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் 'சேக்கிழார் விருது' எனப் பல விருதுகள் பெற்றவர்.

இவ்விழாவில் மாணவர்களின் இசை, நடனம், நாடகம் எனப் பல்சுவை கலைநிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றது. மேலும் ஏப்ரல் 12 அன்று பள்ளியில் நடந்த 'தமிழோடு விளையாடு' போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். அனைத்து மாணவர்களுக்கும் கலிஃபோர்னியா தமிழ்க்கல்விக் கழகத்தின் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com