சான் ஃபிரான்சிஸ்கோ பகுதியில் ரமலான் இஃப்தார் விருந்து
சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் வாழும் தமிழ் முஸ்லிம்கள் அமைப்பின் (USTMO) இரண்டாம் ஆண்டு இ·ப்தார் (நோன்பு திறக்கும் நிகழ்ச்சி), நூவர்க் சாந்தினி உணவகத்தில் அக்டோபர் 22, 2005 அன்று நடைபெற்றது. முதன் முறையாக இந்த ஆண்டு தென்றல் பதிப்பாளர் சி.கே.வெங்கட்ராமனும் ஆசிரியர் மணி மு.மணிவண்ணனும் விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானில் உலக முஸ்லிம்கள் பகல் முழுதும் நோன்பிருந்து இரவில் விழித்திருந்து, இறைவனைத் தொழுது, தாங்கள் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு வேண்டி, இறைவனின் நல்லருளைப் பெற முயல் வார்கள். தங்கள் சொத்துக்களிலிருந்து 2.5% ஜக்காத்தாக ஏழை எளியவர்களுக்குக் கொடுத்து மகிழ்வர்.

சுமார் 25 தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் இந்த இஃப்தார் விருந்தில் பங்கேற்றனர். தென்றல் வாசகர்கள் பலர் தென்றல் படைப்புகளைப் பற்றிச் சரமாரியாகக் கேள்விக் கணைகள் தொடுத்துத் தென்றல் ஆசிரியரோடு கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

சூரியனின் மறைந்ததும் நண்பர்கள் தொழுகையின் அழைப்பொலி கேட்டு பேரீச்சம்பழம் புசித்துத் தங்கள் நோன்பை முடித்தனர். தொழுகையை முடித்து இரவு உணவுக்குப் பின் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் களுள் ஒருவரான நிலாமுதீன் தமிழ்நாடு முஸ்லிம்கள் அமைப்பின் துவக்கம், நோக்கம், எதிர்காலத் திட்டங்கள் பற்றிப் பேசினார். நிகழ்ச்சியின் நிறைவில் $2000 ஜக்காத் நிதியாகத் திரட்டப் பட்டு அது தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நோன்புப் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடப் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

தமிழ்நாட்டின் வெவ்வேறு மூலைகளில் பிறந்து பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் அமெரிக்காவில் வாழ்ந்து வந்தாலும், தமிழ் மொழியால் இணைந்த இந்த நிகழ்ச்சி நண்பர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது.

அமைப்பைப் பற்றிய மேல் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரிகள்: nicenilam@gmail.com, umar_malick@yahoo.com

நிலாமுதீன்

© TamilOnline.com